அணு - அதிசயம், அற்புதம், அபாயம் - புத்தகவிமர்சனம்.

20 அக்டோபர் 2011

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

“அணுவின் துகளை நெஞ்சில் வீசி, அருகில் நின்று அழகாய் சிரித்தாள்” - என் காதலியை பற்றி நான் எழுதிய ஒரு கவிதையின் தொடக்கம் இப்படி. ஆனால் அந்த கவிதை எழுதும் போது அணுவை பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் அணுகுண்டு, அணு உலை மட்டும் தான். அணுகுண்டு வெடிக்கும். அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளிப்படும். அவ்வளவு தான். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், அணுவை பற்றிய என் கருத்துக்கள் அனைத்தும் மூடநம்பிக்கைகளாக தெரிந்தன. ஆசிரியருக்கு நன்றி.

அணுக்களை பற்றி மிக அடிப்படையான விஷயத்தில் இருந்து ஆரம்பித்து, மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகள் வரை நம்மை அழைத்து செல்கிறார். மிக இயல்பான உரைநடையில் அறிவியலை திகட்டாமல் ஊட்டுகிறார். முதல் அத்தியாயத்திலேயே ரசவாதத்தை பற்றி விவாதித்து, அது ஏன் சாத்தியமில்லை என்பதை அணுக்களின் மொழியில் விளக்குகிறார்.

கதிரியக்கம், அணுபிளப்பு, அணுசேர்க்கை, அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு போன்றவற்றை பற்றி விளக்கும் போது, அவை உருவாக்கபட்ட காலநிலைகள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு, அரசியல் சூழ்நிலைகள் என ஒரு கதையை போல் அழகாக சொல்லி இருக்கிறார். அணுசேர்க்கை, அணுபிளப்பு ஆகியவற்றுக்கு தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கி விரிவாக விளக்குகிறார். அணுசேர்க்கை கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் சாத்தியமானால் உலகத்தின் மின்சாரத் தேவையை கதிரியக்க ஆபத்துக்கள் இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும் என்பது எனக்கு புதிய செய்தி. அணுக்கள் மட்டும் இல்லாமல், கடைசி சில அத்தியாயங்களில் சூரியன், நட்சத்திரம், அண்டவெளி, பொருள், எதிர்பொருள் என முழுவதையும் அழகாக விளக்குகிறார்.

இந்த புத்தகத்தில் ஒரே குறை. மிக நீளமான அத்தியாயங்கள். அளவை குறைத்து இருக்கலாம், அல்லது பல அத்தியாயங்களாக பிரித்து இருக்கலாம். அறிவியலில் ஆர்வம உள்ளவர்களுக்கு இது படிக்க வேண்டிய புத்தகம். அறிவியல் பற்றி தெரியாதவர்கள் இதை படித்தால், கண்டிப்பாக அறிவியலில் ஆர்வம வரும் என நம்புகிறேன்.

இந்த புத்தகத்தில் இருந்து பல புதிய அறிவியல் வார்த்தைகளை தமிழில் கற்றுக்கொண்டேன். அவற்றுள் சில.

ரசவாதம் - Alchemy
அணுபிளப்பு - Nuclear Fission
அணுசேர்க்கை - Nuclear Fusion
கதிரியக்கம் - Radio Activity
கதிரியக்க அணுச்சிதைவு - Radioactive Decay
கன நீர் - Heavy Water
நிலக்கரி தூசு - Fly Ash
அணு உலை - Reactor
ஈனுலை - Breeder Reactor

அணுவை பற்றிய ஆராய்ச்சிகள் மேலைநாடுகளில் தழைத்து வளர்ந்ததால் பெயர்கள் ஆங்கிலத்தில் இருப்பதில் வியப்பில்லை. என் மனதில் ஒரு கேள்வி. அத்தனை பெயர்களையும் தமிழ்ப்படுத்தலாமா?. அல்லது ஆங்கில வார்த்தைகளை அப்படியே அணைத்துக் கொள்ளலாமா ?

ஐசொடோப்பு - தமிழ் வார்த்தை என்ன?

முகப்பு > தொகுப்புகள் > புத்தகவிமர்சனம்

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  தொடர்பு  |  வலையூட்டம்  |  செய்தி மடல்  |  English

அளிப்புரிமை @ 2009.