அகநானூறு - களிற்றியானை நிரை - வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்

28 செப்டம்பர் 2018

முகப்பு > தொகுப்புகள் > அகநானூறு

காலம்: சங்க காலம் (கி.மு 300 - கி.பி 300)
தொகுப்பு: எட்டுத்தொகை
நூல்: அகநானூறு (நெடுந்தொகை)
பாவகை: ஆசிரியப்பா
பாடியோர்: நூற்று நாற்பத்தைவர்
தொகுத்தவர்: உருத்திரசன்மன்
தொகுப்பித்த மன்னன்: பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

பகுப்பு: களிற்றியானை நிரை

பாடல் எண்: 001
பாடியவர்: மாமூலனார்
திணை: பாலை
துறை: பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழ
லுருவக் குதிரை மழவ ரோட்டிய
முருக னற்போர் நெடுவே ளாவி
யறுகோட்டி யானைப் பொதினி யாங்கட்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய (5)

கற்போற் பிரியல மென்ற சொற்றா
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேய்மருள் பணைத்தோ ணெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக
வழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலி (10)

னிழறேய்ந் துலறிய மரத்த வறைகாய்
பறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தலி
னுகுநெற் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குந ரின்மையின் வௌவுநர் மடியச்
சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை (15)

நாரின் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி யெடுப்ப வாருற்
றுடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன்
கடல்போற் றோன்றல காடிறந் தோரே. (19)

படி 1: சொற்களை பிரித்து எழுதுதல்

வண்டு படத்த தைந்த கண்ணி ஒண் கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்
சிறு கார் ஓடு அன் பயின் ஓடு சேர்த்து இய (5)

கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு
பொலம் கலம் வெறுக்கை தருமார் நிலம் பக
அழல் போல் வெங்கதிர் பைது அற தெறுதல் இன் (10)

நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர் பைஞ்சுனை ஆம் அற புலர்தல் இன்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம் புல் என்ற ஆற்ற அலங்கு சினை (15)

நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று
உடை திரை பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல் அ காடு இறந்தோரே. (19)

படி 2: சொற்களின் பொருள் அறிதல்

வண்டு - மலர்களில் தேனெடுக்கும் பூச்சியினம்; படத்தல் - ஒலி உண்டாதல். வண்டுகள் உண்டாக்கும் ஒலி; தைந்த - செறிந்து மலர்ந்த; கண்ணி - பூமாலை; ஒண் - சிறந்த; கழல் - வீரர்கள் காலில் அணியும் வளையம், தண்டை; உரு - அச்சம்; உருவக் குதிரை - அச்சம் தரக்கூடிய குதிரை; மழவர் - மழநாட்டில் வாழ்ந்த மழவர் குடிமக்கள்; ஓட்டிய - விரட்டிய; முருகன் - குறிஞ்சி தினை கடவுள்; நற்போர் - தருமநெறி தவறாத போர்; நெடுவேள் ஆவி - சங்ககாலத்து மன்னன்; அறு - அறுத்தல்; கோடு - யானையின் பல், தந்தம்; பொதினி - இக்காலத்தில் பழனி என்று அழைக்கப்படும் ஊர்; ஆங்கண் - அவ்விடத்து; சிறு - சிறிய, சிறுவர்; கார் - கடுங்கரி; ஓடு - உடன் எனும் பொருளில் வரும்; அன் - இடைச்சொல், ஒரே தன்மையுடைய பொருளின் கூட்டம் எனும் பொருளில் வரும்; பயின் - பிசின், ஒட்டுந்தன்மை உள்ள பொருள்; இய - இயை;

பிரியலம் - பிரி + அல் + அம். பிரி - விட்டு விலகு, அல் - எதிர்மறை நிலை, அம் - சாரியை. பிரியாமல் இருப்போம் என பொருள்படும்; கொல் - இடைச்சொல், ஐயத்தை வெளிப்படுத்துவது. ஓகாரம் சேர்த்து “கொல்லோ” என்றும் எழுதலாம்; வேய் - மூங்கில்; மருள் - மயக்கம்; பணை - பருமை, பருத்த; பணைத்தோள் - பெரிய தோள்; நெகிழ - மெலிய; சேய் - தொலைவு; சேய்நாடு - தொலைவில் உள்ள நாடு; பொலம் - பொன்; கலம் - அணிகலன்; வெறுக்கை - செல்வம்; தருமார் - தரும்பொருட்டு; பக - பிளக்க; அழல் - நெருப்பு; வெங்கதிர் - வெம்மையான கதிர்களையுடைய சூரியன்; பைது - பசுமை; அற - இல்லாமல்; தெறுதல் - சுடுதல், அழித்தல்;

