திங்கள், டிசம்பர் 26, 2011

பிரிவென்னும் ஒரு சொல் !


பிரிவென்னும் ஒரு சொல்லின், அறியாத பொருளொன்று
உனை பிரிந்த ஒரு நாளில், முழுவதுமாய் புரிந்ததடி ...
விழி பேசும் மொழி ஒன்று, சிறுதுளியாய் விழுமென்று
துணை பேச நீயின்றி, தனியாக கண்டேனடி ...

நெடுநாட்கள் நான் மறந்த, நிலவோடு பேசுகிறேன்
தொடுவானம் வரை பறந்த, நினைவுகளை யோசிக்கிறேன்
குளிர்தென்றல் எனை தீண்ட, உன் சுவாசம் தேடுகிறேன்
நள்ளிரவில் தனியாக, உன் பெயரை பாடுகிறேன் ...

விரல் வரைந்த கோலங்கள், துணி மறந்த நேரங்கள்
போர்வைக்குள் இருவரும் போர் புரிந்த காலங்கள்
எனை வந்து கொல்லுதடி... என்னுயிரை மெல்லுதடி
தாலாட்டு முத்தமின்றி உயிர் பிரிந்து செல்லுதடி ...

பனி உறையும் நள்ளிரவும் தனிமையிலே தவிக்குதடி
உன் மூச்சு வெப்பத்தில் குளிர் காய துடிக்குதடி
அதிகாலை சூரியனும் மெதுவாக உதிக்குதடி
நம் வீட்டு ரோஜாக்கள் மொட்டு விட மறுக்குதடி...

சிறு உளியும் மலை பிளக்கும்
சிறு பிரிவும் உயிர் பிளக்கும்
பிரிவுற்று துயரடையா உறவொன்றை தந்து விடு
கடல் சேர்ந்த மழை நீராய் என்னுயிரில் நின்று விடு !...

காத்திருக்கிறேன் காதலுடன் !...

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

நெடுஞ்சாலை இரவுகள் ...


விண்ணில் இருந்த தேவதை, மண்ணுக்கு வந்த நேரமோ
கண்ணன் என் மனதினில் பூங்கோதையின் ராகமோ
தன்னந்தனியே நிலவும் வானில் என்ன செய்யுமோ
உன்னைப் பிரிந்த வலியில் தேய்ந்தொழிந்து போகுமோ

ரயில் போகும் பாதையாய் நாமிருவர் செல்ல
கைகோர்க்கும் நேரத்தில் பூ மலரும் மெல்ல
உயிர் திருடும் முயற்சியில் என் கண்கள் வெல்ல
அதையுணர்ந்த கைகள் இடையணைத்து கொள்ள

கைதொடும் தூரத்தில் வெண்ணிலவு இருக்க
நான்தொடும் நேரத்தில் சொர்க்கமது திறக்க
வானவெளி வீதியில் நாமிருவர் மிதக்க
நட்சத்திர சாரலில் பூமிதனை மறக்க

நெடுஞ்சாலை இரவுகள் நம் காதல் சொல்லுதே
புலராத பொழுதுகள் நமைப் எழுப்பி செல்லுதே
தனிமையின் இனிமையில் இருவுயிர் குளிருதே
பனித்துளி ஒன்றிங்கே சூரியனை அணைத்ததே

உயிருள்ள சிற்பமாக,உறையட்டும் இந்த நொடி ...
பூந்தென்றல் வாசமாக, வீசட்டும் நம் காதல் நெடி ...
உயிரை வருடும் உணர்வினில் எல்லாம்
உயிர்த்திருப்போம் அது போதுமடி !...

வியாழன், அக்டோபர் 20, 2011

அணு - அதிசயம் - அற்புதம் - அபாயம் -- புத்தகவிமர்சனம்


"அணுவின் துகளை நெஞ்சில் வீசி, அருகில் நின்று அழகாய் சிரித்தாள்" - என் காதலியை பற்றி நான் எழுதிய ஒரு கவிதையின் தொடக்கம் இப்படி. ஆனால் அந்த கவிதை எழுதும் போது அணுவை பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் அணுகுண்டு, அணு உலை மட்டும் தான். அணுகுண்டு வெடிக்கும். அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளிப்படும். அவ்வளவு தான். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், அணுவை பற்றிய என் கருத்துக்கள் அனைத்தும் மூடநம்பிக்கைகளாக தெரிந்தன. ஆசிரியருக்கு நன்றி.

அணுக்களை பற்றி மிக அடிப்படையான விஷயத்தில் இருந்து ஆரம்பித்து, மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகள் வரை நம்மை அழைத்து செல்கிறார். மிக இயல்பான உரைநடையில் அறிவியலை திகட்டாமல் ஊட்டுகிறார். முதல் அத்தியாயத்திலேயே ரசவாதத்தை பற்றி விவாதித்து, அது ஏன் சாத்தியமில்லை என்பதை அணுக்களின் மொழியில் விளக்குகிறார்.

கதிரியக்கம், அணுபிளப்பு, அணுசேர்க்கை, அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு போன்றவற்றை பற்றி விளக்கும் போது, அவை உருவாக்கபட்ட காலநிலைகள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு, அரசியல் சூழ்நிலைகள் என ஒரு கதையை போல் அழகாக சொல்லி இருக்கிறார். அணுசேர்க்கை, அணுபிளப்பு ஆகியவற்றுக்கு தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கி விரிவாக விளக்குகிறார். அணுசேர்க்கை கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் சாத்தியமானால் உலகத்தின் மின்சாரத் தேவையை கதிரியக்க ஆபத்துக்கள் இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும் என்பது எனக்கு புதிய செய்தி. அணுக்கள் மட்டும் இல்லாமல், கடைசி சில அத்தியாயங்களில் சூரியன், நட்சத்திரம், அண்டவெளி, பொருள், எதிர்பொருள் என முழுவதையும் அழகாக விளக்குகிறார்.

இந்த புத்தகத்தில் ஒரே குறை. மிக நீளமான அத்தியாயங்கள். அளவை குறைத்து இருக்கலாம், அல்லது பல அத்தியாயங்களாக பிரித்து இருக்கலாம். அறிவியலில் ஆர்வம உள்ளவர்களுக்கு இது படிக்க வேண்டிய புத்தகம். அறிவியல் பற்றி தெரியாதவர்கள் இதை படித்தால், கண்டிப்பாக அறிவியலில் ஆர்வம வரும் என நம்புகிறேன்.

இந்த புத்தகத்தில் இருந்து பல புதிய அறிவியல் வார்த்தைகளை தமிழில் கற்றுக்கொண்டேன். அவற்றுள் சில.

