ஞாயிறு, மார்ச் 14, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா -- ஒரு விமர்சனம் !கள்வனை காட்டிய கைகள்
காதலை தழுவுகின்றன ...
கௌதம் மேனன்-ன்
விண்ணைத்தாண்டி வருவாயா !..

என் காதல் கொடுத்த கவிதைகளை
பறித்துச் சென்றது உன் படம் !.
தூக்கம் வறண்ட விழிகளை
நனைத்து சென்றது உன் படம் !..

நீரில் கண்கள் நீந்தும் போதும்
சிரிக்க வைத்தது உன் படம் !..
என் வாழ்வின் இனிய நிமிடங்களை
மீண்டும் தந்தது உன் படம் !..

தாமரையின் கவிதைகள் - பாடல்களில்
மேனன்-ன் கவிதைகள் - திரைக்கதையில்
ரகுமானின் கவிதைகள் - பின்னனி இசையில்
மனோஜ்-ன் கவிதைகள் - ஒளியாடலில்

மிரளாத காளையை போல்
அலட்டாமல் சிம்பு !..
தெவிட்டாத தேனை போல்
தித்திப்பாக திரிஷா !..

கணேஷ் - அளவாய் பேசி
அளவில்லாமல் சிரிக்க வைக்கிறார் ..
ரவிக்குமார் - அதிகமாய் பேசி
இவர் அவசியமா, என கேட்கிறார் :)

ஆட்டுக்குட்டி-கும் அன்பை போதித்த
தேவன் ஆலயத்தில் ...
திரைக்கதையின் துவக்கம்
காதலின் நடுக்கம் !

புயலே வந்தாலும்
புன்னகைக்கும் கார்த்திக் !..
குழம்பிய குளத்தில்
நிலவை தேடும் ஜெஸ்ஸி !..

முடியாமல் காதல் உரைத்த போதும்
நட்பென்று கூறி மறைத்த போதும்
ரயில் பயணத்தில் உடைந்த போதும்
அழகாய் மலரும் காதல் !..

மெல்லினத்தின் ஊடே வல்லினம் போல்
காதலின் ஊடே சண்டை காட்சிகள் !
சுயத்தை இழக்காத காதலன்
சண்டையிலும் சுகமாய் இனிக்கிறான் !

காதலுக்காக திருமணத்தை நிறுத்தியவள்
காதலுக்காக காதலை துறப்பதா ?...
நொடிப்பொழுதில் எடுக்கும் முடிவு தான் காதலா ?
முடிவு வரை வாழும் ஒவ்வொரு நொடியும் காதலா ?...

குழம்பி தான் போகிறேன் !..

"இந்த உலகத்துல எவ்ளவோ பொண்ணுங்க இருந்தும்,
நான் ஏன் ஜெஸ்ஸி-எ லவ் பண்ணேன் ?.. "

வெள்ளி, மார்ச் 12, 2010

வெள்ளந்தி சிரிப்பும், பாவாடை நெனைப்பும் !...மத்தியான வேலையில
வயக்காட்டு மேடையில
பூவாடை வீசயில
பாவாடை நெனப்புத்தான் !

ஒத்தையடி பாதையில
ஒத்தையா நீ போகையில
உன்னோட வந்ததெல்லாம்
என்னோட உசுரு தான் !

கொலுசு போட்ட பாதத்துல
நெருஞ்சி முள்ளு குத்தையில
உனக்கு முன்ன துடிச்சதெல்லாம்
என்னோட மனசு தான் !

வெள்ளாவி வெளுக்கையிலே
வெள்ளை சோறு பொங்கையில
வளந்த பருத்தி வெடிக்கையிலே
பளிச்சின்னு உன் மொகம் தான் !

ஏரெடுத்து உழுகையில
எருமைக்கண்ணு மேய்க்கையில
ஏரிக்கரையில் குளிக்கையிலே
என் சோடி நெனைப்பு தான் !..

நெலா காயும் ராத்திரி
வெளிச்சந்தரும் பூத்திரி
வாடை காத்தில் ஆடுதடி
உடம்பெல்லாம் வேகுதடி !..

கருகமணி போட்ட புள்ள
உதட்டோரம் செவந்த புள்ள
என் உசுர பிரிச்சி எடுத்த
காரணந்தான் என்ன புள்ள ?

