ரஜினி பேரக் கேட்டாலே - புத்தகவிமர்சனம்.

23 பிப்ரவரி 2011

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

வழக்கமாக எந்த புத்தகம் படித்து முடித்தாலும், உடனே விமர்சனம் எழுதி விடுவேன். ஆனால் தலைவர் வாழ்க்கை வரலாறை படித்து மூன்று நாட்கள் ஆகியும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. எந்த நாவலும், எந்த திரைக்கதையும் என்னை இந்த அளவுக்கு கட்டி போட்டதில்லை. திருமதி. காயத்ரி ஸ்ரீகாந்த்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும். எனக்கு மிகவும் பிடித்த ஒரு மனிதனின் வாழ்க்கையை, உண்மையாக பதிவு செய்ததற்கு. இவரது கதை சொல்லும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது.

புத்தகத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த ஒரு இடத்திலும், சிறு தொய்வு கூட இல்லாமல் சாமர்த்தியமாக எழுதியுள்ளார். கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் கலந்து அருமையாக மாலை தொடுத்துள்ளார். கடந்தகாலத்தை பற்றி ஒரு அத்தியாயம், அடுத்து நிகழ்காலத்தை பற்றி ஒரு அத்தியாயம், திரும்பவும் கடந்தகாலத்தை பற்றி ஒரு அத்தியாயம் என கலக்கி உள்ளார். சினிமா தயாரிப்புக்கு தயாராக உள்ள திரைக்கதை போலவே இருக்கும், மொத்த புத்தகமும்.

சிவாஜிராவ் கெய்க்வாட் - ரஜினியின் இயற்பெயர். பெங்களூரில் அவர் பிறந்து வளர்ந்த கதை, ரௌடியாக திரிந்த இளங்கன்று பருவம், ஆன்மிகத்தில் தேடல் ஆரம்பித்த நேரங்கள், மூட்டை தூக்கியும், எடுபிடியாகவும் வாழ்ந்த காலங்கள், அரசாங்க உத்தியோகம் “கண்டக்டர்” வேலை செய்யும் காலங்கள், நட்பு வட்டங்கள், ஒய்வு நேரத்தில் நாடகத்தில் நடிக்கும் ஆர்வம், அரசாங்க உத்தியோகத்தை உதறிவிட்டு சென்னைக்கு ஓடி வந்து கஷ்டபட்ட காலங்கள், பிலிம் இன்ஸ்டிடியூட் நடிப்பை மெருகேற்றிய காலங்கள், கே.பாலச்சந்தரின் அறிமுகம் என எந்த ஒரு சின்ன விஷயத்தையும் விட்டு விடாமல், அதே சமயம் உண்மையை சிதைக்காமல் பதிவு செய்துள்ளார்.

ரஜினியை பற்றி நான் அறிந்திராத ஒரு விஷயம் அவருடைய கடும் உழைப்பும், நேரம் தவறாமையும். சோற்றுக்கு வழியில்லாத போதும் மில்லியன் டாலர் கனவுகள். ரஜினி என்னும் சாதனையாளன் வாழும் காலத்தில் வாழும் நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ரஜினியை பற்றி பலதரப்பட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. அதை பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு ரஜினி பிடிக்குமா, பிடிக்காதா என்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அனைவரும் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் - அவர் ஒரு சாதனையாளர். அந்த ஒரு கோணத்தில் மட்டும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.

நான் சினிமா பார்க்க ஆரம்பித்த வயதில் இருந்து இன்று வரை என்னை கவர்ந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த். கமல்ஹாசன் உட்பட மற்ற எந்த நடிகரின் படம் என்றாலும், அதன் விமர்சனம் கேட்டு நன்றாக இருந்தால் தான் போய் பார்ப்பேன். ஆனால் ரஜினி என்ற மந்திர வார்த்தை இருந்தால் போதும், முதல் நாள் சினிமா அரங்கில் இருப்பேன். அறியாத வயதில் ரஜினியை பிடித்தது பெரிய விஷயமில்லை. ஆனால், இன்றும் அவர் படங்களின் மேல், பைத்தியமாக இருப்பதை என்ன சொல்வது?. ஒரே ஒரு வார்த்தை தான் சொல்ல முடியும்.

ரஜினிகாந்த் !!!

ஆங்கில ஆக்கம்: The Name Is Rajinikanth.

பி.கு: நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். இந்த விமர்சனத்தில் அவரை பற்றி மிகைபடுத்தி சொல்லி இருப்பதாக நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும். நீங்களே புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.