அகநானூறு - கடவுள் வாழ்த்து - கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்

21 செப்டம்பர் 2018

முகப்பு > தொகுப்புகள் > அகநானூறு

காலம்: சங்க காலம் (கி.மு 300 - கி.பி 300)
தொகுப்பு: எட்டுத்தொகை
நூல்: அகநானூறு (நெடுந்தொகை)
பாவகை: ஆசிரியப்பா
பாடியோர்: நூற்று நாற்பத்தைவர்
தொகுத்தவர்: உருத்திரசன்மன்
தொகுப்பித்த மன்னன்: பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

பாடல் எண்: 000 - கடவுள் வாழ்த்து
பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
திணை: பாடாண்
துறை: பாடாண் திணையினது வகை எட்டனுள் ஒன்றாகிய கடவுள் வாழ்த்து வகை என்க.

கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பி னஃதே மையி னுண்ஞா
ணுதல திமையா நாட்ட மிகலட்டுக்
கையது கணிச்சியொடு மழுவே மூவாய் (5)

வேலு முண்டத் தோலா தோற்கே
யூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே
செவ்வா னன்ன மேனி யவ்வா
னிலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்
றெரியகைந் தன்ன வவிர்ந்துவிளங்கு புரிசடை (10)

முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி
மூவா வமரரு முனிவரும் பிறரும்
யாவரு மறியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமா னுரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன் (15)

றாவி றாணிழற் றவிர்ந்தன்றா லுலகே. (16)

படி 1: சொற்களை பிரித்து எழுதுதல்

கார் விரி கொன்றை பொன் ஏர் புதுமலர்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்
நுதல் அது இமையா நாட்டம் இகல் இட்டு
கை அது கணிச்சியோடு மழுவே மூவாய் (5)

வேலும் உண்டு அத் தோலாது ஒற்கே
ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே
செவ்வான் அன்ன மேனி அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை (10)

முதிரா திங்களொடு சுடரும் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியா தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் (15)

தா இல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே. (16)

படி 2: சொற்களின் பொருள் அறிதல்

கார் - மழைக்காலம்; விரி - மலர்தல்; கொன்றை - மஞ்சள் நிற பூக்களை உடைய மரம்; பொன் - தங்கம்; ஏர் - பொலிவு; புதுமலர் - புதிதாக பூத்த மலர்; தாரன் - உடையவன்; மாலையன் - மாலையை உடையவன்; மலைந்த - சுமந்த; கண்ணியன் - வேடன்; மார்பின் அஃதே - மார்பின் இடையே; மை - குற்றம்; இல் - இன்மை; நுண் - நுட்பமான; ஞாண் - கயிறு; நுதல் - நெற்றி; இமையா - இமைக்காத; நாட்டம் - கண்; இகல் - பகை; இட்டு - சிறுமை, அழிக்கும் என பொருள் கொள்க; கணிச்சி - குந்தாலி, மண்வெட்டி, தரையை குத்தி தோண்டும் கருவி; மழு - கோடாலி, மரத்தை பிளக்கும் கருவி; மூவாய் வேல் - மூன்று வாய்களை உடைய திரிசூலம்;

தோலாது - தோல்வியடையாது; ஒற்கே - தளராது; ஊர்ந்தது - ஏறி சென்றது; ஏறு - எருது; சேர்ந்தோள் - சேர்ந்தவள்; உமை - பார்வதி; செவ்வான் - செந்நிற வானம்; அன்ன - அத்தன்மையானவை; அவ்வான் - அந்த வானம்; இலங்கு - ஒளிசெய்; பிறை - இளஞ்சந்திரன்; விலங்கு - குறுக்கானது; வால் - வெண்மை; வை - கூர்மை; எயிறு - பல்; ஏரி - பிரகாசம்; அகைந்து - கொழுந்து விட்டு; அவிர் - கண்களை கூசவைக்காமல், கண்ணை கவரும் ஒளியுடைய; புரிசடை - திரண்டு சுருண்ட சடை;