தேய்ந்து - சுருங்க; உலறிய - காய்ந்த; அறை - பாறை; காய்பு - காய்ந்த; அறுநீர் - மாசற்ற நீர், சுத்தமான நீர்; பை - பசுமை; இளமை; சுனை - நீர்நிலை, மலையூற்று; பைஞ்சுனை - பசுமையான நீரூற்று; ஆம் - நீர், ஈரம்; அற - முழுவதும்; புலர்தல் - காய்ந்து உலர்தல்; உகு - சிந்துதல்; வெம்மை - வெப்பம்; யாவரும் - அனைவரும்; வழங்குநர் - கொடுப்பவர்; இன்மையின் - இல்லாமை; வௌவுநர் - வழிப்பறி செய்பவர்; மடிய - இறக்க; சுரம் - பாலைநிலம்; சுரம்புல் - பாலைநிலத்தில் வளரும் புல்; ஆற்ற - மிகுந்த; அலங்கு - அசைதல்; சினை - மரக்கிளை;

நார் - மட்டையின் நார்; நவிரல் - மரவகை; வான் - அழகு; சூரல் - சுழற்றி அடித்தல்; கடுவளி - பெருங்காற்று; எடுப்ப - எடுத்தல், எழுப்புதல்; ஆர் - ஆர் என்னும் உரிச்சொல் மிகுதியை உணர்த்தும்; உற்று - கூர்ந்து; உடை - நொறுங்கு; திரை - அலை; பிதிர்வு - மகரந்தம், பூந்தாது; பொங்க - கொதிக்க; தோன்றல் - தோற்றம் தருதல்; - சுட்டெழுத்து, அந்த என பொருள் கொள்ளலாம்; காடு - வனம்; இறத்தல் - நீங்குதல்;

படி 3: பாடலின் கருத்தை புரிந்து கொள்ளுதல்

வண்டு படத்த தைந்த கண்ணி

வண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டு மொய்க்கக்கூடிய மலர்ந்த பூக்களால் ஆன மாலைகளையும்

ஒண் கழல் உருவக் குதிரை மழவர்

சிறந்த தண்டைகளையும் காலில் அணிந்துகொண்டு, பார்த்தாலே பயம் தரக்கூடிய வலிமையான குதிரைகளில் பயணம் செய்யும் மழநாட்டில் வாழ்ந்த மழவர் வீரர்களை

ஓட்டிய முருகன் நற்போர் நெடுவேள் ஆவி

போரில் தோற்கடித்து விரட்டிய, குறிஞ்சி கடவுளான முருகனை போல் தருமநெறி தவறாமல் போர் செய்யும் மன்னன் நெடுவேள் ஆவியின்

அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்

அறுத்து அலங்கரிக்கப்பட்ட தந்தங்களை உடைய யானைகள் மிகுந்திருக்கும் பொதினி (தற்போதைய பழனி) என்னும் ஊரில் உள்ள

சிறு கார் ஓடு அன் பயின் ஓடு சேர்த்து இய கல்

சங்ககாலத்தில் பொதினி மலை வைரங்களை பட்டை தீட்டும் தொழிலுக்கு பிரபலமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சொற்றொடர் ஒரு நுட்பமான, வைரங்களை பட்டைதீட்டும் கல் தயாரிப்பு முறையை விவரிக்கும் சொற்றொடர். கார் - கடுங்கரி, மலைகளில் கிடைக்கும் ஒரு வகையான கல். பயின் - பிசின், ஒட்டுந்தன்மை உள்ள பொருள். சேர்த்திய கல் - சேர்த்து + இய + கல், சேர்த்து இயைத்த கல். உருவாக்கியபின் இதிலிருந்து கல்லையும் பிசினையும் பிரிக்க முடியாது.