ரசவாதம் - Alchemy
அணுபிளப்பு - Nuclear Fission
அணுசேர்க்கை - Nuclear Fusion
கதிரியக்கம் - Radio Activity
கதிரியக்க அணுச்சிதைவு - Radioactive Decay
கன நீர் - Heavy Water
நிலக்கரி தூசு - Fly Ash
அணு உலை - Reactor
ஈனுலை - Breeder Reactor

அணுவை பற்றிய ஆராய்ச்சிகள் மேலைநாடுகளில் தழைத்து வளர்ந்ததால் பெயர்கள் ஆங்கிலத்தில் இருப்பதில் வியப்பில்லை. என் மனதில் ஒரு கேள்வி. அத்தனை பெயர்களையும் தமிழ்ப்படுத்தலாமா?. அல்லது ஆங்கில வார்த்தைகளை அப்படியே அணைத்துக் கொள்ளலாமா ?

ஐசொடோப்பு - தமிழ் வார்த்தை என்ன?

இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்

சனி, அக்டோபர் 15, 2011

பூக்கள்பூக்கள் சிரித்து முத்தமிடும்
பூக்கள் மெலிதாய் சத்தமிடும்
பூக்கள் காதலில் உளரும்
பூக்கள் மோதலில் அலறும

பூக்கள் கொதித்து எரியும்
பூக்கள் வெடித்து சிதறும்
பூக்கள் சிவந்து குளிரும்
பூக்கள் குளிர்ந்து மலரும்

பூக்கள் மீண்டும் சிரிக்கும் !...

பூக்களின் சாயத்தை
நடுசாமத்தில் வெளுத்தவளே ...
காமத்தின் ஆழத்தை
கண்மூடி காட்டியவளே ...

நரம்பெல்லாம் புடைக்க
தசையெல்லாம் இறுக்க
உடம்புக்குள் வெடிக்க
மூச்சங்கு அடைக்க
உயிருக்குள் வலிக்க
உதடுகள் சிரிக்க ...

நானறிந்த வித்தையின்
நானறியா பக்கத்தில்
நாம் எழுதிய ஓர் கவிதை
நாளும் சொல்லும் நம் உறவை !...

வெள்ளி, அக்டோபர் 07, 2011

தேவதையே... தேவதையே...


வானவில்லில் கருவண்ணம் காணாமல் போனதென்ன
என்னவளின் புருவங்கள் என்றுதான் ஆனதென்ன
காதோரம் உன் மூச்சுக்காற்று சூடேற்றும் வேகமென்ன
அணிதிரண்ட உன்பெண்மை அநியாயம் செய்வதென்ன !...

இதழோடு இதழ் சேர்த்து உணவை நான் ஊட்டுவேன்
மடிமீது தலைசாய்த்து தினமும் தாலாட்டுவேன்
நாவால் உன் மேனியில் ஓவியம் பல தீட்டுவேன்
வள்ளுவனின் மூன்றாம் பாலை துளித்துளியாய் ஊற்றுவேன் !...

அணைத்தவுடன் எரியும் அதிசயம் உன் தேகமோ
நினைத்தவுடன் உருகும் புதுசுகம் தான் மோகமோ
என் காதல் நரம்புகளில் சிறுத்தையின் வேகமோ
செங்காந்தள் பூச்சூடிய பெண்மேனி தாங்குமோ !...

பல கோடி மின்னல்கள் எனை வந்து தாக்குதடி
உன்னுயிரில் நான் இணையும் அந்தவொரு நொடியிலே !...
சில நூறு ஜென்மங்கள் நான் வாழ்ந்து முடிக்கிறேன்
மார்போடு நீ சிணுங்கும் நள்ளிரவு வேளையிலே !...

மன்மத வெள்ளம் உன்னிடம் செல்லும்
உன்னத நேரம் நம் விழியோரம்
மோகத்தின் பேய்மழை மூர்க்கமாய் பெய்தும்
முடிக்கின்ற வேளையில் சாரலாய் காதல் !...

...
...
...

தேவதையே... தேவதையே...
தேன் சுரக்கும் பூவிதழே...
உன் தாய் சுமந்த தேகமதை
நான் சுமக்கும் காலம் எது ?...

புதன், அக்டோபர் 05, 2011

கி.மு. கி.பி. - புத்தகவிமர்சனம்


நான் முதன் முதலில் வாசித்த மதனுடைய புத்தகம் "வந்தார்கள் வென்றார்கள்". மிக மிக அழகாக ஒரு நாவல் வடிவில் இருக்கும். வரலாறை அவ்வளவு சுவாரசியமாக சொல்ல மதனால் மட்டும் தான் முடியும் என்பது என் கருத்து. அன்று முதல், மதன் என்கிற பெயர் இருந்தால் போதும். அந்த புத்தகத்தை வாங்கி விடுவேன். இந்த புத்தகமும் அப்படித்தான். "கி.மு. கி.பி." என்று பெயர் வைத்திருந்ததால் மொத்த உலக வரலாறே இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கி.மு. பற்றி மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகு ஏன் இந்த தலைப்பு என்று தெரியவில்லை. குமுதம் இதழில் ஒரு வரலாற்று தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது. இப்போது புத்தக வடிவில்.

முதல் "ஆதிமனிதன்" ஒரு பெண் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. இதுதான் இந்த புத்தகத்தின் முதல் வரி. ஆதாரம் : மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவள் விட்டு சென்ற காலடித்தடம் மற்றும் மைட்டோ காண்ட்ரியல் டி.என்.எ.(Mitochondrial DNA). படித்தவுடன் எனக்கு தோன்றியது ஒரே விஷயம் தான். பத்து வருஷம் கழிச்சி, இதைவிட ஒரு பழமையான ஆணோட டி.என்.எ. கிடைத்தால் அறிவியல் உலகம் முதல் மனிதன் ஒரு ஆண் என சொல்லும். மிக சாதரணமான கேள்வி இது. மதனுடைய புத்தகத்தில் நான் எதிர்பார்த்தது, அறிவியல் சொல்லுவதை அப்படியே மொழிபெயர்க்காமல், அவருடைய நகைச்சுவை கலந்த திறனாய்வுடன் கூடிய கட்டுரைகள்.

இது கதையோ, கவிதையோ அல்லது அவருடைய சொந்த படைப்புகளோ அல்ல. உலக வரலாறு. படிக்கும் வாசகன் மனதில் ஆயிரம் கேள்விகள் நிச்சயம் எழும். அவற்றுக்கான பதில்களை அந்த புத்தகத்தினூடே சொல்லும் போது தான் அந்த புத்தகம் முழுமை பெறுகிறது என்பது என்னுடைய கருத்து. மற்றபடி, சுவாரசியம் குறையாமல் அழகாக வரலாறை சொல்கிறார்.