முதிரா திங்கள் - முதிராத சந்திரன், இளமையான சந்திரன்; சுடர் - சூரியன்; சென்னி - சிறப்பு; மூவா - மூப்பில்லாதவர்; அமரர் - வானில் உள்ளோர்; தொல் - பழைய; முறை - பிறப்பு; மரபு - பாரம்பரியம்; வரி - கோடு; கிளர் - மிகுதல்; வயமான் - புலி; உரிவை - தோல்; தைஇய - இழைத்த; யாழ் - வீணை போன்ற பண்டைய தமிழரின் இசைக்கருவி; கெழு - பொருந்து; மணி - கருமை; மிடறு - தொண்டை, கழுத்து; அந்தணன் = அம் + தண் + அன், அம் - அழகு, தண் - அருள், அன் - ஆண்பால் வினைவிகுதி, அழகும் அருளும் உடைய ஆண்;

தா - கேடு; இல் - இல்லாத; தாள் - கால்; தவிர்ந்து - தவிர்த்தல்; அன்று - மாறுபாடு; தவிர்ந்தன்று - தவிர்க்காமல் இருத்தல், சேர்ந்து இருத்தல்; ஆல் - வியப்பு; உலகு - உலகம்.

படி 3: பாடலின் கருத்தை புரிந்து கொள்ளுதல்

கார் விரி கொன்றை பொன் ஏர் புதுமலர்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்

மழைக்காலத்தில் புதிதாக பூத்த, தங்கம் போல் ஜொலிக்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்களால் ஆன மாலைகளை அணிந்த வேடன்.

மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்

மார்பினில் குற்றமற்ற நுட்பமான கயிறு. தூய்மையான கயிறு ஒன்றை மார்பில் அணிந்திருக்கிறார் என்று பொருள் கொள்க.

மார்பில் அணியும் இந்த கயிருக்கு வேறு தமிழ் பெயர்கள் உண்டா என தெரியவில்லை. அம்புகளை எடுத்து செல்லும் அம்பறாத் தூணியில் இருக்கும் கயிறாக இருக்கலாம்.

சில உரையாசிரியர்கள் இதை பிராமணர்கள் அணியும் பூநூல் என்று சொல்கிறார்கள். சங்க காலத் தமிழர் சமூகத்தில் சைவமும் (சிவநெறி), வைணவமும் (திருமால்நெறி) மிக முக்கியமான வழிபாட்டு முறைகளாக விளங்கின. சங்கம் மருவிய களப்பிரர் காலத்தில் சமணமும் பௌத்தமும் செல்வாக்குடன் விளங்கின. பல நூற்றாண்டுகள், இந்த மதங்களுக்கு இடையே போட்டியும், வன்முறையும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த காலகட்டங்களில் தற்போது அறியப்படுகிற இந்துமதம் என்ற ஒன்று உருவாகவே இல்லை. இதனால், சங்க காலத்து கடவுளான சிவன் மார்பில் அணிந்த கயிறு, பூநூல் என்பது அறிவுக்கொவ்வாத கற்பனை.

ஒருவேளை, சங்க காலத்தில் அனைத்து குலத்தவர்களும் அணிந்த இந்த கயிறு, பிற்காலத்தில் பிராமண குலத்தை சேர்ந்தவர் மட்டும் அணியும் கயிறாக (பூநூல்) மாற்றப்பட்டதோ?. தெரிந்தவர்கள் சொல்லவும்.

நுதல் அது இமையா நாட்டம்

அவன் நெற்றியில் இமைக்காத கண்.

இகல் இட்டு கை அது கணிச்சியோடு மழுவே மூவாய்
வேலும் உண்டு அத் தோலாது ஒற்கே

கைகளில் மண்வெட்டி, கோடாலி, திரிசூலம் ஆகியவற்றைக் கொண்டு தளராது தோல்வி அடையாது பகையினை அழித்தவன்.

ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே

எருதின் மேலேறி பயணம் செய்பவன். அவனோடு சேர்ந்திருப்பவள் உமை எனும் பெயருடையவள்.

செவ்வான் அன்ன மேனி அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று

செந்நிற வானம் போன்ற மேனியை உடையவன். அந்த வானத்தில் பிரகாசமாய் இருக்கும் இளம் சந்திரனைப் போன்று கூரிய வெண்மையான பற்களை உடையவன்.

எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை

கண்களை கூசவைக்காமல், கண்ணை கவரும் வகையில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போல் திரண்டு சுருண்ட சடையினை உடையவன்.

முதிரா திங்களொடு சுடரும் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியா தொல் முறை மரபின்

முதிராத சந்திரனும் (இளமையான சந்திரன் எனக் பொருள் கொள்க), சிறப்புமிக்க சூரியனும், மூப்பு என்பதை அறியாத வானோர்களும், முனிவர்களும், மற்ற எவரும் அறியாத பழமையான பிறப்பினை உடையவன். நமக்கு தெரிந்த, தெரியாத அனைத்திற்கும் முன்பே உருவானவன். வள்ளுவன் குறிப்பிடும் ஆதி பகவன் இவனென கொள்ளலாம்.

வரி கிளர் வயமான் உரிவை தைஇய

கோடுகள் நிறைய உடைய புலியினுடைய தோலில் இழைத்த ஆடையினை அணிந்தவன்.

யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்

யாழிசையை ஒத்த இனிய குரலினையும், கருமையான கழுத்தினையும் உடைய, அன்பும் அருளும் பொருந்திய ஆண்மகன். இங்கு அந்தணன் என்பது பிராமணனை குறிக்கும் சொல் அல்ல.

அந்தணன் = அம் + தண் + அன், அம் - அழகு, தண் - அருள், அன் - ஆண்பால் வினைவிகுதி, அழகும் அருளும் உடைய ஆண் என பொருள் கொள்க. வள்ளுவன் கூறியது போல், அந்தணர் என்போர் அறவோர் என பொதுவாகவும் பொருள் கொள்ளலாம்

தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்று ஆல் உலகே

அவனது கேடில்லாத கால்நிழலில் (காலடியில்) சேர்ந்திருக்கிறது (பாதுகாப்பாய் இருக்கின்றது) வியக்கத்தக்க இந்த உலகம்.

படி 4: பாடலை பற்றிய என் கருத்துக்கள்

தமிழர்களின் ஒவ்வொரு நூலும் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிப்பது வழக்கம். அகநானூறு தொகுக்கப்பட்ட காலத்தில், இந்த கடவுள் வாழ்த்து இயற்றப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கடவுள் வாழ்த்து பாடலை தவிர்த்து அகநானூற்றில் நானூறு பாடல்கள் உள்ளன.

ஐந்திணை பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பில், சிவனை கடவுள் வாழ்த்தில் வைத்து பாடியதில் எனக்கு உடன்பாடில்லை. ஐந்திணை கடவுள்களையும் வாழ்த்தி பாடியிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்.

தாம் பாடும் கடவுள் இன்னார் என் நேரடியாக கூறாமல், அவருடைய தன்மைகளை விவரித்து கூறி, அவர் யாரென நமக்கு உணர்த்தும் பாங்கு நன்றாக இருக்கிறது. நல்ல கற்பனை வளம் மிகுந்த உவமைகள்.

எனக்கு மிகவும் பிடித்த சொல்லாடல் - முதிரா திங்கள். இளமையை குறிக்கும் சொற்கள் பொதுவாக நேரிடையாக இருக்கும். இளங்கதிர், இளந்தென்றல், இளவல் என்பன போல். ஆனால், பெருந்தேவனாரோ இளமையான சந்திரன் எனும் பொருளில் “இளந்திங்கள்” என்று கூறாமல், எதிர்மறையாக “முதிரா திங்கள்” என கூறுகிறார். “இளந்திங்கள்” என்று சொல்லும் போது, அது தற்போது இளமையாக இருக்கிறது, பின்னால் முதிர்வடையும் என்பது நிதர்சனம். ஆனால் “முதிரா திங்கள்” என்று சொல்லும் போது, அது எப்போதும் முதிர்வடையாமல் இளமையாகவே இருக்கும். என்ன ஒரு ரசனைக்குரிய ஆழமான சிந்தனை?

நாத்திகனாக இருந்த போதிலும் எனக்கு இந்த பாடல் பிடித்திருக்கிறது.

முகப்பு > தொகுப்புகள் > அகநானூறு

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.