இடுகைகள்

September, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிலவோடு நான் பேசும் நேரம் ...

நிலவோடு நான் பேசும் நேரம்
காற்றில் உன் காதலின் ஈரம்
பனி பொழியும் நள்ளிரவின் நீளம்
கண் இமைக்கும் ஒருநொடியாய் மாறும்

நிலவும் முகிலும் இணையும் நேரம்
உடலும் உயிரும் உனையே தேடும்
குளிரும் இரவில், நிலவின் ஒளியில்
காமன் மொழியில் காதல் சொல்வேன்

இரவினில் கடலினில், அலைதொடும் கரையினில்
கார்மேக கூந்தலும் அசைந்தாடும் இசையினில்
கடல் சூழ்ந்த தீவென, எனை சூழ்ந்தாய் ஒருமுறை
சுழல் வீழ்ந்த மீனென, நான் வீழ்ந்தேன் முதல்முறை

மணலினில் மெத்தையும், மார்பினில் தத்தையும்
பெண்தேவை தானுணர்ந்த கைவிரல் வித்தையும்
நானறிந்து இசை மீட்ட, கொடியிடையில் தீ மூட்ட
என்தோளில் முகம் புதைத்து பற்காவியம் நீ தீட்ட

கடற்கரை மணல்நமக்கு, உடையென உருமாற
அச்சமும் கூச்சமும் எதிர்பதமாய் தடம்மாற
வெட்கத்தில் வெண்ணிலா மேகத்தில் மறைந்தோட
விண்மீன்கள் கூட்டமாய் நமைபார்த்து தலையாட்ட

கடலலை கால் தொட, உயிர் வரை நீ தொட
சிகரங்கள் நான் தொட, சிறகுகள் வான் தொட
இருவுயிர் இணைந்திட, இமைகளும் நனைந்திட
இனிக்கின்ற ஒருகலையை இயல்பாக நாமறிந்தோம் !...

போகாதீங்க மாமா !...

பஞ்சு மெத்தை தலைகாணி
பன்னீர் தெளிச்சு வச்சாலும்
பாவிமக கண்ணுக்குள்ள
தூக்கம் மட்டும் இல்ல மாமா !...

கண்ணுக்குள்ள நீயிருக்கன்னு
கண்ணு முழிச்சி நான் கெடக்கேன்
தனியா என்னை தவிக்க விட்டு
தூரதேசம் போனதேன் மாமா !...

பொறையேறி விக்கும் போதும்
கண்ணு கலங்கி நிக்கும் போதும்
உள்ளுக்குள்ள சிரிப்பு மாமா !...
உன்னோட நெனைப்பு மாமா !...

மல்லிப்பூவு வாசம் உனக்கு
மனசு பூரா புடிக்குமுன்னு
குண்டுமல்லி பூவச்சூடி
பூவப் போல இருக்கேன் மாமா !...

லவுக்கை இல்லா மாராப்பு
மச்சான் உனக்கு புடிக்குமுன்னு
கந்தாங்கி சீலை கட்டி
கச்சிதமா இருக்கேன் மாமா !...

குட்டி குட்டி ஆசையெல்லாம்
எட்டி எட்டி பாக்குது மாமா !...
எட்டு வாளி தண்ணி இறைச்சும்
காய்ச்சல் மட்டும் போகல மாமா !...

நேந்துவிட்ட காளையெல்லாம்
மீசை வளர்த்து சுத்துது மாமா !...
நீயில்லாத சாமத்துல
வீட்டுக் கதவ தட்டுது மாமா !...

வாடாமல்லி வாடுமுன்ன
வண்டி வச்சி வந்துடு மாமா !...
நெலாவும் பூமியும் உலாவுற வரைக்கும்
என்னை விட்டு போகாதீங்க மாமா !...

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - புத்தகவிமர்சனம்

பழனியில் என் நண்பன் திருமணத்தில் கலந்துவிட்டு ஈரோடு திரும்பி வந்துகொண்டிருந்தேன். தாராபுரத்தில் பேருந்து நின்றவுடன், நடத்துனரிடம் "ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன் அண்ணே" என்று சொல்லிவிட்டு அவசரமாக ஓடினேன். திரும்பி வரும்போது பேருந்து அங்கு இல்லை. சிரித்துக்கொண்டே அடுத்த பேருந்துக்கு காத்திருக்கும் வேலையில் எதிரில் இருந்த புத்தகக்கடையில் நிலாரசிகனின் "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" புத்தகத்தை பார்த்தேன். இவருடைய "வெயில் தின்ற மழை" கவிதை தொகுப்புக்கு பிறகு நான் படிக்கும் இரண்டாவது புத்தகம்.

முதல் கதை - "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை பற்றியது. "நல்லா சந்தோஷமா தானே போயிட்டு இருந்த... எதுக்கு இத வாங்குன?" எனக்குள் நானே பேசிக்கொண்டேன். ஆறே பக்கங்களில் இதயத்தை இத்தனை கனக்க செய்ய முடியுமா?. மேற்கொண்டு படிக்க விருப்பப்படவில்லை. புத்தகத்தை மூடவும் மனமில்லை. நெரிசலான பேருந்தில் நின்றுகொண்டே படிக்க தொடங்கினேன். இருள் மெல்ல கவிழத்தொடங்கியது.

அடுத்து "சங்கமித்திரை" - அழகி திரைப்படத்தை ஏனோ நினைவ…