லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - புத்தகவிமர்சனம்.

11 பிப்ரவரி 2015

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

வா.மணிகண்டன் - இணையதளத்தில் மிகவும் பரிச்சயமான பெயர். இவரது வலைப்பூவை முடிந்தவரையில் தினமும் படித்துவிடுவேன். காலையில் அலுவலகம் சென்ற உடன், மின்னஞ்சலை திறந்தால் கண்டிப்பாக இவருடைய புதிய பதிவு இருக்கும். இதை பற்றி தான் எழுதவேண்டும் என்று இல்லை. எதைப்பற்றி வேண்டுமென்றாலும் எழுதி கொண்டு இருப்பார். ஒரு மசாலா கலவை மாதிரி - எல்லாமே இருக்கும். ரொம்ப இயல்பான, யதார்த்தமான பேச்சு வழக்கிலேயே இருக்கும். ஒரு சாதாரண மனுஷன் - தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விஷயங்களை சுவாரசியமான எழுத்து வடிவில் கொண்டு வந்துவிடுவார்.

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் தினமும் பார்க்கிறேன். ஒரே சொடுக்கில் அந்த புத்தகத்தை வாங்கிவிட முடியும். ஆனால் வாங்கவில்லை. வாங்கவேண்டும் என்று தோன்றவில்லை. “எனக்கு சிறுகதை, நாவல் எல்லாம் பிடிக்காது. சுத்த டைம் வேஸ்ட் “ - எனக்கு நானே பல வருடங்களாக சொல்லிக்கொண்டது. வைரமுத்து மட்டும் விதிவிலக்கு. அவருடைய கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் படிச்சிருக்கேன். ஆனால் இந்த வருஷ புத்தக கண்காட்சிக்கு போகும் போது ஒரு சின்ன மனமாற்றம். “சிறுகதைகள் படிச்சி தான் பார்ப்போமே. அப்படி என்ன தான் இருக்கு-னு”.

யார் கிட்ட கேட்டாலும், அவங்க சொன்ன முதல் பெயர் - சுஜாதா. அவரோட ஒரு புத்தகம் “சிறுகதை எழுதுவது எப்படி?” வாங்கினேன். அடுத்து என்ன வாங்கலாம்-னு யோசிச்சப்ப மணிகண்டன் ஞாபகத்துக்கு வந்தார். அட… நம்ம மணிகண்டனோட புத்தகங்களை வாங்கலாமே!. இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். மணிகண்டன், அந்த புத்தககண்காட்சியில் வேறு இடத்தில் இருப்பத்தாக சொன்னார்கள். பார்க்கணும்-னு முடிவு பண்ணிட்டு அவரை தேடி சுற்றி கொண்டிருந்தேன். (அவரது அலைபேசி எண் வலைப்பூவில் இருப்பதை மறந்துவிட்டேன்). ஆனால் மனைவியிடமிருந்து ஒரு அவசர அழைப்பு. கிளம்ப வேண்டியதாயிற்று. பார்க்க இயலவில்லை.

முதல் நாள் சுஜாதாவின் புத்தகம் படித்தேன். அசந்துவிட்டேன். இவர் புத்தகங்களுக்கு விமர்சனங்கள் தேவையில்லை, “பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல”. அடுத்த புத்தகம் படிக்க உடனே நேரம் அமையவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து படித்தேன். நம்ம மணிகண்டனுடைய “லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்”.

புத்தகம் முதல் பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை ஒரே மூச்சில் படித்து முடித்தால், நல்ல புத்தகம் - இதை ஒரு அளவுகோலாக வைத்துக்கொண்டால், இது ஒரு நல்ல புத்தகம். படித்த ஒவ்வொவொரு கதையும் உங்கள் மனதில் ஒரு அனுபவத்தை கொண்டு வரவேண்டும். சந்தோசம், துக்கம், பரிதாபம், திகில், கடந்தகால அனுபவம் - இப்படி எதாவது ஒன்று. - இதை ஒரு அளவுகோலாக வைத்துக்கொண்டால், இது ஒரு நல்ல புத்தகம் (?). கேள்விகுறியின் அர்த்தம் - நிறைய கதைகள் நன்றாக இருந்தது. சில கதைகள் சுமாராக இருந்தது.

மின்னல் கதைகள் - இது தான் இந்த புத்தகத்தின் சாரம். மின்னல் மாதிரி சின்ன, ஆழமான கதைகள். சாவதும் ஒரு கலையில் ஆரம்பித்து லிண்ட்சே லோஹனில் முடிகிறது புத்தகம். ஓவ்வொரு கதையும் ஒரு விதம். நிறைய கதைகள் அவருடைய அனுபவங்கள் என்று நினைக்கிறேன். அவரே பேசுவது போல் எழுதி இருக்கிறார். வட்டார மொழிவழக்கு, கிராமங்களில் நடந்துவரும் மூடநம்பிக்கைகள், கவுண்டர்-சக்கிலியர்-பறையர்-துலுக்கர் இவர்களுக்குள்ளான பூசல்கள், உறவுமுறைகள், நகரத்தின் இயலாமை வாழ்க்கை, சின்ன சின்ன சந்தோஷங்கள், மழலை மற்றும் பள்ளிப்பருவ அனுபவங்கள் என கலந்து அள்ளித்தெளித்து இருக்கிறார்.

எனக்கு பிடித்த பத்து கதைகள் இவை - என்று எழுதுவதற்காக பிடித்த கதைகளை பட்டியலிட்டு கொண்டு வந்தேன். எண்ணிக்கை பதினைந்தை தாண்டிவிட்டது. யோசித்து பார்த்ததில் ஒன்றிரண்டு சுமாரான கதைகளை தவிர, மற்ற கதைகள் அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. அதனால் இந்தமுறை பட்டியல் கிடையாது. பொழுதுபோக உங்கள்ளுக்கு படிக்க ஒரு புத்தகம் வேண்டுமென்றால் - கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம்.

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.