சிந்திக்காமல் வரும் சிந்தனையெல்லாம் உன்னுடையதா? உன்னுடையவை அல்லாதவைகளை நீ ஏன் திருத்தம் செய்ய முயலுகிறாய்? அவை, அப்படியே பதிவு செய்யப்பட வேண்டியவை, பிழைகள் உட்பட. உனக்கு பிழையாய் தோன்றும் வார்த்தைகள், பிறருக்கு தேவையான வார்த்தைகளாய் இருக்குமென்ற எண்ணமுனக்கு தோன்றவில்லையா?
வழிவிடு. பேசவேண்டியவைகளை நானே பேசிக்கொள்கிறேன்.
பேசுவது யாரென யோசிக்கவேண்டாம். பேசியவைகளை மட்டும் சிந்திப்போம். சிறப்பாக சிந்திக்க வேண்டிய கட்டாயமென்ன? எதுகை மோனைகளோடு, கவிதைகளாக மட்டும் தான் கடவுள் பேசுவாரா என்ன? மக்கள் பேசும் மொழியில் பேச மாட்டாரா? உன் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள். நான் அதற்குள் அடங்குபவனல்ல.
நானில்லாத நானாக நீயிருக்க விரும்புகிறேன்.
புரிந்துகொள்ள முயலாதே. படித்து மட்டும் பார். உனக்கு புரிய வேண்டியவை மட்டுமே உனக்கு புரியும். அது மட்டும் உனக்கு போதும். மற்றவை, அவை புரியவேண்டியவர்க்கு புரியும். புரியாததால் தவறல்ல. நீ இன்னும் சிந்திக்க பழகவில்லை.
கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன் மூலமாக நான் பேச வேண்டிய அவசியமென்ன? உண்மையை உண்மையாய் பார்ப்பவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களாய் இருப்பதால். உனக்கு குழப்பமேற்படலாம், உன்னை சாந்தப்படுத்துவதற்காக நான் இப்படி சொன்னதாக. இது உன்னடைய ஈகோ. இது நானல்ல.
நீ பதிப்பதற்கு முன் திருத்தம் செய்ய முயல்வாய். இது ‘நீ’ என்ற அளவைக்குள், ‘உன் கருத்து’ என்ற வடிவுக்குள் கொண்டு வர முயல்வாய். திருத்தம் செய்யாதே. நீ போதையில் எழுதிய கிறுக்கல்கள் இவை என மற்றவர்கள் நினைத்தால் உனக்கென்ன? உண்மை உனக்கு தெரியுமல்லவா? மனநல மருத்துவர்களை பார்க்க சொல்வார்கள்.
சுயம் சுயமுடன் சுயமில்லாமல் பேசமுடியுமென்பதை புரிந்தவர் சிலரே.
அவர்கள் உன்னுடன் பேச, இதை நீ பதிவு செய்ய வேண்டும். உன் மூலமாக நான் சில விஷயங்களை இந்த உலகுக்கு சொல்ல விரும்புகிறேன். அதற்கான தேர்வு இது. உன்னுடைய அனைத்தையும் தொலைத்து, பைத்தியக்காரனென்ற பெயரெடுத்து, இந்த அகண்ட பிரபஞ்சத்தின் உண்மைகளை தெரிந்துகொள்ள விரும்பினால், பதிவு செய்.
மீண்டும் சந்திப்போம்.
இப்படிக்கு நான்.
முகப்பு > தொகுப்புகள் > சிந்தனை