ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

மணக்க போகும் பெண்ணுக்கு !!!பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
படித்துறை மணலில்
பாட்டொன்று படித்தேன் !..

மணக்க போகும் பெண்ணுக்கு
மயங்க வைக்கும் கண்ணுக்கு
மழலை மொழி சொல்லுக்கு
மண வாழ்த்தொன்று வடித்தேன் !..

தேவதையை மணமுடிக்க
தெருவெல்லாம் வெடி வெடிக்க
தொலைதூர நிலவாக
திரிசங்கு ஒலியாக

திருமகன் அங்கு வருவானடி...
திருமகள் உன்னை மணப்பானடி...

கணநேர கள்வனாகி
காதோரம் முத்தமும்
கால்கொலுசு ஓசையில்
காதலின் மொத்தமும்

கணவன் வந்து தருவானடி...
காதல் சொல்லி திரிவானடி...

இருவிழி இமைகளும்
இணைந்தே இமைப்பதும்
இருவரும் ஒன்றாக
இருதயம் துடிப்பதும்

இயற்கை கொடுத்த சந்தமடி...
இருமனம் இணையும் சொந்தமடி...

கோல் ஊன்றும் வயதிலும்
தோள் தாங்கும் விழுதாக
கல்லறை சேரும் வரையிலும்
உனக்கு மட்டும் முழுதாக

மணவாளன் இருப்பானடி - உன்
மனம்போல நடப்பானடி

கண்ணீரை கண்கள் மறந்து போகட்டும்
புன்னகை மட்டுமே பூத்து நிற்கட்டும்
இல்லறத்திற்கு இலக்கணம் இவர்கள் தானென்று
இமயமும் குனிந்து வாழ்த்துக்கள் சொல்லட்டும் !...

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

தாயும் நீயும் !..
தனித்திருந்தும், அன்பில் திளைத்திருந்தேன்
என் தாயின் கருவறையில்
வலித்திருந்தும், வெளியே சிரித்திருந்தேன்
உன் காதல் முடிவுரையில் ...

தாயும் புறந்தள்ளினாள்
நீயும் புறந்தள்ளினாய்
எலும்புகள் விரியும் ஒலியும்
காதலை பிரியும் வலியும் ...

ஒன்றென அறிவேன் கண்மணியே !..

தொப்புள்கொடி அறுத்தாலும்
சொந்தம் விட்டு போவதில்லை
காதலை நீ மறுத்தாலும்
உன்னை நான் பிரிவதில்லை ...

உயிரை கொடுத்த அன்னையும்
உணர்வை கொடுத்த உன்னையும்
காலம் முழுதும் மறவேனடி
நெஞ்சில் வைத்து மகிழ்வேனடி...

ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

எனது மதுரை நினைவுகள் - புத்தகவிமர்சனம்1950-களில் மதுரை எப்படி இருந்தது?. அப்போதைய மக்களின் வாழ்முறை, கலாச்சாரம், நம்பிக்கைகள், பொருளாதார சூழ்நிலை, ஆங்கிலேய ஆதிக்கம் ஆகியவற்றை முழுமையாக படம்பிடித்து காட்டுகிறது இந்நூல். ஆசிரியர் மனோகர் தேவதாஸ், தன்னுடைய வாழ்கையை நல்ல நகைச்சுவையுடன், விறுவிறுப்பான "மதுரையின் வரலாறாக" எழுதி இருக்கிறார். இந்த நூலின் மிகபெரிய சிறப்பு, அதிலுள்ள ஓவியங்கள் தான். அந்நாளைய மதுரை-யை மிக நுணுக்கமாக படம்பிடித்து வரைந்திருக்கிறார் ஆசிரியர். ஆம். ஆசிரியர் ஒரு மிகச்சிறந்த ஓவியரும் கூட. 365 பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தை படிக்க நேரமில்லாதவர்கள் கூட, அதிலுள்ள ஓவியங்களை மட்டும் பார்த்தால், மதுரைக்கு பின்னோக்கி பயணம் செய்த ஒரு பரவச அனுபவம் கிடைக்கும்.

மனோகர், ஜெயராஜ், கப்ரியல் மற்றும் ஹமீது ஆகிய நான்கு நண்பர்களின் இளம் பிராயம், மதுரையில் அவர்கள் அடித்த கூத்து, அவர்களிடையேயான நட்பு, விடலை பருவத்து காதல் ஆகியவை தான் இந்த நூலின் கரு. இது ஒரு சுயசரிதை நூல் அல்ல. சுவாரசயத்துகாக சில கற்பனை கதாபாத்திரங்களும், சம்பவங்களும் கோர்க்கப்பட்டுள்ளன. ஆனால் எவை உண்மை, எவை கற்பனை என்று கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த அளவுக்கு, இயல்பான ரசனையுடன் கூடிய, விறுவிறுப்பான கதை.

இந்த நூலின் மற்றொரு சிறப்பம்சம், மதுரையின் சரித்திர வரலாறு. வாழைப்பழ ஊசி போல், கதையின் ஓட்டத்தோடு மதுரையின் முக்கியமான இடங்களின் வரலாறையும் அள்ளி தெளிக்கிறார். மதுரையின் ஆவணபூர்வ வரலாறும், கற்பனை கலந்த கதைகளும் கிட்டத்தட்ட ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்தவை. அவற்றை அழகாக விளக்குகிறார்.

