Sunday, February 05, 2012

முதல் காதல்


மலர்கள் பூத்தூவும் மாலையிலே
எதிரில் நீ வந்தாய் சாலையிலே
விழிகள் கண்மூடி திறக்குமுன்னே
நீயென் வாழ்வினிலே !...

கைகள் கோர்த்து நாம் நடப்போமே
தனியாய் நான் மட்டும் பறப்பேனே
மழையில் ஒன்றாக நனைவோமே
குடைகள் இருந்தாலுமே !...

என்னை அறியாமலே
உயிர்க்காதல் உருவானதே
அதை சொல்ல நினைத்தாலுமே
என் பெண்மை தடுமாறுதே !...

முதல் முத்தம் பதியும் நேரம்
உயிர் மொத்தம் உறைந்தே போகும்
விழி சத்தம் கூச்சல் போட்டும்
இதழ் தேகமெங்கும் பரவும் !...

கருவிழியில் நானிட்ட மையும்
மெய்தீண்ட நீ சொன்ன பொய்யும்
இடையருகில் உன் விரல் நகரும்
அந்நேரம் மறந்து போகும் !...

தேகங்கள் சேராமல் மோகங்கள் தீராது
தேடல்கள் இல்லாமல் யூகங்கள் கூடாது
உன் வேகம் பாராமல் என் பெண்மை ஓயாது
மெய்யோடு தீ மூட்ட வா !...

இரவென்றும் விடியாத பகலொன்றை அறியாத
தனித்தீவில் நாம் மட்டும் நிலவுக்கு துணையாக
உன் தோளில் நானாட, என் காதில் நீ பாட
புதுகாதல் செய்வோமே வா !...

Monday, December 26, 2011

பிரிவென்னும் ஒரு சொல் !


பிரிவென்னும் ஒரு சொல்லின், அறியாத பொருளொன்று
உனை பிரிந்த ஒரு நாளில், முழுவதுமாய் புரிந்ததடி ...
விழி பேசும் மொழி ஒன்று, சிறுதுளியாய் விழுமென்று
துணை பேச நீயின்றி, தனியாக கண்டேனடி ...

நெடுநாட்கள் நான் மறந்த, நிலவோடு பேசுகிறேன்
தொடுவானம் வரை பறந்த, நினைவுகளை யோசிக்கிறேன்
குளிர்தென்றல் எனை தீண்ட, உன் சுவாசம் தேடுகிறேன்
நள்ளிரவில் தனியாக, உன் பெயரை பாடுகிறேன் ...

விரல் வரைந்த கோலங்கள், துணி மறந்த நேரங்கள்
போர்வைக்குள் இருவரும் போர் புரிந்த காலங்கள்
எனை வந்து கொல்லுதடி... என்னுயிரை மெல்லுதடி
தாலாட்டு முத்தமின்றி உயிர் பிரிந்து செல்லுதடி ...

பனி உறையும் நள்ளிரவும் தனிமையிலே தவிக்குதடி
உன் மூச்சு வெப்பத்தில் குளிர் காய துடிக்குதடி
அதிகாலை சூரியனும் மெதுவாக உதிக்குதடி
நம் வீட்டு ரோஜாக்கள் மொட்டு விட மறுக்குதடி...

சிறு உளியும் மலை பிளக்கும்
சிறு பிரிவும் உயிர் பிளக்கும்
பிரிவுற்று துயரடையா உறவொன்றை தந்து விடு
கடல் சேர்ந்த மழை நீராய் என்னுயிரில் நின்று விடு !...

காத்திருக்கிறேன் காதலுடன் !...

Sunday, October 30, 2011

நெடுஞ்சாலை இரவுகள் ...


விண்ணில் இருந்த தேவதை, மண்ணுக்கு வந்த நேரமோ
கண்ணன் என் மனதினில் பூங்கோதையின் ராகமோ
தன்னந்தனியே நிலவும் வானில் என்ன செய்யுமோ
உன்னைப் பிரிந்த வலியில் தேய்ந்தொழிந்து போகுமோ

ரயில் போகும் பாதையாய் நாமிருவர் செல்ல
கைகோர்க்கும் நேரத்தில் பூ மலரும் மெல்ல
உயிர் திருடும் முயற்சியில் என் கண்கள் வெல்ல
அதையுணர்ந்த கைகள் இடையணைத்து கொள்ள

கைதொடும் தூரத்தில் வெண்ணிலவு இருக்க
நான்தொடும் நேரத்தில் சொர்க்கமது திறக்க
வானவெளி வீதியில் நாமிருவர் மிதக்க
நட்சத்திர சாரலில் பூமிதனை மறக்க

நெடுஞ்சாலை இரவுகள் நம் காதல் சொல்லுதே
புலராத பொழுதுகள் நமைப் எழுப்பி செல்லுதே
தனிமையின் இனிமையில் இருவுயிர் குளிருதே
பனித்துளி ஒன்றிங்கே சூரியனை அணைத்ததே

உயிருள்ள சிற்பமாக,உறையட்டும் இந்த நொடி ...
பூந்தென்றல் வாசமாக, வீசட்டும் நம் காதல் நெடி ...
உயிரை வருடும் உணர்வினில் எல்லாம்
உயிர்த்திருப்போம் அது போதுமடி !...

