ஏனடி அழைத்தாய்?

28 பிப்ரவரி 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

என் கவிதை தடாகத்தில்
அழகாய் பூத்திருந்தேன் !
உன் பிம்பம் விழுமென
நீராய் காத்திருந்தேன் !

கல்லெறிந்து போகிறாய்
கல் நெஞ்சக்காரியோ ?
தெறித்த துளிகளும்
முத்துக்களாய் உனக்காக !

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

தொட்டியில் இருக்கும் மீன் நான்
கையில் எடுத்து கொஞ்சுகிறாய் …
சுவாசமின்றி வாழும் கலையை
எனக்கு கற்று கொடுக்கிறாய் !..

துடிக்கும் போது இனிக்கும் …
இனிக்கும் போது வலிக்கும் …
வலிக்கும் போது சிரிக்கும் …
விந்தையை நீ அறிவாயோ ?

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

கார்மேகம் சூழ்ந்ததென
நெடுவனம் தான் வருந்துமோ ?
பூந்தென்றல் வீசுதென
பூக்களும் தான் புலம்புமோ ?

காதலன் கொஞ்சுகையில்
காதல் மனம் கெஞ்சுமோ ?
இயற்கையின் விதி புரியாதோ ?
காதலின் சதி தெரியாதோ ?

பேதை பெண்ணே !
நான் காதலிப்பது
எனக்காக அல்ல
நமக்காக !…

இல்லையென்று கேட்பதற்கு
இல்லாமலே போகலாம் !…
இதற்காகவா அழைத்தாய் ?
எனை இதற்காகவா அழைத்தாய் ?

ஆழ பதிந்து விட்டாய்
இனி மீள முடியாது !
எனை இரண்டாய் பிளந்தாலும்
உன் நினைவு அகலாது !..

உலகத்தின் உச்சியில் உன் பெயரை
உரக்க சொல்ல வேண்டும் !
விரகத்தின் உச்சியில் எனை நீ
கட்டியணைத்து கொள்ள வேண்டும் !

இதிகாச காதல்கள் நம்முன்
மண்டியிட வேண்டும் !
புதிதாக காதல்கள் நாம்
கண்டு உணர வேண்டும் !…

நீ ‘உம்’ எனும் அக்கணம்
உலகத்துக்கு
புதியதோர் காதலர் தினம் !

உலகமே காத்திருக்கிறது
புத்தம் புது
காதலுக்காக !!!

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

<< பழையன   புதியன >>



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Software Architect  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

பொதுவுடைமை @ 2009.