யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - புத்தகவிமர்சனம்.

6 செப்டம்பர் 2011

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

பழனியில் என் நண்பன் திருமணத்தில் கலந்துவிட்டு ஈரோடு திரும்பி வந்துகொண்டிருந்தேன். தாராபுரத்தில் பேருந்து நின்றவுடன், நடத்துனரிடம் “ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன் அண்ணே” என்று சொல்லிவிட்டு அவசரமாக ஓடினேன். திரும்பி வரும்போது பேருந்து அங்கு இல்லை. சிரித்துக்கொண்டே அடுத்த பேருந்துக்கு காத்திருக்கும் வேலையில் எதிரில் இருந்த புத்தகக்கடையில் நிலாரசிகனின் “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” புத்தகத்தை பார்த்தேன். இவருடைய “வெயில் தின்ற மழை” கவிதை தொகுப்புக்கு பிறகு நான் படிக்கும் இரண்டாவது புத்தகம்.

முதல் கதை - “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை பற்றியது. “நல்லா சந்தோஷமா தானே போயிட்டு இருந்த… எதுக்கு இத வாங்குன?” எனக்குள் நானே பேசிக்கொண்டேன். ஆறே பக்கங்களில் இதயத்தை இத்தனை கனக்க செய்ய முடியுமா?. மேற்கொண்டு படிக்க விருப்பப்படவில்லை. புத்தகத்தை மூடவும் மனமில்லை. நெரிசலான பேருந்தில் நின்றுகொண்டே படிக்க தொடங்கினேன். இருள் மெல்ல கவிழத்தொடங்கியது.

அடுத்து “சங்கமித்திரை” - அழகி திரைப்படத்தை ஏனோ நினைவுப்படுத்தியது. “வேட்கையின் நிறங்கள்” - மிக அழகாக ஓரின சேர்க்கையை விவரித்தது. மூத்த எழுத்தாளர்களே எழுத யோசிக்கும் விஷயம். தெளிவாக எழுதி இருந்தார் நிலாரசிகன். “ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு” - கண்கள் கலங்கியது. அழகான கவிதை படிக்க தொடங்கும் முன்பே முடிந்தது போன்ற ஒரு உணர்வு.

மூன்று தொலைபேசி அழைப்புகளை தொடர்ந்து ஒரு குறுந்தகவல் - தோழியிடமிருந்து. மனமில்லாமல் புத்தகத்தை மூடிவிட்டு தோழியுடன் பேச ஆரம்பித்துவிட்டேன். நான்கு நாட்கள் கழித்து திரும்பவும் படிக்க துவங்கினேன். சில சிறுகதைகள் சாதரணமாக இருந்தன. ஆனாலும் தொடர்ந்து படித்தேன். “தாய்மை” - மிக அருமை. கிராமத்து பெண்களின் வெள்ளந்தியான மனசும், ஆண்களின் முன்கோபங்களும் அருமையாக படம்பிடிக்கப்பட்டு இருக்கிறது.

“அப்பா சொன்ன நரிக்கதை” - சில ஆண்களின் மேல் கடுங்கோபத்தை வரவழைத்தது. மூன்று முறை படித்த பிறகே கதை புரிந்தது. அருமை. கடைசி வரியில் மொத்த கதையின் போக்கை மாற்றி, மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது இவரது பாணி என்று நினைகிறேன். கவிஞன் என்ற பரிமாணத்தில் இருந்து கதாசிரியர் என்ற பரிமாணத்திற்கு மிக இயல்பாக சென்றிருக்கிறார். இவரது கவிதைகளை போலவே, பல கதைகள் மிக அழகு.

கண்டிப்பாக படிக்கலாம். ஆனால் படித்தப்பின் உங்கள் இதயம் கனத்தால் அதற்கு நிலாரசிகன் தான் பொறுப்பு.

வெளியீடு : திரிசக்தி பதிப்பகம்
56/21, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை - 600 020
விலை : ரூ. 70/-
தொலைபேசி : 044 4297 0800
மின்னஞ்சல் : trisakthipublications@trisakthi.com

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.