உலகம் தோன்றிய காலம், பரிணாம வளர்ச்சி, மனிதர்கள், நீயண்டர்தால் மனிதர்கள், பிரளயம் என ஆரம்பித்து பழங்கால நாகரிகங்கள், கிரேக்க வரலாறு, ஏதென்ஸ் வரலாறு, தத்துவங்கள் மற்றும் கலைகள் வளர்ந்த வரலாறு, வரலாற்றை செதுக்கிய முக்கிய சிற்பிகளின் வாழ்க்கை என முக்கியமான அனைத்தையும் தொட்டு செல்கிறார். கடைசி சில அத்தியாயங்கள் இந்திய மன்னர்கள் பற்றியும் விவரிக்கிறார். சந்திரகுப்தர், சாணக்கியர், அசோகர் என பலருடைய வாழ்கையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் உலக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழில் ஒரு நல்ல புத்தகம்.

இணையம் வழியே புத்தகமாக பெற இங்கே சுட்டவும்.

இணையம் வழியே ஒலி-புத்தகமாக பெற இங்கே சுட்டவும்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

நிலவோடு நான் பேசும் நேரம் ...


நிலவோடு நான் பேசும் நேரம்
காற்றில் உன் காதலின் ஈரம்
பனி பொழியும் நள்ளிரவின் நீளம்
கண் இமைக்கும் ஒருநொடியாய் மாறும்

நிலவும் முகிலும் இணையும் நேரம்
உடலும் உயிரும் உனையே தேடும்
குளிரும் இரவில், நிலவின் ஒளியில்
காமன் மொழியில் காதல் சொல்வேன்

இரவினில் கடலினில், அலைதொடும் கரையினில்
கார்மேக கூந்தலும் அசைந்தாடும் இசையினில்
கடல் சூழ்ந்த தீவென, எனை சூழ்ந்தாய் ஒருமுறை
சுழல் வீழ்ந்த மீனென, நான் வீழ்ந்தேன் முதல்முறை

மணலினில் மெத்தையும், மார்பினில் தத்தையும்
பெண்தேவை தானுணர்ந்த கைவிரல் வித்தையும்
நானறிந்து இசை மீட்ட, கொடியிடையில் தீ மூட்ட
என்தோளில் முகம் புதைத்து பற்காவியம் நீ தீட்ட

கடற்கரை மணல்நமக்கு, உடையென உருமாற
அச்சமும் கூச்சமும் எதிர்பதமாய் தடம்மாற
வெட்கத்தில் வெண்ணிலா மேகத்தில் மறைந்தோட
விண்மீன்கள் கூட்டமாய் நமைபார்த்து தலையாட்ட

கடலலை கால் தொட, உயிர் வரை நீ தொட
சிகரங்கள் நான் தொட, சிறகுகள் வான் தொட
இருவுயிர் இணைந்திட, இமைகளும் நனைந்திட
இனிக்கின்ற ஒருகலையை இயல்பாக நாமறிந்தோம் !...

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

போகாதீங்க மாமா !...


பஞ்சு மெத்தை தலைகாணி
பன்னீர் தெளிச்சு வச்சாலும்
பாவிமக கண்ணுக்குள்ள
தூக்கம் மட்டும் இல்ல மாமா !...

கண்ணுக்குள்ள நீயிருக்கன்னு
கண்ணு முழிச்சி நான் கெடக்கேன்
தனியா என்னை தவிக்க விட்டு
தூரதேசம் போனதேன் மாமா !...

பொறையேறி விக்கும் போதும்
கண்ணு கலங்கி நிக்கும் போதும்
உள்ளுக்குள்ள சிரிப்பு மாமா !...
உன்னோட நெனைப்பு மாமா !...

மல்லிப்பூவு வாசம் உனக்கு
மனசு பூரா புடிக்குமுன்னு
குண்டுமல்லி பூவச்சூடி
பூவப் போல இருக்கேன் மாமா !...

லவுக்கை இல்லா மாராப்பு
மச்சான் உனக்கு புடிக்குமுன்னு
கந்தாங்கி சீலை கட்டி
கச்சிதமா இருக்கேன் மாமா !...

குட்டி குட்டி ஆசையெல்லாம்
எட்டி எட்டி பாக்குது மாமா !...
எட்டு வாளி தண்ணி இறைச்சும்
காய்ச்சல் மட்டும் போகல மாமா !...

நேந்துவிட்ட காளையெல்லாம்
மீசை வளர்த்து சுத்துது மாமா !...
நீயில்லாத சாமத்துல
வீட்டுக் கதவ தட்டுது மாமா !...

வாடாமல்லி வாடுமுன்ன
வண்டி வச்சி வந்துடு மாமா !...
நெலாவும் பூமியும் உலாவுற வரைக்கும்
என்னை விட்டு போகாதீங்க மாமா !...

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - புத்தகவிமர்சனம்பழனியில் என் நண்பன் திருமணத்தில் கலந்துவிட்டு ஈரோடு திரும்பி வந்துகொண்டிருந்தேன். தாராபுரத்தில் பேருந்து நின்றவுடன், நடத்துனரிடம் "ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன் அண்ணே" என்று சொல்லிவிட்டு அவசரமாக ஓடினேன். திரும்பி வரும்போது பேருந்து அங்கு இல்லை. சிரித்துக்கொண்டே அடுத்த பேருந்துக்கு காத்திருக்கும் வேலையில் எதிரில் இருந்த புத்தகக்கடையில் நிலாரசிகனின் "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" புத்தகத்தை பார்த்தேன். இவருடைய "வெயில் தின்ற மழை" கவிதை தொகுப்புக்கு பிறகு நான் படிக்கும் இரண்டாவது புத்தகம்.

முதல் கதை - "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை பற்றியது. "நல்லா சந்தோஷமா தானே போயிட்டு இருந்த... எதுக்கு இத வாங்குன?" எனக்குள் நானே பேசிக்கொண்டேன். ஆறே பக்கங்களில் இதயத்தை இத்தனை கனக்க செய்ய முடியுமா?. மேற்கொண்டு படிக்க விருப்பப்படவில்லை. புத்தகத்தை மூடவும் மனமில்லை. நெரிசலான பேருந்தில் நின்றுகொண்டே படிக்க தொடங்கினேன். இருள் மெல்ல கவிழத்தொடங்கியது.

அடுத்து "சங்கமித்திரை" - அழகி திரைப்படத்தை ஏனோ நினைவுப்படுத்தியது. "வேட்கையின் நிறங்கள்" - மிக அழகாக ஓரின சேர்க்கையை விவரித்தது. மூத்த எழுத்தாளர்களே எழுத யோசிக்கும் விஷயம். தெளிவாக எழுதி இருந்தார் நிலாரசிகன். "ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு 'ஏ' பிரிவு" - கண்கள் கலங்கியது. அழகான கவிதை படிக்க தொடங்கும் முன்பே முடிந்தது போன்ற ஒரு உணர்வு.