Thursday, October 20, 2011

அணு - அதிசயம் - அற்புதம் - அபாயம் -- புத்தகவிமர்சனம்


"அணுவின் துகளை நெஞ்சில் வீசி, அருகில் நின்று அழகாய் சிரித்தாள்" - என் காதலியை பற்றி நான் எழுதிய ஒரு கவிதையின் தொடக்கம் இப்படி. ஆனால் அந்த கவிதை எழுதும் போது அணுவை பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் அணுகுண்டு, அணு உலை மட்டும் தான். அணுகுண்டு வெடிக்கும். அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளிப்படும். அவ்வளவு தான். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், அணுவை பற்றிய என் கருத்துக்கள் அனைத்தும் மூடநம்பிக்கைகளாக தெரிந்தன. ஆசிரியருக்கு நன்றி.

அணுக்களை பற்றி மிக அடிப்படையான விஷயத்தில் இருந்து ஆரம்பித்து, மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகள் வரை நம்மை அழைத்து செல்கிறார். மிக இயல்பான உரைநடையில் அறிவியலை திகட்டாமல் ஊட்டுகிறார். முதல் அத்தியாயத்திலேயே ரசவாதத்தை பற்றி விவாதித்து, அது ஏன் சாத்தியமில்லை என்பதை அணுக்களின் மொழியில் விளக்குகிறார்.

கதிரியக்கம், அணுபிளப்பு, அணுசேர்க்கை, அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு போன்றவற்றை பற்றி விளக்கும் போது, அவை உருவாக்கபட்ட காலநிலைகள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு, அரசியல் சூழ்நிலைகள் என ஒரு கதையை போல் அழகாக சொல்லி இருக்கிறார். அணுசேர்க்கை, அணுபிளப்பு ஆகியவற்றுக்கு தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கி விரிவாக விளக்குகிறார். அணுசேர்க்கை கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் சாத்தியமானால் உலகத்தின் மின்சாரத் தேவையை கதிரியக்க ஆபத்துக்கள் இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும் என்பது எனக்கு புதிய செய்தி. அணுக்கள் மட்டும் இல்லாமல், கடைசி சில அத்தியாயங்களில் சூரியன், நட்சத்திரம், அண்டவெளி, பொருள், எதிர்பொருள் என முழுவதையும் அழகாக விளக்குகிறார்.

இந்த புத்தகத்தில் ஒரே குறை. மிக நீளமான அத்தியாயங்கள். அளவை குறைத்து இருக்கலாம், அல்லது பல அத்தியாயங்களாக பிரித்து இருக்கலாம். அறிவியலில் ஆர்வம உள்ளவர்களுக்கு இது படிக்க வேண்டிய புத்தகம். அறிவியல் பற்றி தெரியாதவர்கள் இதை படித்தால், கண்டிப்பாக அறிவியலில் ஆர்வம வரும் என நம்புகிறேன்.

இந்த புத்தகத்தில் இருந்து பல புதிய அறிவியல் வார்த்தைகளை தமிழில் கற்றுக்கொண்டேன். அவற்றுள் சில.

ரசவாதம் - Alchemy
அணுபிளப்பு - Nuclear Fission
அணுசேர்க்கை - Nuclear Fusion
கதிரியக்கம் - Radio Activity
கதிரியக்க அணுச்சிதைவு - Radioactive Decay
கன நீர் - Heavy Water
நிலக்கரி தூசு - Fly Ash
அணு உலை - Reactor
ஈனுலை - Breeder Reactor

அணுவை பற்றிய ஆராய்ச்சிகள் மேலைநாடுகளில் தழைத்து வளர்ந்ததால் பெயர்கள் ஆங்கிலத்தில் இருப்பதில் வியப்பில்லை. என் மனதில் ஒரு கேள்வி. அத்தனை பெயர்களையும் தமிழ்ப்படுத்தலாமா?. அல்லது ஆங்கில வார்த்தைகளை அப்படியே அணைத்துக் கொள்ளலாமா ?

ஐசொடோப்பு - தமிழ் வார்த்தை என்ன?

இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்

Saturday, October 15, 2011

பூக்கள்



பூக்கள் சிரித்து முத்தமிடும்
பூக்கள் மெலிதாய் சத்தமிடும்
பூக்கள் காதலில் உளரும்
பூக்கள் மோதலில் அலறும

பூக்கள் கொதித்து எரியும்
பூக்கள் வெடித்து சிதறும்
பூக்கள் சிவந்து குளிரும்
பூக்கள் குளிர்ந்து மலரும்

பூக்கள் மீண்டும் சிரிக்கும் !...

பூக்களின் சாயத்தை
நடுசாமத்தில் வெளுத்தவளே ...
காமத்தின் ஆழத்தை
கண்மூடி காட்டியவளே ...

நரம்பெல்லாம் புடைக்க
தசையெல்லாம் இறுக்க
உடம்புக்குள் வெடிக்க
மூச்சங்கு அடைக்க
உயிருக்குள் வலிக்க
உதடுகள் சிரிக்க ...

நானறிந்த வித்தையின்
நானறியா பக்கத்தில்
நாம் எழுதிய ஓர் கவிதை
நாளும் சொல்லும் நம் உறவை !...
Related Posts Plugin for WordPress, Blogger...