பகுப்பு: களிற்றியானை நிரை
பாடல் எண்: 002
பாடியவர்: கபிலர்
திணை: குறிஞ்சி
துறை: பகற்குறிக்கட் செறிப்பறிவுறீஇத் தோழி வரைவு கடாயது.
கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை
யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொ டூழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேற
லறியா துண்ட கடுவ னயலது (5)
கறிவளர் சாந்த மேறல்செல் லாது
நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங்
குறியா வின்ப மெளிதி னின்மலைப்
பல்வேறு விலங்கு மெய்து நாட
குறித்த வின்ப நினக்கெவ னரிய (10)
வெறுத்த வேஎர் வேய்புரை பணைத்தோ
ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்
டிவளு மினைய ளாயிற் றந்தை
யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக்
கங்குல் வருதலு முரிமை பைம்புதல் (15)
வேங்கையு மொள்ளிணர் விரிந்தன
நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே. (17)
கோழ் இலை வாழை கோண் மிகு பெரும் குலை
ஊழ் உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடும் சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயல் அது (5)
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண் படுக்கும்
குறியா இன்பம் எளிது இன் நின் மலை
பல்வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய (10)
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை
அருங்கடி காவலர் சோர் பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை பைம் புதல் (15)
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர் கொண்டு அன்றே. (17)
கோழ் - வழுவழுப்பான; கோண் - கோணல், வளைந்த நிலை; குலை - காய்களின் தொகுப்பு; ஊழ் - முதிர்ந்த; உறு - மிகுதி; தீம் - இனிய; உண்ணுநர் - உண்பவர்; சாரல் - மலையின் பக்கம்; பலவின் - பலாவின், பலாப்பழத்தின்; சுளையொடு - பலாப்பழத்தின் சுளைகளோடு; ஊழ்படு - பழமை வாழ்ந்த; சுனை - மலை ஊற்று; விளைந்த - உண்டாகிய; தேறல் - மது; கடுவன் - ஆண் குரங்கு; அயல் - அருகில் உள்ள இடம்;
கறி - மிளகு, மிளகுக்கொடி என பொருள் கொள்க; சாந்தம் - சந்தனம், சந்தன மரம் என பொருள் கொள்க; நறு - நறுமணம்; வீ - மலர்; அடுக்கு - ஒழுங்கு, வரிசை; அத்து - எல்லை; குறியா - குறிப்பிடப்படாத, எதிர்பாராத என பொருள் கொள்க; எளிது - சுலபமானது; நின் - உனது; எய்தும் - அடையும்; நாட - நாடன், அந்த தேசத்தை சேர்ந்தவன்; குறித்த - குறிப்பிட்ட; நினக்கு - உனக்கு; எவன் - எப்படி; அரிய - அபூர்வமான;
வெறுத்த - மிகுதி; ஏஎர் - அழகு; வேய் - மூங்கில்; புரை - பெருமை; பணை - பருமை, பருத்த; நிறுப்ப - நிறுவுதல்; நில்லா - நிலைத்திராமை; நிறுப்ப நில்லா நெஞ்சமொடு - நிலையில்லாத, அலைபாயும் நெஞ்சத்தோடு; நின் மாட்டு - உன்னிடம்; இனையள் - இத்தகையவள்; ஆயின் - ஆனால்; அருங்கடி - அச்சம் தரக்கூடிய; சோர் - சோர்வு; பதன் - பக்குவம்; ஒற்றி - வேவு பார்த்தல்; கங்குல் - இரவு; உரியை - உரிமை உடையவன்; பைம் - பசுமை; புதல் - புதர் செடிகள்;
வேங்கை - வேங்கை மரம்; ஒள் - பிரகாசமான; இணர் - பூங்கொத்து; விரி - மலர்தல்; திங்கள் - நிலா; ஊர் - சந்திரன், சூரியனை சுற்றி தெரியும் ஒரு வட்டம். மழை வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் காற்றில் ஈரப்பதம் மிகுந்து இருக்கும். அப்போது காற்றில் உள்ள சிறு துளிகள், சந்திரனின் ஒளியை சிதறடிப்பதனால் தோன்றும் வானவில் போன்ற ஒரு வட்டம்;
கோழ் இலை வாழை கோண் மிகு பெரும் குலை ஊழ் உறு தீம் கனி
வழுவழுப்பான இலைகளையுடைய வாழைமரத்தின் வளைந்த பெரிய வாழைத்தாரில் உள்ள கனிந்த மிக இனிமையான வாழைப்பழங்களும்
உண்ணுநர் தடுத்த சாரல் பலவின் சுளையொடு
மலைச்சாரலில் உள்ள பலாப்பழத்தின் சுவை, அதனை உண்பவர்களை மேலும் உண்ண முடியாதபடி திகட்டச்செய்யும். அத்தகைய பலாச்சுளைளும்
ஊழ்படு பாறை நெடும் சுனை விளைந்த தேறல்
பழம்பெரும் பாறையின் இடையில் உள்ள நீர்த்தேக்கத்தில் விழுந்து, ஊறி, அந்த நீரினை மதுவாக மாற்றி இருக்கும்
அறியாது உண்ட கடுவன்
அந்த நீரினை மதுவென அறியாது உண்ட ஒரு ஆண் குரங்கானது
அயல் அது கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
அருகில் உள்ள மிளகுக்கொடிகள் படர்ந்த சந்தன மரத்தில் ஏறாமல்
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண் படுக்கும்
உதிர்ந்த நறுமணமிக்க மலர்களால் ஆன மலர்ப்படுக்கையில் படுத்து மகிழ்ந்து கண்ணுறங்கும்
குறியா இன்பம் எளிது இன் நின் மலை பல்வேறு விலங்கும் எய்தும் நாட
இத்தகைய எதிர்பாராத இன்பங்களை பல்வேறு விலங்குகளும் அடைந்து மகிழும் மலை நாட்டைச் சேர்ந்தவனே
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய
நீ எதிர்நோக்கும் இன்பம் அடைவது உனக்கு எப்படி அரியதாகும்?