மூன்று தொலைபேசி அழைப்புகளை தொடர்ந்து ஒரு குறுந்தகவல் - தோழியிடமிருந்து. மனமில்லாமல் புத்தகத்தை மூடிவிட்டு தோழியுடன் பேச ஆரம்பித்துவிட்டேன். நான்கு நாட்கள் கழித்து திரும்பவும் படிக்க துவங்கினேன். சில சிறுகதைகள் சாதரணமாக இருந்தன. ஆனாலும் தொடர்ந்து படித்தேன். "தாய்மை" - மிக அருமை. கிராமத்து பெண்களின் வெள்ளந்தியான மனசும், ஆண்களின் முன்கோபங்களும் அருமையாக படம்பிடிக்கப்பட்டு இருக்கிறது.

"அப்பா சொன்ன நரிக்கதை" - சில ஆண்களின் மேல் கடுங்கோபத்தை வரவழைத்தது. மூன்று முறை படித்த பிறகே கதை புரிந்தது. அருமை. கடைசி வரியில் மொத்த கதையின் போக்கை மாற்றி, மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது இவரது பாணி என்று நினைகிறேன். கவிஞன் என்ற பரிமாணத்தில் இருந்து கதாசிரியர் என்ற பரிமாணத்திற்கு மிக இயல்பாக சென்றிருக்கிறார். இவரது கவிதைகளை போலவே, பல கதைகள் மிக அழகு.

கண்டிப்பாக படிக்கலாம். ஆனால் படித்தப்பின் உங்கள் இதயம் கனத்தால் அதற்கு நிலாரசிகன் தான் பொறுப்பு.

வெளியீடு : திரிசக்தி பதிப்பகம்
56/21, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை - 600 020
விலை : ரூ. 70/-
தொலைபேசி : 044 4297 0800
மின்னஞ்சல் : trisakthipublications@trisakthi.com

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

அவள் !


அணுவின் துகளை நெஞ்சில் வீசி
அருகில் நின்று அழகாய் சிரித்தாள் ...
ஆயிரம் எரிமலை என்னுள் வெடிக்க
குளிரும் இரவில் கைகள் கோர்த்தாள் ...

நானும் நானென அவளும் அவளென
இருப்பது பிடித்தது - இருமுறை சொன்னாள் ...
இரவும் பகலும் உன்னுடன் இருந்தும்
எல்லை மீறா கண்ணியம் என்றாள் ...

பெண்மையின் மென்மையை அறியாத ஆண்மை
கேலிகள் செய்து கோபங்கள் தந்தாள் ...
கோபத்தில் ஒருமுறை அறைந்திட வேண்டும்
கன்னங்கள் காட்டி பலமுறை கேட்டாள் ...

உறவுகள் மத்தியில் பேசிய பொய்கள்
உன்னிடம் மட்டும் உண்மை என்றாள் ...
உதடுகள் அதனை சொல்லும் முன்னே
கண்ணில் சிறுதுளி நீருடன் நின்றாள் ...

முழுவதும் உன்னை தெரிந்திட வேண்டும்
கேள்வி கணைகள் ஆயிரம் தொடுத்தாள் ...
இதுவரை நானும் அறிந்திரா உறவை
உயிரில் ஊட்டி உணர்ந்திட சொன்னாள் ...

அன்பாய் தோளில் சாய்ந்து கொண்டு
மழலை மொழியில் கதைகள் சொன்னாள் ...
தென்றல் கூந்தலை கலைக்கும் போது
கிறங்கும் கண்ணில் ஒழுக்கம் தொலைத்தாள் ...

தனியே இரவில் சிணுங்கும் நிலவை
கவிதைகள் பாடி தூங்க வைத்தாள் ...
சூரியன் வந்து உதிக்கும் போதும்
இன்னும் கொஞ்சம் நேரம் என்றாள் ...

உன்னுடன் இருக்கும் நேரம் யாவும்
காலைப் பூவின் பனித்துளி என்றாள் ...
தனியே நானும் தவிக்கும் தருணம்
தீயில் இட்ட இறகுகள் என்றாள் ...

யாருமற்ற சாலை முடிவில்
மீண்டும் ஒருமுறை நடப்போம் என்றாள் ...
பிரிவுகள் அற்ற உறவுகள் வேண்டும்
பிரியும் நேரம் கண்ணால் சொன்னாள் ...

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

ஒரு கவிதையின் பயணம் !...


கம்பனும் தாமரையும்
பயணித்த பாதை தான் !..
உன் மனமும் என் மனமும்
ஒருமித்த பாதை தான் !..
நீ பேசும் பேச்சுக்கே
பூ பூத்த பாதை தான் !..
செந்தமிழில் நீ பாட
தேன் சுரக்கும் பாதை தான் !..

மழைத்துளிக்கு காத்திருந்தேன்
கவியருவி பொழிகின்றாய் !..
என் உயிர்வலியில் ஒரு துளியை
உணர்வாக புனைவாயோ ?

நிலமெல்லாம் நிலவாக
நீ நடந்து செல்கின்றாய் !..
என் கனவெல்லாம் நனவாக
கவியொன்றை சொல்வாயோ?

உலகில் உள்ள கவிகள் எல்லாம்
ஒன்றாய் கூடி, நன்றாய் பாடி
முயன்று பார்த்து தோற்று போயினர்
உன் கண்கள் பேசிய கவிதைகள் கோடி !..

நீயே கவிதைகள் பாடினால் ...

நெடுவனங்கள் சருகாகி
பூவனங்கள் ஆகுமடி ...
கொடும்புலியும் பொன்மானும்
காதல் சொல்லி திரியுமடி ...

இயற்கையை மாற்றாதே
பூமி இங்கு தாங்காதடி ...
காதல் ஒளி கூட்டாதே
சூரியன் மட்டும் போதுமடி ...

ஊற்றெடுத்த முதல்கவியில்
சிறகுகள் முளைக்குதடி !..
முற்றுப்புள்ளி வேண்டாமென
இதயங்கள் துடிக்குதடி !..

- கவி பாடும் என் தேவதைக்கு !

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

ரொம்ப அழகா இருக்கு !...


தமிழ் அழகா ?
தமிழ் பேசும் இதழ் அழகா ?...

இசை அழகா ?
இசை கொஞ்சும் சிரிப்பழகா ?...

இருள் அழகா ?
இருள் கவிழும் குழல் அழகா ?...

நிலவு அழகா ?
நிலவாய் குளிரும் முகம் அழகா ?...

மேகம் அழகா ?
மேகமாய் மிதக்கும் அவள் தேகம் அழகா ?...

இளமை அழகா ?
இளமையில் இவள் மட்டும் அழகா ?...

உண்மை அழகா ?
உண்மையை மறைக்கும் அவள் கண்மை அழகா ?...

பாவங்கள் அழகா ?
பாவங்கள் செய்யும் அவள் பார்வைகள் அழகா ?...

பருவங்கள் அழகா ?
பருவத்தில் பூரித்த துருவங்கள் அழகா ?...

மர்மங்கள் அழகா ?
மர்மமாய் இருக்கும் அவள் மச்சங்கள் அழகா ?...

முத்தங்கள் அழகா ?
முத்தங்கள் விட்டுச்செல்லும் எச்சங்கள் அழகா ?...

