புதன், ஆகஸ்ட் 07, 2013

கல்வெட்டுக்கள் - புத்தகவிமர்சனம்

நீங்கள் அலுவல்களை முடித்து விட்டு வீடு திரும்பிகொண்டிருக்கும் ஒரு சாதாரண மாலை நேரம். வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது, திடீரென்று வானம் கருக்கிறது. மெலிதாக குளிர்காற்று உங்கள் முகத்தில் அறைந்து செல்கிறது. உங்களை அறியாமல் நீங்கள் கண்களை  மூடி, முதல் மழையின் மண்வாசனையை உங்கள் சுவாசப்பைக்குள் சேர்த்து வைக்கிறீர்கள். கண்களை திறந்து பார்க்கும் போது, உங்கள் வீட்டின் எதிரில் உள்ள சாலையோரத்தில் உள்ள புற்களின் மறைவில், பிறந்து பத்து நாட்களே ஆன நாய்க்குட்டிகள் இரண்டு கொஞ்சி விளையாடிக்கொண்டு இருக்கின்றன. திடீரென குழந்தையாகி போகிறீர்கள். பால்ய நினைவுகள் உங்களை ஆக்ரமிக்கின்றன. "சுச்சூ சுச்சூ" என்று சொல்லிக்கொண்டே நாய்க்குட்டிகளை கையில் எடுத்து கொஞ்சுகிறீர்கள். முதலாளியின் திட்டுக்கள்,  கொடுக்க வேண்டிய கடன் பாக்கி, குழந்தையின் படிப்பு செலவு என அனைத்தும் மறந்து போகின்றன. தெருமுனையில் சொர்க்கத்தை உணருகிறீர்கள்.

இது ஒரு அதியற்புதமான அதே சமயம் மிக சாதரணமான ஒரு நிகிழ்ச்சி. இதை பதிவு செய்வதற்கு உகந்த கருவி எது?. கவிதையா? கட்டுரையா?

கட்டுரை தான் என்கிறார் வைரமுத்து. நானும் வழிமொழிகிறேன். தமிழில் கட்டுரை இலக்கியம் இன்னும் வளரவில்லை, செழிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

கவிதை எழுத கவிஞன் வேண்டும். கட்டுரை?. யார் வேண்டுமானாலும் எழுதலாமே. உங்கள் அக/புற அனுபவங்களை உங்களுக்கு பழக்கப்பட்ட மொழி நடையில் எழுதலாமே?. கட்டுரைக்கென்று இலக்கணங்கள் இன்னும் வகுக்கப்படவில்லை. எல்லோரும் எழுத ஆரம்பிக்க வேண்டும். இன்னும் தொட்டிலிலே இருக்கும் கட்டுரை இலக்கிய குழந்தை தவழ, நடக்க, ஓடி விளையாட உதவி செய்வோம்.

கட்டுரை இலக்கியம் வளர, வைரமுத்துவின் இன்னொரு முயற்சி தான் இந்த புத்தகம். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் இலக்கிய பரப்பின் எல்லைகளையும் ஆழத்தையும் தொட்டு சென்றுள்ளார். ஒவ்வொரு கட்டுரையிலும் வேரை தேடி செல்லும் விழுதை போல, ஆழமான தேடுதலை வெளிப்படுத்துகிறார். தமிழ் இலக்கியங்களின் மிகச்சிறந்த முத்துக்களை ஆங்காங்கே தெளித்திருக்கிறார். எனக்கு பிடித்த முத்துக்களில் ஒரு சில...

யாரோடும் பகை கொள்ளலன் என்றபின்
போரொடுங்கும் புகழொடுங்காது
 - "தமிழ் கூறும் நல்லுலகு" கட்டுரையில்

அண்ணலே!
இன்று உன் ராட்டையில்
சிலந்தி தான் நூல் நூற்கிறது !
 - "புதுக்கவிதையின் பாடுபொருள்" கட்டுரையில்

பொன்னிநதி அவ்வளவு
போனரத்தம் போன பின்னர்
கன்னியரை எசுதடா உள்ளம் - இது
காலிடறி யானைவிழும் பள்ளம்
 - "எனது பார்வையில் கண்ணதாசன்" கட்டுரையில்

"வடக்கே மழைபேஞ்சு
வார்ந்த மணல் ஓடிவர
நடந்துபோ பாலகனே - உன்
நல்ல தடம் நான் பார்க்க."
(தாய்மை)

"தும்புச் செருப்பு மாட்டி
தொழுதிறக்க போற மன்னா!
தும்பைப்பூ வேட்டியிலே
துவண்ட மஞ்சள் நாந்தானா?"
(காதல்)
 - "பட்டிக்காடு குயில்கள்" கட்டுரையில்

கண்டிப்பா படிச்சு பாருங்க. கட்டுரைகள் எழுத ஆரம்பிங்க !

இந்த புத்தகத்தை இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்.

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

தமிழகத்தின் மரபுக் கலைகள் ::: புத்தகவிமர்சனம்

எந்த ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு முன்பும், அந்த புத்தகத்தின் கடைசி அட்டையில் உள்ள குறிப்புகளை படிப்பது வழக்கம். இப்புத்தகத்தில் இருந்தது இது...

