கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்.

9 ஜூலை 2014

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’,’கருவாச்சி காவியம்’ இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் தான் என்று என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. - வைரமுத்து.

நான் கருவாச்சி காவியம் படித்து நான்கு வருடங்கள் ஆகின்றன. வாழ்க்கையின் ஓட்டத்தில் தமிழ் புத்தகங்கள் படிப்பதற்கான வாய்ப்பும் நேரமும் நெடுநாட்கள் கூடிவரவில்லை. நேரம் கிடைத்தவுடன் நான் கையில் எடுத்த முதல் புத்தகம் - வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’.

இது ஒரு குடியானவனின் இதிகாசம்.

பேயத்தேவன் என்றொரு சாதாரண விவசாயியின் வாழ்க்கை தான் இந்த இதிகாசம். மனைவி அழகம்மாள், மகள்கள் செல்லத்தாயி, மின்னலு, மகன் சின்னா, மகவழி பேரன் மொக்கராசு, சிறுவயது காதலி முருகாயி, நண்பர் வண்டிநாயக்கர் - இவர்களை சுற்றி சுழலும் பேயத்தேவனின் கதை.

வைரமுத்து அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் பார்த்த, கேட்ட வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஒரே ஒரு மனிதனின் வாழ்வில் நடப்பதாக எழுதி இருக்கிறார். பிறந்ததில் இருந்து பேயத்தேவன் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள், அவற்றை எதிர்கொண்டு வெளிவரும் மனஉறுதி, சொன்ன சொல்லை காப்பாற்றும் நேர்மை, கையில் காசில்லாத போதும் குடும்பம் மொத்தத்தையும் காப்பாற்றும் பாசம் என எந்த இடத்திலேயும் கொள்கை இடறாத நாயகனாக சித்தரித்து இருக்கிறார்.

இளமை பருவத்தில் முருகாயி மேல் ஏற்படும் காதல், அதையொற்றி நிகழும் சம்பவங்களை தவிர, பேயத்தேவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான, ருசிகரமான சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்ததாக காட்டப்படவில்லை. அழகம்மாளுடன் வாழ்ந்த வாழ்க்கை, அவர்கள் இருவருக்கும் நடந்த சின்ன சின்ன சந்தோஷங்களை விவரித்து இருக்கலாம். அவர்களுடைய வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாமல், பேயத்தேவன் அழகம்மாளின் சேலைக்காக நள்ளிரவில் வண்ணானை எழுப்பி நடத்தும் கூத்து பெரிதாக மனதில் பதியவில்லை.

துன்பத்தின் மேல் துன்பம். சாண் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை. சில அத்தியாயங்களுக்கு பிறகு சுவாரசியம் குறைந்து விடுகிறது. ஒரு புது காட்சியை விவரிக்கும் போதே அது என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. நிறைய கிராமத்து திரைப்படங்களை பார்த்ததால் கூட இருக்கலாம். கருவாச்சி காவியம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த போது, அந்த புத்தகத்தை முடிக்காமல் கீழே வைக்க மனம் ஒப்பவில்லை. பல இடங்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. அந்த ஒரு அனுபவத்தை கள்ளிக்காட்டு இதிகாசம் தரவில்லை. அடுத்த அத்தியாயம் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் படித்து கொண்டிருந்தேன்.

முக்கால்வாசி புத்தகத்தில் விட்ட நம்பிக்கையை, கடைசி சில அத்தியாயங்களில் மொத்தமாக சேர்த்து பிடித்து விட்டார். அணைக்கட்ட ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை அத்தனை விறுவிறுப்பு. கண்கள் முன்னே காட்சிகள் நடப்பது போன்ற ஒரு விவரிப்பு. அருமை. மிக அருமை.

“விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா.”

இந்த பாடலில் இத்தனை உணர்வுகளை இவரால் எப்படி கொண்டுவர முடிந்தது?. என்னுடைய பல வருட கேள்விக்கு இன்று தான் விடை கிடைத்தது. இது வைரமுத்து வாழ்ந்த வாழ்க்கை. நினைத்து பார்க்க இயலா துயரம். ஒருவர் வாழ்ந்து அனுபவித்ததை விவரிப்பதற்கும், பார்த்து கேட்ட சம்பவங்களை விவரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்த ஒரு புத்தகத்தில் உணரலாம்.

முன்னூற்றி எழுபத்தைந்து பக்கங்களில் வாழ்ந்த பேயத்தேவன் அரைப்பக்கத்தில் அதை முடிப்பதில் எனக்கு பெரும் வருத்தம். இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் !.

அடுத்து ‘மூன்றாம் உலகப்போர்’ படிக்க போறேன்.

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.