மோகங்கள் அழகா ?
மோகத்தில் எரியும் நம் தேகங்கள் அழகா ?...

தோல்விகள் அழகா ?
தோற்ற பின்னும் சிரிக்கும் வேள்விகள் அழகா ?...

காமங்கள் அழகா ?
காமம் தீர்ந்தும் வாழும் காதல்கள் அழகா ?...

காதல் அழகு !
காதலும் காதலிக்கும் என் காதலி அழகு !!!

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

தொண்ணூறு வயசுல !...


தொண்ணூறு வயசுல
தடி ஊணி நடக்கறப்ப கூட,
அவ சிரிச்சா எனக்கு பிடிக்கணும் ...
என் பாட்ட அவ ரசிக்கணும் ...

கையோட கை சேர்த்து
மடி மேல தலை சாய்ச்சி,
அவ கண்ண பாக்கறப்ப
முப்பது வயசுல மொளைச்ச காதல்
முடியாத வயசுலயும் முத்தமா பூக்கணும் ...

காமம் முழுசும் கரைஞ்சி போய்
காதல் மட்டும் மிச்சம் இருக்குற
அந்த ஒத்த முத்தத்துல
ஒரு கோடி கவிதைகள் அவளுக்காக
நான் பாடணும் ...

சுருக்கம் விழுந்த கையால
இறுக்கமா அவளை புடிச்சி
நெருக்கமா பக்கம் வந்தாலும்
வெட்கத்துல அவ விலகி போகணும் ...

ஓரக்கண்ணால அவ வெட்கத்த
ஓராயிரம் முறை ரசிச்சிட்டு,
அந்த காதோர மச்சத்துக்கு
கம்பனா நான் மாறனும் ...

கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும்
முட்டிட்டு நிக்கற கடலையும் வானத்தையும்
உள்ளங்கையில் அவளை வச்சி
உயர பறந்து தாண்ட வேணும் ...

பேரன் பேத்தி எடுத்த வயசுல
கிழவனும் கிழவியும் கொஞ்சறத பாரு-னு
ஊரு உலகம் எல்லாம் கேலி செய்ய
உற்சாகமா காதல் செய்யணும் ...

கால் வலி-னு ஒரு நாள்
அவ என் காலடியில உக்காந்தா
தோள் வலி-னு கூட பாக்காம
குழந்தையா அவளை சுமக்கனும் ...

பேரக் குழந்தைங்க ஆளான பொறவும்
என் மாரு மேல தான் அவ தூங்கணும்
காலம் முடிஞ்சி போனதை கூட
தெரியாம தான் நாங்க போகணும் !...

உசுருக்குள்ள உசுர வச்சி, எமனையும் ஏமாத்தி
ஒத்த பாசக்கயிரு-ல ரெண்டு உசுரும் பிரியணும் ...
ஒரே சமாதியில ஒண்ணா ஒருக்களிச்சி படுக்கணும்
மண்ணா மக்குன பொறவும் கூட, ஒண்ணா பூமியில் கலந்திருக்கணும் !...

வியாழன், ஜூலை 28, 2011

பிரிவுணர்த்திய தேவதைக்கு !..உலகத்தின் மறுபக்கம் நீ இருந்தாலும்
உன் இதயத்தின் ஒருப்பக்கம் நான் இருப்பேனே !...
கடல்கள் பல நீ கடந்து சென்றாலும்
கனவினில் இருவரும் கலந்திருப்போமே !...

காணும் பெண்ணெல்லாம் உன் போல தோன்ற
காண்பவை நிஜமாக நான் அங்கு வேண்ட
கண்ணில் பிழையோகாட்சிப் பிழையோ
கண்மணி உன்னால் காதல் மழையோ !...

இரவின் தனிமையை நினைவுகள் வதைக்க
இமைகள் இணைந்தாலும் நீயங்கு இனிக்க
கைப்பிடித்த நினைவுகள் கனவினில் மிதக்க
கண் பனித்த துளிகள் தலையணை நனைக்க ...

சேலைகளை அழகாக்கும்
நந்தவனச் சோலையே !...
செந்தமிழ்நாட்டில் எனை விட்டு
சென்றதென்ன மேலையிலே !...

கவிதைத்  தாயின் மடியிலே
கண்ணன் தேடிய பூங்குழலே
புன்னகை பூத்து உனை வெல்ல
பூக்களும் இல்லை பூமியிலே !...

உன் தேகம் வீசும் வியர்வை வாசம் !
உன் கண்கள் கனிவுடன் பேசும் நேசம் !
என் ஊனுடன் உயிர் கலந்திருக்கும் வரை 
ஒவ்வொரு நொடியும் தேடும் உன் ஸ்பரிசம்!...

நட்புடன் சிரித்துமகிழ்ந்த பொழுதுகள் ...
கவலையை பகிர்ந்துநெகிழ்ந்த நிமிடங்கள் ...
ஒரு துளி ரகசியம் ஏதுமின்றி
மனதை இருவரும் திறந்த தருணங்கள் ...

மீண்டும் வேண்டும் கண்மணியே !..

வியாழன், ஜூலை 21, 2011

நியான் நகரம் - விமர்சனம்


"வீழ்வது இழிவாகா !... வீழ்ந்து கிடப்பதே இழிவு !..."

நியான் நகரம் - கதைக்கு இசை சேர்த்து புதுமை படைத்த "ரணம் சுகம்" வரிசையில், "பாதை" குழுவிடமிருந்து இன்னொரு படைப்பு. முந்தைய நாவலின் வெற்றியை தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளி வந்திருகிறது. ஒரு உண்மை கதையின் தழுவல். விவரங்கள் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

ரணம் சுகத்தில் இருந்து ஒரு சின்ன வித்தியாசம். நாவலின் முக்கியமான உரையாடல்களையும் பாடல்களுடன் சேர்த்து பதிவு செய்திருக்கிறார்கள். இது புக்கிசைக்கு பலமா பலவீனமா என்று தெரியவில்லை. திரைப்படங்களை விட நாவல்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிவதற்கு முக்கிய காரணம் - படிப்பவர்கள் மனத்திரையில் விரிவது முழுவதும் அவர்களுடைய கற்பனை. அவர்கள் தான் அத்திரைப்படத்தின் இயக்குனர்கள். இங்கு பேச்சுக்கள் பதிவு செய்யப்படும் போது, அந்த கற்பனை தடைபடுகிறது.

வினய்-கும் சத்யனுக்கும் நடக்கும் உரையாடல் தான் நாவலின் முதல் பக்கம். பதிவு செய்யப்பட்ட பேச்சில் அந்த வீச்சு இல்லை. சத்யனின் பேச்சில் அந்த கம்பீரம், மிதப்பு இல்லை. மது-வுடன் நடக்கும் முக்கியமான உரையாடலில், வினய்-இன் பேச்சில் சரியான ஏற்ற இறக்கங்கள் இல்லை. மது நன்றாக பேசி இருக்கிறாள். சோதனை முயற்சியாக கருதி அடுத்த படைப்புகளில் உரையாடல்களை தவிர்க்கலாம். இது என்னுடைய கருத்து.