அதாவது மலைகளில் கிடைக்கும் ஒருவிதமான கற்பொடியுடன், இறுகும் தன்மையுள்ள ஒரு விதமான பிசினை சேர்த்து, சூளையில் செய்த கல். இதில் பொடித்த கல் என்று நேரிடையாக குறிப்பிடப்படவில்லை. பெரிய கற்களின் மேல் பிசினை தடவத்தான் முடியும். ஆனால் கற்பொடியுடன் பிசினை கலக்க முடியும். சேர்த்து இயைத்த கல் என்று குறிப்பிடுவதால் அது பொடித்த கல் என உணர்ந்து கொள்ளலாம். அதே போல், சூளையில் வேகவைப்பதும் நேரிடையாக குறிப்பிடப்படவில்லை. அந்த காலத்தில் மனிதனால் செய்யப்பட்ட கடினமான பொருட்கள் அனைத்தும் நெருப்பின் துணை கொண்டே செய்யப்பட்டுள்ளன. அந்த அறிவின்படி இதை உணர்ந்துகொள்ளலாம்.

மிக நுட்பமான ஒரு தயாரிப்பு முறையை ஒரே வரியில் மிக மிக அழாகாக விளக்கியுள்ளார் மாமூலனார்.

கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி

அந்த “கல் போல் எப்போதும் உன்னை பிரியமாட்டேன்” என்று அவர் சொன்ன சொல்லை மறந்துவிட்டாரோ தோழி?.

தன்னை பிரிந்து சென்ற காதலரை பற்றி காதலி தன் தோழியிடம் புலம்புகிறாள்.

சிறந்த வேய் மருள் பணை தோள் நெகிழ

பார்ப்பவர்கள் “இது மூங்கிலோ?” என மயக்கங்கொள்ளும் என்னுடைய பெரிய தோள்களும் மெலிந்து போகுமாறு

சேய் நாட்டு பொலம் கலம் வெறுக்கை தருமார்

தொலைவில் உள்ள நாட்டுக்கு சென்று, எனக்காக பொன்னும் நகைகளும் செல்வமும் ஈட்டி வருவதற்காக

நிலம் பக அழல் போல் வெங்கதிர் பைது அற தெறுதல் இன்

நெருப்பை போல வெப்பம் தரக்கூடிய சூரியன், நிலம் வறண்டு பிளக்குமாறு, கொஞ்சம் கூட பசுமையை விட்டு வைக்காமல் சுட்டு எரித்ததால்

நிழல் தேய்ந்து உலறிய மரத்த

தன்னுடைய நிழல் கூட இல்லாமல் போகுமளவுக்கு காய்ந்து போன மரங்களும்

அறை காய்பு அறு நீர் பைஞ்சுனை ஆம் அற புலர்தல் இன்

காய்ந்து போன பாறைகளும், சுத்தமான நீரினை உடைய பசுமையான நீரூற்றுக்களும், துளி கூட ஈரம் இல்லாத அளவுக்கு காய்ந்து உலர்ந்து இருக்க

உகு நெல் பொரியும் வெம்மை

தரையில் சிந்திய நெல் பொங்கி பொரியாக கூடிய அளவுக்கு வெப்பம் இருப்பதால்

யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய

வழிப்போக்கர்கள் யாரும் இல்லாததால் வருமானம் இன்றி வழிப்பறி கொள்ளையர் செத்து மடியக்கூடிய

சுரம் புல் என்ற ஆற்ற

சுரம்புல் என்கிற பாலை நிலத்தில் மட்டும் வளரும் ஒருவகை புற்கள் நிறைந்த பாலை நிலத்தில்

அலங்கு சினை நார் இல் முருங்கை நவிரல் வான் பூ

நாரில்லாத முருங்கை மரத்தின் அசைகின்ற கிளைகளில் உள்ள வெண்ணிற பூக்களை

சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று

கடுமையான காற்று எடுத்து சுழற்றி அடிப்பதை பார்க்கும் போது

உடை திரை பிதிர்வின் பொங்கி முன்

அந்த பூக்களில் இருந்து சிதறிய மகரந்தங்களும் வெப்பத்தில் கொதித்து, காற்றில் பறப்பது, கரையில் மோதி உடையும் அலை போல இருப்பதால்

கடல் போல் தோன்றல் அ காடு இறந்தோரே

அந்த கொடுமையான பாலைவனக்காடு கடல் போல் தோற்றமளிக்கிறது. அவர் அந்த காட்டையும் கடந்து சென்றாரே, தோழி என தன் காதலர் தன்னை பிரிந்து செல்லும் இடத்தை பற்றி சொல்கிறாள் காதலி.