காஞ்சமரம் பூத்திருக்கு
கொத்துக்கொத்தா காய்ச்சிருக்கு
சோடிகிளிக்கு தெரியலையா
பக்கம் வர புடிக்கலையா !..

ஒத்தச்சொல்லு சொன்னியே
நிக்கவச்சி கொன்னியே
மண்ணத் தள்ளி பொதச்சாலும்
மனசுக்குள்ள நின்னியே !..

குருவி காக்கா கோழி கூட
நெனைச்ச உடனே கூடுதடி ...
பாழா போன மனுசனுக்கு
சாதி சனம் தடுக்குதடி ...

கம்மாக்கரை ஓரத்துல
சாயுங்கால நேரத்துல
கண்ணு ரெண்டும் ஈரத்துல
என் குருவி தூரத்துல !..

ஒத்தையில நின்னாலும்
சாதி சனம் கொன்னாலும்
என் உசுரு உனக்காக
சத்தியமா வரும் புள்ள ...

சத்தியமா வரும் புள்ள !!!...

வியாழன், மார்ச் 04, 2010

கவிதைகளும் கவுண்டமணியும் !..
நிலவுக்கு ஏன் வெட்கம் ?
தென்னை ஓலையில் ஒளிகிறதே
ஒ!.. உன்னை பார்த்ததாலா?

(டேய்.. அது வெட்கம் இல்ல.. கப்பு... இவளுங்க எல்லாம் என்னைக்கு டா குளிச்சிருக்காங்க ?..)

நான் எண்ணும் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை
உன் கண்ணின் மணியை பார்த்த பிறகு !

(ஒ.. சென்ட்ரல் ஜெயில்-ல கூரைய எடுத்துடாங்களா?... களி தின்னாலும் கவிதை போகல உனக்கு .. அட்ரா அட்ரா )

வெயிலில் நான்
வெளியே செல்வதில்லை ..
கண்ணுக்குள் வாழும் உனக்கு
வேர்க்கும் என்று !..

(செந்தில்: அண்ணே,நான் கண்ண மூடிட்டு செய்யுற வேலைய.. நீங்க கண்ண தொறந்துட்டு செய்வீங்களா அண்ணே ?)

கங்கையே !
நீ மோட்சமடையும் நாளின்று
என்னவள் குளிக்க வருகிறாள் !!!

(அப்பாடா.. கடைசியில குளிக்கணும் முடிவு பண்ணிட்டாளா ?...உலகம் பொழைச்சதுடா சாமி !..)

சிப்பியின்றி முத்துக்கள்
உருவாகுதே !
என்னவள் குளித்த துளிகள் !..

(ஆமாண்டா .. குளிச்ச தண்ணி, பல்லு துலக்குன பிரஷு, பிஞ்சி போன செருப்பு ... எல்லாத்தையும் வச்சி மியுசியம் கட்டுங்க ..)

முல்லை பூக்களின்
கூட்டம் கண்டேன்
உன் சிரிப்பில் !..

(ஆத்தா.. நீ சிரிக்காத ஆத்தா.. புள்ள பயப்படுது.. கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்கு.. )

என் தரிசு நிலங்கள், பூ பூக்குதே...
ஒரு துளி மழை இல்லாமல் !
ஒ... உன் பார்வை பட்டதாலோ?

(அப்படியே அம்மணிய, மதுர பக்கம், திருநெல்வேலி பக்கம் கொஞ்சம் பாக்க சொல்லுங்க .. தண்ணி இல்லியாம்)

திரியின்றி, நெய்யின்றி
அகலாக எரிவேன்!..
இரவிலும் உன்னை பார்க்க ..

(செந்தில்: அண்ணே, இதுல எப்டினே லைட் எரியும் .. விளையாடாதீங்கன்னே)

உதடுகளால் ஆடுகிறேன் கபடி
மூச்சு விடாமல்
என் தலையணை பஞ்சாகிறது !!!

(டேய்... நீ எந்த நேரத்துக்கு எந்த டைப்பா முழி-எ மாத்துவேனு எனக்கு தெரியும் .. கிளம்பு... கிளம்பு ...)

கோடி கோடியாய் பணம்
செலவழிக்க முடியாமல் மனம்
நகை விரும்பாத நங்கையாய்
நீ ...