அழகான கருவிசையுடன் (theme music) ஆரம்பிக்கிறது நாவல்.

"நிலவுடன் நான் வரும் நகர்வலம்" - மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கலாம். அருமையான துள்ளலான இசை. கதையில் சரியான இடத்தில், அழகாக!

"குறைய குறைய நிரப்புகவே" - இதம்.

"ஆண்டிபட்டி அரசம்பட்டி" - சரியான குத்து !

பல பாடல்களின் வரிகள் மிக மிக அருமை.

என்னை சுட்டு போகும் தீயில்
நான் சுகமே காண்கின்றேன்
உன் மெட்டு போடும் விழில்
ஏனோ ஏனோ தொலைகின்றேன்

**********

சில பல பூக்கள் வேண்டாம், பூந்தோட்டம் வாங்கித்தா
கை முத்தம் போதாதே, இதழ் முத்தம் கோடி தா
புதுக்கவிதைகள் பத்தாதே, முழு காவியம் எழுதி தா
சந்தேகம் வைக்காதே, பரிசுத்த காதல் தா !...

**********

இமைகள் பாரு அழுதது தெரியும்
இரவை கேளு தவித்தது சொல்லும்
இதயம் அறுத்தால் உண்மை புரியும்
இறந்து போகும் முன் ஒரு முறை பேசு !

**********

ஆனால், இசை ஏனோ மனதை உடனே தொடவில்லை. ரணம் சுகத்தில் அத்தனை பாடல்களும் கேட்ட உடனே பிடித்தது. நியான் நகரம் - தனுஷ் போல என்று நினைக்கிறன். கேட்ட உடனே பிடிக்காது. கேட்க கேட்க தான் பிடிக்குமோ?

கதையை பற்றி விமர்சனத்தில் சொல்லி சுவாரசியத்தை குறைக்க விரும்பவில்லை. நீங்களே வாங்கி படியுங்கள். இசையில் புதுமுயற்சிகள் மேற்கொள்ளும் பாதை குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

பாதை வலைத்தளம்

இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்

செவ்வாய், ஜூலை 12, 2011

மீண்டும் ஒரு மின்னல் !உயிரின் உணர்வை தமிழில் கலந்து
வலியை மறந்து, இதயம் கடந்து
பறக்க துடித்தது சிறகற்ற பறவை
கவிதையில் புதைத்தது, தன் பெயரற்ற உறவை ...

என் ரணத்திற்கு மருந்தாகிய கவிதைகள்
உன் மனதிற்கு விருந்தாகிய தருணங்கள் !...
கவிதைகளை காதலிக்கும்
காதலின் புதுக்கவிதையே !...

முடிவுரைக்கு பின் முன்னுரையா ?
கல்லறையில் பூத்த மல்லிகையா ?
இறந்து போனது நான் இல்லையா ? - மீண்டும்
பிறக்க வைத்தது நீ இல்லையா ?

சிரித்து பேசி, சிறைகள் உடைத்தாய்
சிமிட்டும் விழியில், இதயம் துளைத்தாய்
கவிஞன் மனதில் கனவுகள் விதைத்தாய்
கவிதைகள் பாடி, சிறகுகள் கொடுத்தாய் !...

இரவின் மடியில் வெள்ளி முளைப்பதும்
காதல் விழியில் கவிதை பிறப்பதும்
ஆதாம் ஏவாள் அறிந்த செய்தி !...
விளங்க வைத்தாய் என்னுயிரில் ஓதி !...

மலர்கள் பேசும் மொழிகள் கேட்டு
மயக்கும் குயிலின் ராகம் போட்டு
உனக்கு சொல்வேன் தமிழில் பாட்டு
உயிரில் வெடிக்கும் காதல் வேட்டு !...

சிட்டுக்குருவியின் இறகுகள் தேடி
செய்து வைப்பேன் மஞ்சங்கள் கோடி
விடிய விடிய கவிதைகள் பாடி
என் இரவுகள் கூறும் நன்றிகள் கோடி !...

 - கவிதைகளில் உயிர்த்திருக்கும் என் ரசிகைக்கு சமர்ப்பணம் !!!

புதன், பிப்ரவரி 23, 2011

ரஜினி பேரக் கேட்டாலே - புத்தகவிமர்சனம்வழக்கமாக எந்த புத்தகம் படித்து முடித்தாலும், உடனே விமர்சனம் எழுதி விடுவேன். ஆனால் தலைவர் வாழ்க்கை வரலாறை படித்து மூன்று நாட்கள் ஆகியும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. எந்த நாவலும், எந்த திரைக்கதையும் என்னை இந்த அளவுக்கு கட்டி போட்டதில்லை. திருமதி. காயத்ரி ஸ்ரீகாந்த்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும். எனக்கு மிகவும் பிடித்த ஒரு மனிதனின் வாழ்க்கையை, உண்மையாக பதிவு செய்ததற்கு. இவரது கதை சொல்லும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது.

புத்தகத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த ஒரு இடத்திலும், சிறு தொய்வு கூட இல்லாமல் சாமர்த்தியமாக எழுதியுள்ளார். கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் கலந்து அருமையாக மாலை தொடுத்துள்ளார். கடந்தகாலத்தை பற்றி ஒரு அத்தியாயம், அடுத்து நிகழ்காலத்தை பற்றி ஒரு அத்தியாயம், திரும்பவும் கடந்தகாலத்தை பற்றி ஒரு அத்தியாயம் என கலக்கி உள்ளார். சினிமா தயாரிப்புக்கு தயாராக உள்ள திரைக்கதை போலவே இருக்கும், மொத்த புத்தகமும்.

சிவாஜிராவ் கெய்க்வாட் - ரஜினியின் இயற்பெயர். பெங்களூரில் அவர் பிறந்து வளர்ந்த கதை, ரௌடியாக திரிந்த இளங்கன்று பருவம், ஆன்மிகத்தில் தேடல் ஆரம்பித்த நேரங்கள், மூட்டை தூக்கியும், எடுபிடியாகவும் வாழ்ந்த காலங்கள், அரசாங்க உத்தியோகம் "கண்டக்டர்" வேலை செய்யும் காலங்கள், நட்பு வட்டங்கள், ஒய்வு நேரத்தில் நாடகத்தில் நடிக்கும் ஆர்வம், அரசாங்க உத்தியோகத்தை உதறிவிட்டு சென்னைக்கு ஓடி வந்து கஷ்டபட்ட காலங்கள், பிலிம் இன்ஸ்டிடியூட் நடிப்பை மெருகேற்றிய காலங்கள், கே.பாலச்சந்தரின் அறிமுகம் என எந்த ஒரு சின்ன விஷயத்தையும் விட்டு விடாமல், அதே சமயம் உண்மையை சிதைக்காமல் பதிவு செய்துள்ளார்.