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்
மிகுந்த அழகுடைய மூங்கிலைப் போன்ற பெருத்த தோள்களையுடைய பெருமை உடையவளாக
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு
நிலையில்லாமல் உன்னை நோக்கி அலைபாயும் நெஞ்சத்தை உடையவளாக
இவளும் இனையள் ஆயின்
இவள் இருப்பதால்
தந்தை அருங்கடி காவலர்
இவள் தந்தையிடம் இருக்கும் அச்சம் தரக்கூடிய காவலர்கள்
சோர் பதன் ஒற்றி
சோர்ந்திருக்கும் நேரத்தை பக்குவமாய் அறிந்து
கங்குல் வருதலும் உரியை
இரவு நேரத்தில் வந்து இவளை சந்திக்கும் உரிமை உடையவன் ஆகிறாய்.
பைம் புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
பசுமையான புதர்கள் சூழ்ந்திருக்கும் வேங்கை மரத்தின் பிரகாசமான மலர்கள் கொத்துக் கொத்தாய் மலர்ந்துள்ளன.
நெடு வெண் திங்களும் ஊர் கொண்டு அன்றே.
பெரிய வெண்மையான சந்திரனை சுற்றி ஓர் ஒளிவட்டம் தோன்றியுள்ளது.
“இரகசியமாய் தலைவியுடன் கூடி குலாவி காதல் செய்தது போதும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட வேலையை (மணமுடித்தல்) பார்” - இது தான் தலைவி தன் தோழி மூலம் தலைவனுக்கு சொல்ல விழைந்த செய்தி.
கபிலர் இயற்றிய இந்த பாடலில், தலைவி சொல்ல வந்த கருத்தோடு, குறிஞ்சி நிலத்தில் வளரும் மரங்கள், அதன் செழுமை, அங்கு வாழும் விலங்குகளின் நிலை, அக்கால இளம்பெண்களின் உடலமைப்பு, காதல் செய்யும் நேரம், பெண்ணை பெற்ற தந்தைகளின் பொதுவான போக்கு, அவர்களிடம் வேலை செய்யும் காவலர்கள், அறுவடையை ஒற்றி செய்யப்படும் திருமணங்கள், மழைக்கு முன் தெரியும் இயற்கை குறியீடுகள், குறி சொல்லும் பாங்கு போன்ற பல விடயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. அவை பாடலின் போக்குடன் மிக இயல்பாக புனையப்பட்டு இருக்கிறது.
இப்பாடலின் மற்றுமொரு சிறப்பு, இதன் உள்ளுறை உவமம். உள்ளுறை உவமம் என்பது பாடலின் வெளிப்படையான பொருளுடன், மற்றுமொரு பொருள் உள்ளுக்குள் மறைந்திருக்கும். மேலோட்டமாக படித்தால் உணர முடியாது. ஆழ்ந்து படிக்கும்போது புரியும்.
மதுவென அறியாது குடித்த ஆண் குரங்கானது, மரத்தில் ஏறாமல் மலர் படுக்கையில் படுத்து உறங்குவது போல, காதல் மயக்கத்தில் உள்ள தலைவன், மணமுடிக்க தேவையான வேலைகளை பார்க்காமல், தலைவியுடன் கூடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறான். தலைவனை ஆண் குரங்கோடு ஒப்பிட்டு, அதனை போல் இராதே என சொல்வது மிக பொருத்தமான உவமை.
உணர்ந்த பின், ஒரு சிறு புன்முறுவலை வரவழைக்கும் பாடல்.
முகப்பு > தொகுப்புகள் > அகநானூறு