கி.மு. கி.பி. - புத்தகவிமர்சனம்

நான் முதன் முதலில் வாசித்த மதனுடைய புத்தகம் "வந்தார்கள் வென்றார்கள்". மிக மிக அழகாக ஒரு நாவல் வடிவில் இருக்கும். வரலாறை அவ்வளவு சுவாரசியமாக சொல்ல மதனால் மட்டும் தான் முடியும் என்பது என் கருத்து. அன்று முதல், மதன் என்கிற பெயர் இருந்தால் போதும். அந்த புத்தகத்தை வாங்கி விடுவேன். இந்த புத்தகமும் அப்படித்தான். "கி.மு. கி.பி." என்று பெயர் வைத்திருந்ததால் மொத்த உலக வரலாறே இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கி.மு. பற்றி மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகு ஏன் இந்த தலைப்பு என்று தெரியவில்லை. குமுதம் இதழில் ஒரு வரலாற்று தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது. இப்போது புத்தக வடிவில்.

முதல் "ஆதிமனிதன்" ஒரு பெண் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. இதுதான் இந்த புத்தகத்தின் முதல் வரி. ஆதாரம் : மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவள் விட்டு சென்ற காலடித்தடம் மற்றும் மைட்டோ காண்ட்ரியல் டி.என்.எ.(Mitochondrial DNA). படித்தவுடன் எனக்கு தோன்றியது ஒரே விஷயம் தான். பத்து வருஷம் கழிச்சி, இதைவிட ஒரு பழமையான ஆணோட டி.என்.எ. கிடைத்தால் அறிவியல் உலகம் முதல் மனிதன் ஒரு ஆண் என சொல்லும். மிக சாதரணமான கேள்வி இது. மதனுடைய புத்தகத்தில் நான் எதிர்பார்த்தது, அறிவியல் சொல்லுவதை அப்படியே மொழிபெயர்க்காமல், அவருடைய நகைச்சுவை கலந்த திறனாய்வுடன் கூடிய கட்டுரைகள்.

இது கதையோ, கவிதையோ அல்லது அவருடைய சொந்த படைப்புகளோ அல்ல. உலக வரலாறு. படிக்கும் வாசகன் மனதில் ஆயிரம் கேள்விகள் நிச்சயம் எழும். அவற்றுக்கான பதில்களை அந்த புத்தகத்தினூடே சொல்லும் போது தான் அந்த புத்தகம் முழுமை பெறுகிறது என்பது என்னுடைய கருத்து. மற்றபடி, சுவாரசியம் குறையாமல் அழகாக வரலாறை சொல்கிறார்.

உலகம் தோன்றிய காலம், பரிணாம வளர்ச்சி, மனிதர்கள், நீயண்டர்தால் மனிதர்கள், பிரளயம் என ஆரம்பித்து பழங்கால நாகரிகங்கள், கிரேக்க வரலாறு, ஏதென்ஸ் வரலாறு, தத்துவங்கள் மற்றும் கலைகள் வளர்ந்த வரலாறு, வரலாற்றை செதுக்கிய முக்கிய சிற்பிகளின் வாழ்க்கை என முக்கியமான அனைத்தையும் தொட்டு செல்கிறார். கடைசி சில அத்தியாயங்கள் இந்திய மன்னர்கள் பற்றியும் விவரிக்கிறார். சந்திரகுப்தர், சாணக்கியர், அசோகர் என பலருடைய வாழ்கையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் உலக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழில் ஒரு நல்ல புத்தகம்.

கருத்துகள்

  1. http://senthilrajamv-tamil.blogspot.com/2011/10/2.html

    பதிவுலகில் தொடராக அதை எழுதி வருகிறார் ஒருவர், அதனுடைய இரண்டாம் பாகத்தின் வலை முகவரி, மேலும் முதல் பாகத்தின் சுட்டியை அதிலேயே கொடுத்துள்ளார்.. தொடர்ந்து எழுதுவார் என்றும் நம்புகிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்

தேசபற்று !!!

திருநங்கைகள் உலகம் - புத்தகவிமர்சனம்