ரஜினியை பற்றி நான் அறிந்திராத ஒரு விஷயம் அவருடைய கடும் உழைப்பும், நேரம் தவறாமையும். சோற்றுக்கு வழியில்லாத போதும் மில்லியன் டாலர் கனவுகள். ரஜினி என்னும் சாதனையாளன் வாழும் காலத்தில் வாழும் நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ரஜினியை பற்றி பலதரப்பட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. அதை பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு ரஜினி பிடிக்குமா, பிடிக்காதா என்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அனைவரும் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் - அவர் ஒரு சாதனையாளர். அந்த ஒரு கோணத்தில் மட்டும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.

நான் சினிமா பார்க்க ஆரம்பித்த வயதில் இருந்து இன்று வரை என்னை கவர்ந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த். கமல்ஹாசன் உட்பட மற்ற எந்த நடிகரின் படம் என்றாலும், அதன் விமர்சனம் கேட்டு நன்றாக இருந்தால் தான் போய் பார்ப்பேன். ஆனால் ரஜினி என்ற மந்திர வார்த்தை இருந்தால் போதும், முதல் நாள் சினிமா அரங்கில் இருப்பேன். அறியாத வயதில் ரஜினியை பிடித்தது பெரிய விஷயமில்லை. ஆனால், இன்றும் அவர் படங்களின் மேல், பைத்தியமாக இருப்பதை என்ன சொல்வது?. ஒரே ஒரு வார்த்தை தான் சொல்ல முடியும்.

ரஜினிகாந்த் !!!

ரஜினி பேரக் கேட்டாலே (இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்).

ஆங்கில ஆக்கம்: The Name Is Rajinikanth (இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்).

பி.கு: நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். இந்த விமர்சனத்தில் அவரை பற்றி மிகைபடுத்தி சொல்லி இருபதாக நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும். நீங்களே புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

பிஸினஸ் மகா மகா ராஜாக்கள் - புத்தகவிமர்சனம்குமுதம் இதழில் "பிசினஸ் மகா மகா ராஜாக்கள்" என்ற தொடர் வெளிவந்து மக்களுடைய வரவேற்பை பெற்றது.ஒவ்வொரு வாரமும் ஒரு கோடீஸ்வரர் பற்றி ஆசிரியர் ரஞ்சன் எழுதுவார்.அவர் எவ்வளவு கோடிகள் சம்பாதித்தார், எப்படி சம்பாதித்தார், எந்த நிலையிலிருந்து ஆரம்பித்தார், என்னென்ன முயற்சிகள் செய்தார்,சந்தித்த முக்கியமான தோல்விகள் என அவர்களது பல வருட வாழ்க்கையை மூன்று பக்கங்களுக்குள் சொல்லிவிடுகிறார். 31 வாரங்கள் வெளிவந்த தொடர், இந்த புத்தகமாக 2004-ம் ஆண்டு வெளிவந்தது. இப்போது தான் என் கைக்கு வந்தது.

கர்சன்பாய் பட்டேல் முதல் வாரன் பப்பெட் வரை 31 செல்வந்தர்களின் முக்கிய குறிப்புகள் அடங்கிய இந்த புத்தகத்தில், ஒரு பெண் செல்வந்தர் கூட இடம் பெறவில்லை. கோடீஸ்வரிகள் உலகத்தில் இல்லையா அல்லது இந்த புத்தகத்தில் இருந்து தவிர்க்கப்பட்டர்களா?. இணையத்தில் தேடி பார்த்தேன். வின்பிரே ஒபரா (Oprah Winfrey) தவிர பேர் சொல்லும்படி புகழ் பெற்றவர்கள் யாருமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பேர். ஒரு புள்ளிவிவரம், பெண் செல்வந்தர்களின் எண்ணிக்கை, இங்கிலாந்தில் 40% அதிகரித்து இருபதாக சொல்கிறது. ரொம்ப சந்தோசம்.

லாட்டரி, புதையல் போன்றவற்றில் இறங்காமல், உழைத்து முன்னேறி,  கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்கிற ஆசையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். இங்கு சொல்லப்பட்டு இருப்பவர்களில் பெரும்பாலானோர், அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டபட்டவர்கள். அவர்களே கோடீஸ்வரர்கள் ஆகும் போது, "நம்மால் முடியாதா?" என்ற கேள்வியும், "முடியும்" என்ற பதிலும் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

இந்த புத்தகத்தில் இருக்கும் பல கோடீஸ்வரர்கள் பற்றிய சில தகவல்கள் ஆச்சரியமாகவும், திகிலாகவும் இருக்கும். நீங்களே படித்து பாருங்கள். இதிலிருந்து எனக்கு பிடித்த, என் மனதை கவர்ந்த 10 கோடீஸ்வரர்கள் இதோ...

௧. அம்பானி (Dhirajlal Hirachand Ambani - Reliance Industries)
௨. கர்சன்பாய் பட்டேல் (Dr. Karsanbhai Khodidas Patel - Nirma group)
௩. ரிச்சர்ட் ப்ரோன்சன் (Sir Richard Charles Nicholas Branson - Virgin Group)
௪. சாம் வால்டன் (Samuel Moore "Sam" Walton - Wal-Mart)
௫. வாரன் பப்பெட் (Warren Edward Buffett - Berkshire Hathaway)
௬. ஸ்டீவ் ஜாப்ஸ் (Steven Paul Jobs - Apple)
௭. பில் கேட்ஸ் (William Henry "Bill" Gates III - Microsoft)
௮. வால்ட் டிஸ்னி (Walter Elias "Walt" Disney - The Walt Disney Company)
௯. ஆண்ட்ரூவ் க்ரோவ் (Andrew Grove - Intel Corporation)
௰. ரே குரோக் (Raymond Albert "Ray" Kroc - McDonald's Corporation)

பி.கு. 2010-ம் ஆண்டு உலகின் முதல் கோடீஸ்வரர் கார்லோஸ் ஸ்லிம் ஹெலு (Carlos Slim Helú - the chairman and CEO of Telmex, América Móvil).

பிஸினஸ் மகா மகா ராஜாக்கள் (இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்).

திங்கள், ஜனவரி 24, 2011

வெயில் தின்ற மழை - புத்தகவிமர்சனம்நிலாரசிகனுடைய கவிதைகளை அவ்வபோது இணையதளங்களில் படித்து இருக்கிறேன். "காதல்" பற்றிய கவிதைகள் மிக அருமையாக இருக்கும். தற்போது கணினி துறையில் வேலை செய்யும் இவரது நான்காவது புத்தகம் "வெயில் தின்ற மழை". நிலாரசிகனை நான் படித்த முதல் புத்தகம். நான் படிக்கும் இரண்டாவது அல்லது மூன்றாவது கவிதை தொகுப்பு இது.