"அவரை நம்பி ஒரு மாடு! வீதிகளை நம்பி ஒரு வேடம்! காலத்தை நம்பி ஒரு கலை! சரியாகச் சொன்னால் பூம்பூம் மாடு ஒரு கலை அல்ல... தொழிலும் அல்ல... யாசகமும் அல்ல... பின் என்னவாம்?. இவை மூன்றின் ஒருங்கிணைப்பு! இரண்டு உயிர்களை முன்னிருத்திப் பல உயிர்களின் பசியாறல்! வாழ்தல்!"

எனக்கு ஒரே குழப்பம். என்னடா, மரபு கலைகள்-னு பேர் வச்சிட்டு பூம்பூம் மாட்ட பத்தி பேசறாரே-னு. புத்தகத்த திறந்து பாத்தப்ப தான் தெரிஞ்சது, தமிழ்நாட்ல இத்தன மரபு கலைகளா-னு.

கலைகள்-னு சொன்ன உடனே நமக்கு ஞாபகத்துக்கு வர்றது பரதநாட்டியம், நாடகம் அல்லது எதாவது ஒரு இசைக்கருவி சம்பந்தப்பட்ட கலை. ஆனா, இதை தவிர, தமிழ்நாட்டில் - நம்ம கிராமங்கள்-ல பல்வேறு விதமான கலைகள் நூற்றுக்கணக்கான வருஷங்களா, மரபுவழி மாறாமல், வாழ்ந்துட்டு வருது. இப்ப கொஞ்ச காலமா, நிறைய கலைகள் அழிஞ்சிட்டும் வருது. அந்த மாதிரி கலைகளை மரபுகலைகள் -னு சொல்றாரு ஆசிரியர்.

மரபுக்கலைகளை இரண்டு விதமாக பகுத்து வைத்திருக்கின்றார்கள்.

நிகிழ்த்துக்கலைகள் - நிகிழ்த்துவதாலே நிகிழ்த்துக்கலைகள். ஆடல், பாடல், அசத்தும் இசைநயம், ஒப்பனை, பற்பல உடையலங்காரம், அரங்கம் அல்லது வீதியில் தகுந்த நேரத்தில் நிகிழ்த்தப்படுவது. பெரும்பாலும் புராணம் அல்லது சமூக கருத்துகளை ஒட்டி இருக்கும்.

கைவினைக்கலைகள் - கலைஞர்களின் தொழில் திறமையை கலைநேர்த்தியோடு வெளிப்படுத்தும் கலைகள். இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் மக்களின் தினசரி பயன்பாட்டுக்கும், தெய்வ வழிப்பாட்டுக்கும், நிகிழ்த்துக்கலைகள் நடத்தவும், அரசகுடும்பங்களின் வீடுகளில் ஆடம்பரபொருளாகவும் பயன்படுகின்றன. இந்த நவீன யுகத்திலும் இன்னமும் மரபு வழியாகவே தயாரிக்கப்படுகின்றன.

ஆசிரியர் எழிலவன் ஒவ்வொரு கலைக்காக பல ஊர்களுக்கு சென்று, அந்தந்த கலைஞர்களை சந்தித்து, உரையாடி பெற்ற ஆவணங்களின் தொகுப்பு தான் இந்த புத்தகம். அழிந்து வரும் பல மரபுக்கலைகளை ஆவணப்படுத்திய ஆசிரியரின் களப்பணி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. ஒவ்வொரு கலையையும் பற்றி நிறைய விஷயங்களை தொய்வில்லாமல் விளக்கியுள்ளார். தமிழகத்தின் மரபுகளை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள மரபுக்கலைகள்:

நிகிழ்த்துக்கலைகள்:
 1. பூம்பூம் மாடு
 2. பகல்வேடம்
 3. தீச்சட்டி ஆட்டம்
 4. குடமுழவம் இசைப்பு
 5. மெலட்டூர் பாகவத மேளா
 6. குறவன் குறத்தி நடனம்
 7. காளியாட்டம்
 8. மன்மதன் நாட்டிய நாடகம்
 9. தெருக்கூத்து
 10. இலாவணி
 11. தோற்ப்பாவை கூத்து
 12. கும்மி
 13. வில்லுப்பாட்டு
 14. புலியாட்டம்
 15. பொம்மலாட்டம்
 16. சிலம்பம்
 17. மயிலாட்டம்
 18. காவடியாட்டம்
 19. கரகாட்டம்
 20. கோலாட்டம்
 21. தப்பாட்டம்
 22. மாடு ஆட்டம்
 23. பொய்க்கால் குதிரையாட்டம்
 24. உடுக்கையாட்டம்
 கைவினைக்கலைகள்:
 1. மண்பாண்டக் கலை
 2. மூங்கில் கலை
 3. பாய் முடைதல்
 4. நாதசுரம் செய்யும் கலை
 5. தஞ்சை ஓவியங்கள்
 6. பட்டு நெசவு
 7. பிரம்புக்கலை
 8. மண்பொம்மைகள்
 9. வெண்கலத் தொழில்
 10. வீணை உருவாக்கம்
 11. சிற்பக்கலை
 12. கலைத்தட்டு உருவாக்கம்
 13. மரச்சிற்பக் கலை
 14. உலோகச்சிற்ப உருவாக்கம்
இந்த புத்தகத்தை வாங்க, கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Blackhole Media Publication Limited
75, ஏகாம்பர தபேதார் தெரு
ஆலந்தூர், சென்னை 600016
தொலைபேசி: +91-44-4353-4303/04
தொலைநகல்: +91-44-4353-4305
மின்னஞ்சல்: admin@blackholemedia.in
வலைத்தளம்: http://blackholemedia.in/node/116