(30 ரூபா குடுத்தா, 3 நாளைக்கு கண்ணு முழிச்சி வேலை பாக்குற மொன்ன நாயிக்கு .. பேச்சை பாரு )

கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும் !..
உன் மதம் சொன்ன வார்த்தைகள்
கேட்டதுண்டோ தோழி ?

(டேய் அதெல்லாம் பழசு, புது ஸ்டைலு ... மம்மி.... டாடி ..)

தமிழ் - வற்றாத ஜீவ நதி
யார் சொன்னது ?
என்னவளை பாட
வார்த்தைகள் போதவில்லை !!!

(செந்தில்: அண்ணே, நீங்க பத்தாவது பெயில் அண்ணே... நான் எட்டாவது பாஸ் அண்ணே )

சொல்லும் பொருளே
சொல்லை சொன்னால்
சொல்லும் வார்த்தை
நெஞ்சில் ஏறுமோ ?

(அய்யய்யா .. கல்ல கண்டா, நாய காணோம் .. நாய கண்டா, கல்ல காணோம் .. மவனே நேர்-ல வாடி நீ )

முதற்கணம் மண்ணிலும்
மறுகணம் விண்ணிலும்
இயற்கையே குழம்பியதே ..
உனை பார்த்த அக்கணம் !..

(நெப்போலியன்-ம், ஓல்டு மாங்க்க்கும் சேத்து அடிச்சா அப்படி தான் இருக்கும்... தண்ணி சேத்துகடா-னா கேக்குறியா ?...)

ஒரு நொடியில்,
உன் பார்வையில்,
ஓராயிரம் கவிதைகள் !..

(நாராயணா.. இந்த கொசு தொல்லை தாங்க முடியல.. மருந்தடிச்சி கொல்லுங்கடா)

திங்கள், மார்ச் 01, 2010

ஏனடி அழைத்தாய் ?ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

என் கவிதை தடாகத்தில்
அழகாய் பூத்திருந்தேன் !
உன் பிம்பம் விழுமென
நீராய் காத்திருந்தேன் !

கல்லெறிந்து போகிறாய்
கல் நெஞ்சக்காரியோ ?
தெறித்த துளிகளும்
முத்துக்களாய் உனக்காக !

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

தொட்டியில் இருக்கும் மீன் நான்
கையில் எடுத்து கொஞ்சுகிறாய் ...
சுவாசமின்றி வாழும் கலையை
எனக்கு கற்று கொடுக்கிறாய் !..

துடிக்கும் போது இனிக்கும் ...
இனிக்கும் போது வலிக்கும் ...
வலிக்கும் போது சிரிக்கும் ...
விந்தையை நீ அறிவாயோ ?

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

கார்மேகம் சூழ்ந்ததென
நெடுவனம் தான் வருந்துமோ ?
பூந்தென்றல் வீசுதென
பூக்களும் தான் புலம்புமோ ?

காதலன் கொஞ்சுகையில்
காதல் மனம் கெஞ்சுமோ ?
இயற்கையின் விதி புரியாதோ ?
காதலின் சதி தெரியாதோ ?

பேதை பெண்ணே !
நான் காதலிப்பது
எனக்காக அல்ல
நமக்காக !...

இல்லையென்று கேட்பதற்கு
இல்லாமலே போகலாம் !...
இதற்காகவா அழைத்தாய் ?
எனை இதற்காகவா அழைத்தாய் ?

ஆழ பதிந்து விட்டாய்
இனி மீள முடியாது !
எனை இரண்டாய் பிளந்தாலும்
உன் நினைவு அகலாது !..

உலகத்தின் உச்சியில் உன் பெயரை
உரக்க சொல்ல வேண்டும் !
விரகத்தின் உச்சியில் எனை நீ
கட்டியணைத்து கொள்ள வேண்டும் !

இதிகாச காதல்கள் நம்முன்
மண்டியிட வேண்டும் !
புதிதாக காதல்கள் நாம்
கண்டு உணர வேண்டும் !...

நீ 'உம்' எனும் அக்கணம்
உலகத்துக்கு
புதியதோர் காதலர் தினம் !

உலகமே காத்திருக்கிறது
புத்தம் புது
காதலுக்காக !!!