வழக்கமாக கவிதை புத்தகங்களை படித்து முடித்தவுடன், என் மனதில் கவிதைகள் மூன்று பிரிவுகளில் சென்று பதியும்.

௧. மிகவும் பிடித்தவை
௨. சுமாரானவை
௩. இதையெல்லாம் யார் கவிதை புத்தகத்தில் சேர்த்தது?

அனால், நிலாரசிகனின் நவீன கவிதை தொகுப்பு "வெயில் தின்ற மழை" சற்று வித்தியாசமாக இருந்தது.
௧. புரிந்தது
௨. புரியாதது

புரிந்தவை அனைத்தும் பிடித்து போனது. புரியாதவை புதிராய் போனது. சின்னச் சின்ன கவிதைகள் எழுதி, நானும் கவிஞன் என்று நினைத்து பெருமை கொண்டிருந்த என்னை யோசிக்க வைத்துள்ளது. மற்றவர் கவிதையை படித்து, அதன் கருத்தை முழுமையாய் உள்வாங்கி அனுபவிக்க தெரியும் போது தான் ரசிகன் முழுமை பெறுகிறானா? அல்லது, செந்தமிழ் சொற்கள் மீதேறி அவனையும் அறியாமல், ரசிகனுடைய இதயத்தில் சிம்மாசனமிட்டு அமரும் போது, கவிஞன் முழுமை பெறுகிறானா?

சர்ச்சைக்குரிய கேள்வி.

தனிமை, நிசப்தம், இரவு, மழை, வலி, மரணம் - என்று நீளும் இவரது கவிதைகளை படிக்கும் போது, இவர் எப்படிப்பட்டவர் என்ற கேள்வி அடிக்கடி எழுந்தது. இவரே ஒரு கவிதையில் மிக அற்புதமாக சொல்கிறார்.

நான்கு சுவர்களுக்குள்
சுற்றி சுற்றி வரும்
ஏதோ ஒரு பறவை
விட்டு சென்ற இறகு
நான் !.

எத்தனை முறை படித்து இருப்பேன். கணக்கு வைக்கவில்லை. இந்த கவிதையை படித்தபிறகு, மீண்டும் ஒரு முறை முழு புத்தகத்தையும் படித்தேன் :) நிறைய கவிதை புத்தகங்களை படிக்கவேண்டுமென முடிவெடுத்து இருக்கிறேன்.

இந்த தொகுப்பில் எனக்கு பிடித்தவை சில:

௧. இதழ் உதிர்க்கும் பழகிய
௨. பாசிகள் படர்ந்த குளக்கரையில்
௩. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த
௪. என்னைச் சுற்றிய
௫. பெயரிடப்படாத மௌனத்தின்
௬. காற்று புகாத கண்ணாடி சுவரின்
௭. முதலில் அது நத்தை என்றே
௮. தெருநாய்களின் நககீறல்களால்
௯.சிறுவனின் மணல வீட்டை
௰. காயப்படுத்துவதற்கேன்றே

இன்னும் சென்று கொண்டே இருக்கிறது. இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். நீங்களே முழு புத்தகத்தையும் படித்து பாருங்கள்.

வெயில் தின்ற மழை (இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்)


செவ்வாய், ஜனவரி 11, 2011

தண்ணீர் தேசம் - புத்தகவிமர்சனம்


தண்ணீர் தேசம் - தமிழில் ஒரு விஞ்ஞான காவியம். வடித்தது முனைவர் பொன்மணி வைரமுத்து. தமிழில் என்னென்ன உண்டு என்று கர்வப்பட்டு முடித்த வேளையில், தமிழில் என்னென்ன இல்லை என்பதை கணக்கு பார்க்க வேண்டி, வைரமுத்து தமிழுக்கு செய்த தொண்டு தான் இந்த புத்தகம். அகத்தையும் அழகையும் மட்டும் பாடி வந்த தமிழரை, அறிவியல் பக்கமும் திசைதிருப்ப ஒரு சிறு முயற்சி.சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே, நிலைத்து வாழும் என்பது பரிணாமத்தின் விதி. மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி. பொய்யென்று தெரிந்தும், பெருமைக்காக இன்னமும் உயிர்த்திருக்கும் சொல்வழக்கு. முழுமையான வரிவடிவத்தாலும், பண்பட்ட இலக்கியத்தாலும் வளர்ந்து வந்த தமிழ், விஞ்ஞான சிறகடித்து பறக்க வேண்டிய நேரம். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழுடன் விஞ்ஞானத் தமிழும் கைகோர்த்து நடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். முதற்சுழி இட்டு இருக்கிறார் வைரமுத்து.

கடல் - கதையின் கரு. கதையின் நாயகன் கலைவண்ணன். தொன்று தொட்டு வரும் கதாநாயகர்கள் போல் புரட்சிக்காரன், பத்திரிகை ஆசிரியன். நாயகி தமிழ். பெரும் தனவந்தரின் ஒரே மகள். பனிக்குடத்தில் இருந்ததை விடவும் பாதுகாப்பாய் பன்னீர் பூவாய் வளர்க்கப்பட்டவள். கலைவண்ணணுக்கு கடல் முதற்காதல். தமிழ் இரண்டாவது. தமிழுக்கோ கடல் கல்லறைகளின் திரவவடிவம். இவர்களுக்குள் காதல். தற்செயலாய் நான்கு மீனவர்களுடன் கடலுக்குள் செல்லும் போது ஏற்படும் சம்பவங்கள் தான் கதைக்களம்.

விஞ்ஞான காவியம் படைக்க முற்படும் போது, சற்று நவீன கதைக்களத்தை முயன்று இருக்கலாம். சயின்ஸ் பிக்ஷன் (Science Fiction) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நாவல்களை மனதில் கொண்டு தான் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ஒரு சிறுகதைக்கான கருவை வைத்துக்கொண்டு காவியம் படைக்க முயற்சி செய்து இருக்கிறார் வைரமுத்து. நாவல் முழுவதும் புள்ளிவிவரங்களாய் விஞ்ஞானம் தெளிக்கப்பட்டு இருக்கிறது. கதையோடு பிணையப்படவில்லை. வைரமுத்துவின் கருவாச்சி காவியத்தை படித்துவிட்டு இந்த புத்தகத்தை படிக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதல் அடியில் எந்த குழந்தையும் நடப்பதில்லை. அதற்காக குழந்தைகளை நாம் வெறுப்பதில்லை. ஒரு புதிய பாதையில் வைரமுத்து அடியெடுத்து வைத்திருக்கிறார். நாமும் துணையிருப்போம். தமிழ் வளர்ப்போம் !!!

நீங்களே படித்து பாருங்கள். உங்கள் கருத்து வேறாக இருக்கலாம்.

தண்ணீர் தேசம் (இப்புத்தகத்தை இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்)