தண்ணீர் தேசம் - புத்தகவிமர்சனம்

தண்ணீர் தேசம் - தமிழில் ஒரு விஞ்ஞான காவியம். வடித்தது முனைவர் பொன்மணி வைரமுத்து. தமிழில் என்னென்ன உண்டு என்று கர்வப்பட்டு முடித்த வேளையில், தமிழில் என்னென்ன இல்லை என்பதை கணக்கு பார்க்க வேண்டி, வைரமுத்து தமிழுக்கு செய்த தொண்டு தான் இந்த புத்தகம். அகத்தையும் அழகையும் மட்டும் பாடி வந்த தமிழரை, அறிவியல் பக்கமும் திசைதிருப்ப ஒரு சிறு முயற்சி.சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே, நிலைத்து வாழும் என்பது பரிணாமத்தின் விதி. மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி. பொய்யென்று தெரிந்தும், பெருமைக்காக இன்னமும் உயிர்த்திருக்கும் சொல்வழக்கு. முழுமையான வரிவடிவத்தாலும், பண்பட்ட இலக்கியத்தாலும் வளர்ந்து வந்த தமிழ், விஞ்ஞான சிறகடித்து பறக்க வேண்டிய நேரம். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழுடன் விஞ்ஞானத் தமிழும் கைகோர்த்து நடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். முதற்சுழி இட்டு இருக்கிறார் வைரமுத்து.

கடல் - கதையின் கரு. கதையின் நாயகன் கலைவண்ணன். தொன்று தொட்டு வரும் கதாநாயகர்கள் போல் புரட்சிக்காரன், பத்திரிகை ஆசிரியன். நாயகி தமிழ். பெரும் தனவந்தரின் ஒரே மகள். பனிக்குடத்தில் இருந்ததை விடவும் பாதுகாப்பாய் பன்னீர் பூவாய் வளர்க்கப்பட்டவள். கலைவண்ணணுக்கு கடல் முதற்காதல். தமிழ் இரண்டாவது. தமிழுக்கோ கடல் கல்லறைகளின் திரவவடிவம். இவர்களுக்குள் காதல். தற்செயலாய் நான்கு மீனவர்களுடன் கடலுக்குள் செல்லும் போது ஏற்படும் சம்பவங்கள் தான் கதைக்களம்.

விஞ்ஞான காவியம் படைக்க முற்படும் போது, சற்று நவீன கதைக்களத்தை முயன்று இருக்கலாம். சயின்ஸ் பிக்ஷன் (Science Fiction) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நாவல்களை மனதில் கொண்டு தான் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ஒரு சிறுகதைக்கான கருவை வைத்துக்கொண்டு காவியம் படைக்க முயற்சி செய்து இருக்கிறார் வைரமுத்து. நாவல் முழுவதும் புள்ளிவிவரங்களாய் விஞ்ஞானம் தெளிக்கப்பட்டு இருக்கிறது. கதையோடு பிணையப்படவில்லை. வைரமுத்துவின் கருவாச்சி காவியத்தை படித்துவிட்டு இந்த புத்தகத்தை படிக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதல் அடியில் எந்த குழந்தையும் நடப்பதில்லை. அதற்காக குழந்தைகளை நாம் வெறுப்பதில்லை. ஒரு புதிய பாதையில் வைரமுத்து அடியெடுத்து வைத்திருக்கிறார். நாமும் துணையிருப்போம். தமிழ் வளர்ப்போம் !!!

நீங்களே படித்து பாருங்கள். உங்கள் கருத்து வேறாக இருக்கலாம்.

கருத்துகள்

 1. //கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி. பொய்யென்று தெரிந்தும், பெருமைக்காக இன்னமும் உயிர்த்திருக்கும் சொல்வழக்கு.//
  வைரமுத்து தமிழகத்தின் வள்ளுவரோ அல்லது தொல்கப்பியரோ அல்ல திரைப்படத்தின் பாடல் ஆசிரியர் அவ்வளவே மொழி அறிஞ்சர் அல்லவே .கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்பது வெறுமனே ஏட்டளவில் இருப்பதல்ல அது கருத்தும் அல்ல வைரமுத்துபோல் உள்ள பணத்திற்கு பட்டு எழுதியதும் அல்ல அது வரலாறு
  "பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
  வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்
  கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
  முற்றோன்றி மூத்த குடி ." " வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
  தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
  குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
  குடாஅது தொன்றுமுதிர் போவ்வத்தின் குடக்கும் ''

  என பழந்தமிழகம் விரிந்து இருந்தமை காட்டும் இன்று ஆப்கநித்தானம் ,
  நேப்பாளம் , பூட்டான், பங்களாதேசம் , இலங்கை , மாலத்தீவு , மடகாசுகர் , என்று பலநாடு களாகக் கிடக்கும் இந்தய துணைக்கண்டம் முழுவதுமே
  "பழந்தமிழகம் " ஆக இருந்ததை கழக (சங்க ) இலக்கியம் சுட்டிக்காட்டும் ஆக தமிழினம் இன்று போலி தனங்களை மட்டுமே உண்மையென நம்பிக்கொண்டு இருக்கிறது . கல்தோன்றி மனதொன்ற ... என்பது வெறும் வாய்மொழி அல்ல தமிழர்களின் வீர வரலாறு . .
  !

  பதிலளிநீக்கு
 2. தயாநிதி - தெளிவான கருத்துக்களுக்கு நன்றி. நான் தமிழினத்தை குறைத்து பேசவில்லை. பழங்காலத்தில் வளமுடன் வாழ்ந்து வந்தது உண்மை. ஆனால் எத்தனை காலம் தான் அதையே சொல்லிக் கொண்டு இருப்பது. முன்னேற வேண்டாமா?

  நான் பொய் என்று சொன்னது, அறிவியல். கல்லும் மண்ணும் தோன்றிய பின் தான் உயிரினங்கள் தோன்றியது. அதன் அடிப்படையில் தான் சொல்ல வந்தேன். :(

  அடுத்த முறை விமர்சனம் எழுதும் போது கவனமாக வார்த்தைகளை உபயோகிக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி :)

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு பதிவு.. தண்ணீர் தேசத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம், நாயகி தமிழ். அவளை தமிழ் மொழிக்கான குறியீடாக அற்புதமாக கையாண்டிருப்பார் வைரமுத்து..!

  பதிலளிநீக்கு
 4. உங்கள் விமர்சனம் படித்தேன் நண்பா...

  இன்றுதான் நானும் தண்ணீர் தேசத்தைப் படித்து என் வலைத்தளத்தின் பகிர்ந்தேன்...

  உங்கள் கருத்தோ நானும் ஒத்துப்போவதை உங்கள் விமர்சனம் படித்த்ப் பிறகு உண்ணர்கிறேன்...

  http://tayagvellairoja.blogspot.com/2011/09/blog-post_3429.html

  பதிலளிநீக்கு
 5. நானும் உங்கள் விமர்சனத்தை படித்தேன் நண்பா... நெறைய பேருக்கு இதே மாதிரி தான் இருக்கும் என நினைக்கிறன் :)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

இது தான் காதலா?