திருநங்கைகள் உலகம் - புத்தகவிமர்சனம்.

2 மே 2012

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

ஊரோரம் புளியமரம்… உலுப்பிவிட்ட சலசலங்கை… - “பருத்திவீரன்” படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாடல் வெற்றி பெறுவதற்கு முக்கியமான “திருநங்கைகளை” பற்றி ஒரு நிமிடம் கூட யோசித்தது கிடையாது. கார்த்திக்கின் நடிப்பும் ஆண்மையும் தான் பேச்சு. எனக்கு தெரிந்த அனைவருமே அப்படித்தான். தவறில்லை. மனித இயல்பு. ஆனால்,தொழில் நிமித்தமாக பெங்களுரு வந்த பிறகு நிறைய திருநங்கைகளை சாலைகளில் பார்த்தேன். நான் பார்த்த அனைவருமே பிச்சை அல்லது பாலியல் தொழிலில் இருப்பவர்கள். இவர்களை புரிந்துக்கொள்ள வேண்டி ஆரம்பித்த தேடுதலில் கிடைத்தது தான் இந்த புத்தகம்.

ஆசிரியர் பால் சுயம்பு, 24 திருநங்கைகளை நேரில் சந்தித்து உரையாடி, அவர்களுடைய வாழ்க்கையை பதிவு செய்து உள்ளார். நம்மிடையே வாழும், ஆனால் நம்மால் அனைத்து விதத்திலும் புறக்கணிக்கப்படும் ஒரு சமூகத்தின் பதிவு ஆவணமாக, இந்த புத்தகத்தை கருதுவது சிறப்பு. இவர் சந்தித்த அத்தனை திருநங்கைகளும் இப்பொழுது நல்ல நிலைமையில் உள்ளவர்கள். ஓரிருவரை தவிர, மற்ற அனைவருமே ஒரு கட்டத்தில், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, அரவாணிகளால் ஆதரிக்கப்பட்டவர்கள். ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்த நிகிழ்வுகள், மனதில் சோகத்தை ஆழமாக விதைக்கின்றது. அரவாணிகளின் குடும்ப/குழு கட்டமைப்பு, அவர்களது உறவுமுறைகள், பழக்கவழக்கங்கள், செய்யும் பொதுவான தொழில்கள், நடனம் மற்றும் இதர திறமைகள், வணங்கும் கடவுள்கள், பாலின மாற்றம் செய்யும் முறைகள் பற்றி விரிவான குறிப்புகள் புத்தகம் முழுவதும் உள்ளன.

இப்படி கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்கென்று ஒரு அழகான குடும்பம், நல்ல வசதி, நல்ல உறவினர்கள், நல்லதொரு பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்களுக்கு வயது பத்திலிருந்து பதினைந்து வரை இருக்கும். ஆனால் உங்கள் உள்மனதில் ஏதோ ஒரு தேடுதல். ஒரு நிறைவேறாத ஆசை. நீங்கள் நீங்களாக இல்லை என்ற ஒரு உணர்வு. கண்டிப்பாக ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய சூழ்நிலை. ஒருபுறம், அமைதியான வாழ்க்கை ஆனால் அது உங்கள் வாழ்க்கை இல்லை. இன்னொருபுறம், போகும் இடமெல்லாம் கேலி, கிண்டலுக்கு ஆளாவீர்கள். அவமானம் மட்டுமே மிஞ்சும். யாரும் வேலை, வீடு தரமாட்டார்கள்.பிச்சை எடுக்க வேண்டி வரும். ஆனால், நீங்கள் நீங்களாக இருப்பீர்கள்.

நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்?

அரவாணிகள் அத்தனை பேருமே இரண்டாம் முடிவை துணிந்து எடுத்தவர்கள். ஏன்?. எது அவர்களை அப்படி முடிவு எடுக்க தூண்டியது?. கண்டிப்பாக அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம். 24 பேர்களின் கண்ணீர் கதைகளை படித்த பிறகு உங்களுக்கு புரியும்.

இது வெறும் கதைகளின் தொகுப்பு மட்டும் அல்ல. கடைசி சில அத்தியாயங்களில், அரவாணிகளாய் ஏன் சிலர் பிறக்கின்றனர், எத்தனை விதமான மாற்றுபாலினத்தவர்கள் உள்ளனர், அதற்கான அறிவியல் விளக்கங்கள், மருத்துவ பெயர்கள், அரவாணி குழந்தைகளிடம் பெற்றோர்கள் நடந்துக்கொள்ள வேண்டிய முறைகள், அரவாணிகளுக்காக இயங்கி வரும் நலத்திட்டங்கள், இயக்கங்கள் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறார்.

ஜாதி பட்டியலிலும், மதப் பட்டியலிலும், ஓட்டுப் பட்டியலிலும் இடம் பெறாமல், தனக்கு தானே வரைமுறைகள் விதித்துக்கொண்டு வாழும் இந்திய திருநங்கைகள் சமூகத்தின் இன்றைய நிலை பற்றி அறிந்துக்கொள்ள ஒரு முழுமையான புத்தகம்.

நானும் என் தோழி சுருதியும், பெங்களூரில் வாழும் ரோசி என்னும் திருநங்கையை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய கண்ணீர்க் கதையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே சுட்டவும்.

கருவில் உள்ள குழந்தை, ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ உருவாகும் தருணத்தில் சிசுவின் உடலின் நிகழும் மாற்றங்களை பற்றி தெரிந்துகொள்ள இங்கே சுட்டவும்.

இந்த புத்தகத்தை வாங்க, கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

கிழக்கு பதிப்பகம்
177/103, அம்பாள் கட்டடம், முதல் மாடி
அவ்வை சண்முகம் சாலை (லாயிட்ஸ் ரோட்)
ராயப்பேட்டை, சென்னை 600014
தொலைபேசி: +91-44-4200-9601
தொலைநகல்: +91-44-4300-9701
மின்னஞ்சல்: shop@nhm.in

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.