Sunday, September 12, 2010

எனது மதுரை நினைவுகள் - புத்தகவிமர்சனம்



1950-களில் மதுரை எப்படி இருந்தது?. அப்போதைய மக்களின் வாழ்முறை, கலாச்சாரம், நம்பிக்கைகள், பொருளாதார சூழ்நிலை, ஆங்கிலேய ஆதிக்கம் ஆகியவற்றை முழுமையாக படம்பிடித்து காட்டுகிறது இந்நூல். ஆசிரியர் மனோகர் தேவதாஸ், தன்னுடைய வாழ்கையை நல்ல நகைச்சுவையுடன், விறுவிறுப்பான "மதுரையின் வரலாறாக" எழுதி இருக்கிறார். இந்த நூலின் மிகபெரிய சிறப்பு, அதிலுள்ள ஓவியங்கள் தான். அந்நாளைய மதுரை-யை மிக நுணுக்கமாக படம்பிடித்து வரைந்திருக்கிறார் ஆசிரியர். ஆம். ஆசிரியர் ஒரு மிகச்சிறந்த ஓவியரும் கூட. 365 பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தை படிக்க நேரமில்லாதவர்கள் கூட, அதிலுள்ள ஓவியங்களை மட்டும் பார்த்தால், மதுரைக்கு பின்னோக்கி பயணம் செய்த ஒரு பரவச அனுபவம் கிடைக்கும்.

மனோகர், ஜெயராஜ், கப்ரியல் மற்றும் ஹமீது ஆகிய நான்கு நண்பர்களின் இளம் பிராயம், மதுரையில் அவர்கள் அடித்த கூத்து, அவர்களிடையேயான நட்பு, விடலை பருவத்து காதல் ஆகியவை தான் இந்த நூலின் கரு. இது ஒரு சுயசரிதை நூல் அல்ல. சுவாரசயத்துகாக சில கற்பனை கதாபாத்திரங்களும், சம்பவங்களும் கோர்க்கப்பட்டுள்ளன. ஆனால் எவை உண்மை, எவை கற்பனை என்று கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த அளவுக்கு, இயல்பான ரசனையுடன் கூடிய, விறுவிறுப்பான கதை.

இந்த நூலின் மற்றொரு சிறப்பம்சம், மதுரையின் சரித்திர வரலாறு. வாழைப்பழ ஊசி போல், கதையின் ஓட்டத்தோடு மதுரையின் முக்கியமான இடங்களின் வரலாறையும் அள்ளி தெளிக்கிறார். மதுரையின் ஆவணபூர்வ வரலாறும், கற்பனை கலந்த கதைகளும் கிட்டத்தட்ட ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்தவை. அவற்றை அழகாக விளக்குகிறார்.

(உ.ம.) கடம்பவனத்தில் இருந்த அள்ளிகுளத்தருகே இருந்த ஒரு சிவலிங்கத்தை சுற்றி, குலசேகரபாண்டியன் ஒரு கோயிலை கட்டி, அதனை சுற்றி ஒரு நகரமும் அமைத்தான். சிவபெருமான் அவனை ஆசிர்வதித்து, இனிமையான அமிர்தத்தை அள்ளி அங்கங்கே தெளித்தார். மதுரம் என்றால் இனிமை. அதனால் தான் இந்நகரம் மதுரை என்று அழைக்கப்படுகிறது. அவனுடைய பேத்தி மீனாட்சியை, சிவபெருமான் சுந்தரேஸ்வரராக வந்து திருமணம் செய்துகொண்டு மதுரையை ஆட்சி புரிந்தார். இப்படி தெய்வீக ஆட்சியாக ஆரம்பித்து, மனிதகுல ஆட்சியாக மாறியதாக, புராணங்கள் சொல்கின்றன. இதை தவிர்த்து, பதிவு ஆவணங்களில் உள்ள வரலாறையும் நமக்கு சொல்கிறார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே, கிரேக்கர் மெகஸ்தனிஸ் பாண்டியர்களை பற்றியும் மதுரையை பற்றியும் எழுதிருக்கிறார். அப்போதே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குலம் தமிழ்க்குலம். வாழ்க தமிழ் !!!

கிருத்துவ சகாப்தம் ஆரம்பமான காலம், களபிறர்கள் படையெடுப்பு, சோழர்களின் ஆதிக்கம், பாண்டியர்களின் புரட்சி, முஸ்லிம் மன்னர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் நாயக்கர்களின் காலம் என வரிசையாக, சுருக்கமாக விவரிக்கிறார். நாயக்கர்கள் ஆண்ட 200 வருடங்கள், மதுரையின் பொற்காலம என்கிறார். இவை தவிர, ஸ்பென்சர்ஸ், ரீகல் டாக்கீஸ், ஆர்வி மில்ஸ், அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தெப்பகுளம், பச்சை கிணறு, யானை மலை, வைகை ஆறு, அதில் ரோமானிய நாணயங்கள், குற்றாலம் அருவி, அழகர் கோயில், கள்ளழகர் கதை, மதுரை ரயில்வே நிலையம் வந்த கதை, ரயில்வே காலனி உருவான கதை, ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கை, பிராமணர்களின் வாழ்க்கை, குறிப்பாக பிராமண விதவைகளின் கொடுமையான வாழ்க்கை, கிருத்தவர்களின் வாழ்க்கை, மற்றவர்களை விட ஒருபடி கீழே கருதப்பட்ட அவலம்... என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

மதுரையில் பிறந்தவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் தெரிந்த அனைவரும், படிக்க வேண்டிய நூல் இது. ஒரு நண்பன் நம்முடன் சுவாரசியமாக பேசுவது போலவே இருக்கும்.

கண்டிப்பா படிங்க !!!

தமிழில் இந்த புத்தகத்தை பெற, இங்கே சுட்டவும்

Green Well Years (In English) Click for orders in India

0 மக்கள் கருத்துக்கள்:

Related Posts Plugin for WordPress, Blogger...