கருவாச்சி காவியம் - புத்தகவிமர்சனம்.

30 செப்டம்பர் 2010

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’,’கருவாச்சி காவியம்’ இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் தான் என்று என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. - வைரமுத்து.

புத்தகத்தின் பின்னட்டையில் வைரமுத்துவின் வரிகளை படித்தவுடன், கர்வமோ, போதையோ தலைக்கேறிய சமயத்தில் எழுதி இருப்பாரோ என்று நினைத்தேன். அவர் படைப்பை அவரே புகழ்வது சிறுபிள்ளைதனமாக தோன்றியது. புத்தகத்தை வாங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை தொடவே இல்லை. தற்செயலாக எடுத்து படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தை கீழே வைக்கவில்லை. படித்து முடிக்கும் போது, அதிகாலை மூன்று மணி. புத்தகத்தின் கடைசி பக்கத்துக்கு வந்தபோது, வைரவார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

வைரமுத்து சிறுவனாக இருந்தபோது கண்டு,கேட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு தான் இந்த காவியம். வையைநதிக்கரையில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கிற பல பெண்களின் வாழ்க்கை தான் கருவாச்சி என்கிற கதாபாத்திரம். தேனி மாவட்டத்துல இருக்குற சொக்கத்தேவன்பட்டி என்கிற கிராமம் தான் கதைக்களம். கல்யாணமான ஆறாவது நாளே, அத்துவிட சொல்லி பஞ்சாயத்துல நிக்குற கட்டையன் தான் கருவாச்சியோட புருஷன். ரெண்டு குடும்பத்துக்கும் இடையில உள்ள நாப்பது வருஷப்பகையை தீர்த்து வைக்க பண்ணி வச்ச கல்யாணம் ஆறே நாள்ல அத்துகிட்டு நிக்குது.

அத்துவிட்ட புருஷன மீறி, அதே ஊர்ல வாழ்ந்து காட்டுவேன்-னு சொல்ற கருவாச்சியோட பிடிவாதமும், ‘எப்படி வாழற-னு பாக்கலாம்-டி’ சொல்ற கட்டயனோட வீறாப்பும் தான் கதை. சுருக்கமா நான் சொல்லிட்டேன். ஆனா வைரமுத்து காவியமா படைச்சிருக்கார். அந்த ஊர் மக்களோட வாழ்க்கைய அவ்வளவு அருமையா சொல்லி இருக்கார். அந்த வட்டார மொழிவழக்கு ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், ரெண்டு அத்தியாயம், முடியறதுக்குள்ள பழகிடும். பிடிக்க ஆரம்பிச்சிடும்.

கருவாச்சி, அவ ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவனப்பன் சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம். இவங்க எல்லார் கூடவும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிச்ச அனுபவம் இருக்கும் இத படிச்சி முடிச்ச உடனே. அது மட்டுமில்லாம, அந்த மக்களோட வாழ்க்கை முறை, நகரங்கள்-ல கேட்டறியா வழக்கங்கள், அருமையான மருத்துவ குறிப்புகள், விவசாயம் செய்யும் முறைகள், மழை பொய்த்த காலங்களில் மக்கள் சமாளித்த விதம், அவர்கள் பட்ட கஷ்டங்கள், சின்ன சின்ன சந்தோஷங்கள், அவங்க நக்கல் பேச்சு, பொறாமை பிடித்த உள்ளங்கள், நெல்லுசொத்துக்கு ஆசை, கல்யாணம் பண்ண முறைகள் என அந்த மக்களோட ஒரு சிறந்த பதிவு ஆவண நூல்-னு சொல்லலாம்.

சில விஷயங்கள் எனக்கு ரொம்ப புதுசா இருந்திச்சி.

௧. பன்றி அடிக்குற முறை.
௨. காசுக்கு மாரடிக்குற வழக்கம்.
௩. விதவிதமான கருக்கலைப்பு முறைகள்.
௪. கெடாவுக்கு காயடிக்கற முறைகள்.
௫. பாறைக்கறி செய்ற வகையறா.
௬. அயிரமீன் புடிக்குற முறை.
௭. சாணிக்கு போட்டி போடும் வறிய பெண்களோட வாழ்க்கை.
௮. பல மூலிகைசெடிகள் பற்றிய குறிப்புகள்.
௯. ஒத்தையில கருவாச்சி புள்ள பெத்தது.
௰. மார்பு கட்டிப்போனா பண்ற வைத்தியம்.
௧௧. பொன்னுல நகை செய்யற முறை.
௧௨. குடிசை கட்டுறது எப்படி.

இப்படி நெறைய விஷயங்கள் இருக்கு இந்த காவியத்துல.

வைரமுத்துவோட உரைநடை-ல ஒரு சக்தி இருக்கு. கருவாச்சி புள்ள பெத்தப்ப, பெரியமூக்கி பெருங்காத்துக்கு செத்து போனப்ப, முப்பத்தி ஏழு வருஷத்துக்கு அப்பறம் கட்டையன பாக்கறப்ப, கஞ்சா அடிச்சி தேஞ்சி போன புள்ள அழகுசிங்கத்த பாக்கறப்ப, பூலித்தேவனுக்கு காயடிக்கறப்ப-னு பல இடங்கள்ல என்னை கேட்காமலே கண்ணுல முட்டிட்டு நிக்குது தண்ணி. சந்தோசத்தையும் சோகத்தையும் ஒண்ணா பெசைஞ்சி, நெஞ்சுல தடவுன மாதிரி… நல்லா காவியம் படிச்ச சந்தோஷமா?.. கதைல உள்ள சோகமா?.. எது விஞ்சி நிக்குது-னு தெரியாது. சாமியாரோட அத்தியாயம் மட்டும் இடைசெருகல் மாதிரி கதையோட ஒட்டாம போகுது. இதை தவிர்த்து இருந்தா, நல்லா இருக்கும்-னு என் மனசு சொல்லுது. கறையில்லா நிலவுண்டோ?..

அடுத்து ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படிக்க போறேன். இப்பவே சந்தோஷமா இருக்கு !!!

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.