படி 4: பாடலை பற்றிய என் கருத்துக்கள்

இது பாலை தினையை பற்றிய பாடல். ஆனால் பாடலின் முதல் பகுதி குறிஞ்சித்திணையை விவரிக்கிறது. பாடலின் பெரும்பகுதி பாலைத்திணையை பற்றி இருப்பதால் இது பாலைத்திணையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறன்.

மாமூலனாரிடம் எனக்கு மிகவும் பிடித்தது - தான் சொல்ல வந்த கருத்தை மட்டும் சொல்லாமல், அதற்குத் தொடர்புடைய மற்ற நிகழ்வுகளையும் அழகாக விவரிப்பதன் மூலம் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை நம் கண்முன்னே நிறுத்துகிறார்.

உதாரணத்திற்கு, காதலன் காதலியிடம் “உன்னை பிரிய மாட்டேன்” என்று சொல்கிறான். இதுதான் கருத்து. இதை நேரிடையாக சொல்லலாம். ஆனால் மாமூலனாரின் பாணியை கவனியுங்கள்.

நான் உன்னை பிரிய மாட்டேன்.

எப்படி பிரிய மாட்டேன்?

சாணைக்கல்லில் இருந்து எப்படி கல்லையும் பிசினையும் பிரிக்க முடியாதோ அதைப் போல் நான் உன்னை பிரிய மாட்டேன்.

சாணைக்கல் எங்கு பயன்படுத்தப்படுகிறது?

வைரம் தீட்டும் தொழிலுக்கு.

வைரம் தீட்டும் தொழில் எங்கு நடைபெறுகிறது?

பொதினி மலையில்.

பொதினி மலையின் சிறப்பு என்ன?

அலங்கரிக்கப்பட்ட தந்தங்களையுடைய யானைகள் மிகுந்த மலை.

அந்த யானைகள் யாருடையவை?

மன்னன் நெடுவேல் ஆவியின் யானைகள்.

மன்னன் நெடுவேள் ஆவி எப்படிப்பட்டவன்?

குறிஞ்சித்திணை கடவுள் முருகனைப் போல் தர்ம நெறி தவறாமல் போர் புரிபவன்.

அப்படி என்ன போர் புரிந்தான்?

மழநாட்டை சேர்ந்த மழவர்களை போரில் விரட்டியடித்தான்.

யார் அந்த மழவர்கள்?

அச்சுறுத்தக்கூடிய வலிமையான குதிரைகளில் பயணம் செய்பவர்கள். கால்களில் தண்டை அணிந்தவர்கள். வண்டுகள் மொய்க்கும் மலர்ந்த பூக்களால் ஆன மாலைகளை அணிந்தவர்கள்.

பார்த்தீர்களா? சொல்ல வந்த கருத்து மட்டுமல்லாமல், அதைச் சுற்றி நடைபெற்ற நிகழ்வுகளையும், நடைபெற்ற இடத்தையும், அந்த இடத்தை ஆண்ட மன்னனையும், வாழ்ந்த மக்களையும் பற்றி ஒரு ஒரு தெளிவான ஒரு பார்வை நமக்கு முன் விரிகிறது.

இந்தப் பாடலின் இரண்டாம் பகுதியாக இருக்கும் பாலைத் திணையைப் பற்றிய குறிப்பும் இத்தகையதே.

“அவர் என்னை பிரிந்து அந்தக் கொடுமையான காட்டை தாண்டி பொருள் சேர்க்க சென்றார்.”

இதுதான் அவர் சொல்ல விழைந்த கருத்து. ஆனால் அந்த பாலைநிலத்தை பற்றி அவர் விவரித்த போது பாலைநிலத்துக்கு ஒரு நடைபயணம் போய் வந்த அனுபவம் நமக்கு கிடைக்கிறது.

குறிப்புகள்

முகப்பு > தொகுப்புகள் > அகநானூறு

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.