(உ.ம.) கடம்பவனத்தில் இருந்த அள்ளிகுளத்தருகே இருந்த ஒரு சிவலிங்கத்தை சுற்றி, குலசேகரபாண்டியன் ஒரு கோயிலை கட்டி, அதனை சுற்றி ஒரு நகரமும் அமைத்தான். சிவபெருமான் அவனை ஆசிர்வதித்து, இனிமையான அமிர்தத்தை அள்ளி அங்கங்கே தெளித்தார். மதுரம் என்றால் இனிமை. அதனால் தான் இந்நகரம் மதுரை என்று அழைக்கப்படுகிறது. அவனுடைய பேத்தி மீனாட்சியை, சிவபெருமான் சுந்தரேஸ்வரராக வந்து திருமணம் செய்துகொண்டு மதுரையை ஆட்சி புரிந்தார். இப்படி தெய்வீக ஆட்சியாக ஆரம்பித்து, மனிதகுல ஆட்சியாக மாறியதாக, புராணங்கள் சொல்கின்றன. இதை தவிர்த்து, பதிவு ஆவணங்களில் உள்ள வரலாறையும் நமக்கு சொல்கிறார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே, கிரேக்கர் மெகஸ்தனிஸ் பாண்டியர்களை பற்றியும் மதுரையை பற்றியும் எழுதிருக்கிறார். அப்போதே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குலம் தமிழ்க்குலம். வாழ்க தமிழ் !!!

கிருத்துவ சகாப்தம் ஆரம்பமான காலம், களபிறர்கள் படையெடுப்பு, சோழர்களின் ஆதிக்கம், பாண்டியர்களின் புரட்சி, முஸ்லிம் மன்னர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் நாயக்கர்களின் காலம் என வரிசையாக, சுருக்கமாக விவரிக்கிறார். நாயக்கர்கள் ஆண்ட 200 வருடங்கள், மதுரையின் பொற்காலம என்கிறார். இவை தவிர, ஸ்பென்சர்ஸ், ரீகல் டாக்கீஸ், ஆர்வி மில்ஸ், அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தெப்பகுளம், பச்சை கிணறு, யானை மலை, வைகை ஆறு, அதில் ரோமானிய நாணயங்கள், குற்றாலம் அருவி, அழகர் கோயில், கள்ளழகர் கதை, மதுரை ரயில்வே நிலையம் வந்த கதை, ரயில்வே காலனி உருவான கதை, ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கை, பிராமணர்களின் வாழ்க்கை, குறிப்பாக பிராமண விதவைகளின் கொடுமையான வாழ்க்கை, கிருத்தவர்களின் வாழ்க்கை, மற்றவர்களை விட ஒருபடி கீழே கருதப்பட்ட அவலம்... என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

மதுரையில் பிறந்தவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் தெரிந்த அனைவரும், படிக்க வேண்டிய நூல் இது. ஒரு நண்பன் நம்முடன் சுவாரசியமாக பேசுவது போலவே இருக்கும்.

கண்டிப்பா படிங்க !!!

தமிழில் இந்த புத்தகத்தை பெற, இங்கே சுட்டவும்

Green Well Years (In English) Click for orders in India

வியாழன், செப்டம்பர் 09, 2010

கனவோடு கலைபவளே !!!என் மார்பில் படுத்து நீ உறங்க
உன் கூந்தல் கோதி நான் கிறங்க
என் விரல்கள் உன்மேல் பயணம் செல்ல
வெட்கி சிவந்து எனை நீ கொல்ல ...

காமன் சூத்திரம் முழுதும் விளங்க
நிலைகள் அறுபதில் உயிரும் கலங்க
உச்ச மோகத்தில் உடல்கள் நடுங்க
காமம் தணிந்தும், காதல் ததும்ப ...

நம் அணைப்பின் இறுக்கத்தில் இரவுகள் கழிய
விண்மீன்கள் நம்மேல் பனியாய் பொழிய
இரவின் முடிவில் என் கனவுகள் கருக
காலைப்பனியாய் நான் தனிமையில் உருக ...

நம் கனவுப்பூக்கள் ஒவ்வொன்றும்
என் கண்ணீர்த்துளியில் நனைகின்றது
நீ இல்லையென்பதை அறியாமல்
மீண்டும் மீண்டும் பூக்கின்றது ...

கனவோடு கலைபவளே,
என் நிஜத்தோடு கலப்பாயோ ?...

ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

என்னுயிர் தோழிக்கு !...வெள்ளி மழையில் தங்கச்சிலை
யாரை நினைத்து நீராடுதோ ?
நனைத்த துளிகள் மோட்சம் பெற்று
பூமி பந்தை சூடாக்குதோ ?

காதல் வேள்வி செய்யும் பெண்ணின்
இதழும் தேன்துளி சுரக்குதோ ?
பொன்வண்டை தேடி தேடி - இந்த
பூவும் உறக்கம் தொலைத்ததோ ?

பருவம் வந்தால் பூப்பூக்கும்
சாய்ந்து உறங்க துணை கேட்கும்
வாடும் போதும் வாசந்தரும்
பூங்கொடியும் நீயும் ஒன்றல்லவோ !..

முக்கனியில் ஒன்றாய் இருந்தாலும்
கனிந்தபின் தான் கிளி வருமே !
காதல் கூடும் வேளை வரும்
அதுவரை கொஞ்சம் பொறு மனமே !!!...