கல்வெட்டுக்கள் - புத்தகவிமர்சனம்.

7 ஆகஸ்ட் 2013

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

நீங்கள் அலுவல்களை முடித்து விட்டு வீடு திரும்பிகொண்டிருக்கும் ஒரு சாதாரண மாலை நேரம். வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது, திடீரென்று வானம் கருக்கிறது. மெலிதாக குளிர்காற்று உங்கள் முகத்தில் அறைந்து செல்கிறது. உங்களை அறியாமல் நீங்கள் கண்களை மூடி, முதல் மழையின் மண்வாசனையை உங்கள் சுவாசப்பைக்குள் சேர்த்து வைக்கிறீர்கள். கண்களை திறந்து பார்க்கும் போது, உங்கள் வீட்டின் எதிரில் உள்ள சாலையோரத்தில் உள்ள புற்களின் மறைவில், பிறந்து பத்து நாட்களே ஆன நாய்க்குட்டிகள் இரண்டு கொஞ்சி விளையாடிக்கொண்டு இருக்கின்றன. திடீரென குழந்தையாகி போகிறீர்கள். பால்ய நினைவுகள் உங்களை ஆக்ரமிக்கின்றன. “சுச்சூ சுச்சூ” என்று சொல்லிக்கொண்டே நாய்க்குட்டிகளை கையில் எடுத்து கொஞ்சுகிறீர்கள். முதலாளியின் திட்டுக்கள், கொடுக்க வேண்டிய கடன் பாக்கி, குழந்தையின் படிப்பு செலவு என அனைத்தும் மறந்து போகின்றன. தெருமுனையில் சொர்க்கத்தை உணருகிறீர்கள்.

இது ஒரு அதியற்புதமான அதே சமயம் மிக சாதரணமான ஒரு நிகிழ்ச்சி. இதை பதிவு செய்வதற்கு உகந்த கருவி எது?. கவிதையா? கட்டுரையா?

கட்டுரை தான் என்கிறார் வைரமுத்து. நானும் வழிமொழிகிறேன். தமிழில் கட்டுரை இலக்கியம் இன்னும் வளரவில்லை, செழிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

கவிதை எழுத கவிஞன் வேண்டும். கட்டுரை?. யார் வேண்டுமானாலும் எழுதலாமே. உங்கள் அக/புற அனுபவங்களை உங்களுக்கு பழக்கப்பட்ட மொழி நடையில் எழுதலாமே?. கட்டுரைக்கென்று இலக்கணங்கள் இன்னும் வகுக்கப்படவில்லை. எல்லோரும் எழுத ஆரம்பிக்க வேண்டும். இன்னும் தொட்டிலிலே இருக்கும் கட்டுரை இலக்கிய குழந்தை தவழ, நடக்க, ஓடி விளையாட உதவி செய்வோம்.

கட்டுரை இலக்கியம் வளர, வைரமுத்துவின் இன்னொரு முயற்சி தான் இந்த புத்தகம். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் இலக்கிய பரப்பின் எல்லைகளையும் ஆழத்தையும் தொட்டு சென்றுள்ளார். ஒவ்வொரு கட்டுரையிலும் வேரை தேடி செல்லும் விழுதை போல, ஆழமான தேடுதலை வெளிப்படுத்துகிறார். தமிழ் இலக்கியங்களின் மிகச்சிறந்த முத்துக்களை ஆங்காங்கே தெளித்திருக்கிறார். எனக்கு பிடித்த முத்துக்களில் ஒரு சில…

யாரோடும் பகை கொள்ளலன் என்றபின்
போரொடுங்கும் புகழொடுங்காது
‐ “தமிழ் கூறும் நல்லுலகு” கட்டுரையில்

அண்ணலே!
இன்று உன் ராட்டையில்
சிலந்தி தான் நூல் நூற்கிறது !
‐ “புதுக்கவிதையின் பாடுபொருள்” கட்டுரையில்

பொன்னிநதி அவ்வளவு
போனரத்தம் போன பின்னர்
கன்னியரை எசுதடா உள்ளம் - இது
காலிடறி யானைவிழும் பள்ளம்
‐ “எனது பார்வையில் கண்ணதாசன்” கட்டுரையில்

“வடக்கே மழைபேஞ்சு
வார்ந்த மணல் ஓடிவர
நடந்துபோ பாலகனே - உன்
நல்ல தடம் நான் பார்க்க.”
(தாய்மை)

“தும்புச் செருப்பு மாட்டி
தொழுதிறக்க போற மன்னா!
தும்பைப்பூ வேட்டியிலே
துவண்ட மஞ்சள் நாந்தானா?”
(காதல்)
‐ “பட்டிக்காடு குயில்கள்” கட்டுரையில்

கண்டிப்பா படிச்சு பாருங்க. கட்டுரைகள் எழுத ஆரம்பிங்க !

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.