வெள்ளி, அக்டோபர் 01, 2010

கருவாச்சி காவியம் - புத்தகவிமர்சனம்


தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்','கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் தான் என்று என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. - வைரமுத்து.

புத்தகத்தின் பின்னட்டையில் வைரமுத்துவின் வரிகளை படித்தவுடன், கர்வமோ, போதையோ தலைக்கேறிய சமயத்தில் எழுதி இருப்பாரோ என்று நினைத்தேன். அவர் படைப்பை அவரே புகழ்வது சிறுபிள்ளைதனமாக தோன்றியது. புத்தகத்தை வாங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை தொடவே இல்லை. தற்செயலாக எடுத்து படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தை கீழே வைக்கவில்லை. படித்து முடிக்கும் போது, அதிகாலை மூன்று மணி. புத்தகத்தின் கடைசி பக்கத்துக்கு வந்தபோது, வைரவார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

வைரமுத்து சிறுவனாக இருந்தபோது கண்டு,கேட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு தான் இந்த காவியம். வையைநதிக்கரையில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கிற பல பெண்களின் வாழ்க்கை தான் கருவாச்சி என்கிற கதாபாத்திரம். தேனி மாவட்டத்துல இருக்குற சொக்கத்தேவன்பட்டி என்கிற கிராமம் தான் கதைக்களம். கல்யாணமான ஆறாவது நாளே, அத்துவிட சொல்லி பஞ்சாயத்துல நிக்குற கட்டையன் தான் கருவாச்சியோட புருஷன். ரெண்டு குடும்பத்துக்கும் இடையில உள்ள நாப்பது வருஷப்பகையை தீர்த்து வைக்க பண்ணி வச்ச கல்யாணம் ஆறே நாள்ல அத்துகிட்டு நிக்குது.

அத்துவிட்ட புருஷன மீறி, அதே ஊர்ல வாழ்ந்து காட்டுவேன்-னு சொல்ற கருவாச்சியோட பிடிவாதமும், 'எப்படி வாழற-னு பாக்கலாம்-டி' சொல்ற கட்டயனோட வீறாப்பும் தான் கதை. சுருக்கமா நான் சொல்லிட்டேன். ஆனா வைரமுத்து காவியமா படைச்சிருக்கார். அந்த ஊர் மக்களோட வாழ்க்கைய அவ்வளவு அருமையா சொல்லி இருக்கார். அந்த வட்டார மொழிவழக்கு ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், ரெண்டு அத்தியாயம், முடியறதுக்குள்ள பழகிடும். பிடிக்க ஆரம்பிச்சிடும்.

கருவாச்சி, அவ ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவனப்பன் சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம். இவங்க எல்லார் கூடவும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிச்ச அனுபவம் இருக்கும் இத படிச்சி முடிச்ச உடனே. அது மட்டுமில்லாம, அந்த மக்களோட வாழ்க்கை முறை, நகரங்கள்-ல கேட்டறியா வழக்கங்கள், அருமையான மருத்துவ குறிப்புகள், விவசாயம் செய்யும் முறைகள், மழை பொய்த்த காலங்களில் மக்கள் சமாளித்த விதம், அவர்கள் பட்ட கஷ்டங்கள், சின்ன சின்ன சந்தோஷங்கள், அவங்க நக்கல் பேச்சு, பொறாமை பிடித்த உள்ளங்கள், நெல்லுசொத்துக்கு ஆசை, கல்யாணம் பண்ண முறைகள் என அந்த மக்களோட ஒரு சிறந்த பதிவு ஆவண நூல்-னு சொல்லலாம்.

சில விஷயங்கள் எனக்கு ரொம்ப புதுசா இருந்திச்சி.

௧. பன்னி அடிக்குற முறை.
௨. காசுக்கு மாரடிக்குற வழக்கம்.
௩. விதவிதமான கருக்கலைப்பு முறைகள்.
௪. கெடாவுக்கு காயடிக்கற முறைகள்.
௫. பாறைக்கறி செய்ற வகையறா.
௬. அயிரமீன் புடிக்குற முறை.
௭. சாணிக்கு போட்டி போடும் வறிய பெண்களோட வாழ்க்கை.
௮. பல மூலிகைசெடிகள் பற்றிய குறிப்புகள்.
௯. ஒத்தையில கருவாச்சி புள்ள பெத்தது.
௰. மார்பு கட்டிப்போனா பண்ற வைத்தியம்.
௧௧. பொன்னுல நகை செய்யற முறை.
௧௨. குடிசை கட்டுறது எப்படி.

இப்படி நெறைய விஷயங்கள் இருக்கு இந்த காவியத்துல.

வைரமுத்துவோட உரைநடை-ல ஒரு சக்தி இருக்கு. கருவாச்சி புள்ள பெத்தப்ப, பெரியமூக்கி பெருங்காத்துக்கு செத்து போனப்ப, முப்பத்தி ஏழு வருஷத்துக்கு அப்பறம் கட்டையன பாக்கறப்ப, கஞ்சா அடிச்சி தேஞ்சி போன புள்ள அழகுசிங்கத்த பாக்கறப்ப, பூலித்தேவனுக்கு காயடிக்கறப்ப-னு பல இடங்கள்ல என்னை கேட்காமலே கண்ணுல முட்டிட்டு நிக்குது தண்ணி. சந்தோசத்தையும் சோகத்தையும் ஒண்ணா பெசைஞ்சி, நெஞ்சுல தடவுன மாதிரி... நல்லா காவியம் படிச்ச சந்தோஷமா?.. கதைல உள்ள சோகமா?.. எது விஞ்சி நிக்குது-னு தெரியாது. சாமியாரோட அத்தியாயம் மட்டும் இடைசெருகல் மாதிரி கதையோட ஒட்டாம போகுது. இதை தவிர்த்து இருந்தா, நல்லா இருக்கும்-னு என் மனசு சொல்லுது. கறையில்லா நிலவுண்டோ?..

அடுத்து 'கள்ளிக்காட்டு இதிகாசம்' படிக்க போறேன். இப்பவே சந்தோஷமா இருக்கு !!!


கருவாச்சி காவியம் (இப்புத்தகத்தை இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்)

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

மணக்க போகும் பெண்ணுக்கு !!!பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
படித்துறை மணலில்
பாட்டொன்று படித்தேன் !..

மணக்க போகும் பெண்ணுக்கு
மயங்க வைக்கும் கண்ணுக்கு
மழலை மொழி சொல்லுக்கு
மண வாழ்த்தொன்று வடித்தேன் !..

தேவதையை மணமுடிக்க
தெருவெல்லாம் வெடி வெடிக்க
தொலைதூர நிலவாக
திரிசங்கு ஒலியாக

திருமகன் அங்கு வருவானடி...
திருமகள் உன்னை மணப்பானடி...

கணநேர கள்வனாகி
காதோரம் முத்தமும்
கால்கொலுசு ஓசையில்
காதலின் மொத்தமும்

கணவன் வந்து தருவானடி...
காதல் சொல்லி திரிவானடி...

இருவிழி இமைகளும்
இணைந்தே இமைப்பதும்
இருவரும் ஒன்றாக
இருதயம் துடிப்பதும்

இயற்கை கொடுத்த சந்தமடி...
இருமனம் இணையும் சொந்தமடி...

கோல் ஊன்றும் வயதிலும்
தோள் தாங்கும் விழுதாக
கல்லறை சேரும் வரையிலும்
உனக்கு மட்டும் முழுதாக

மணவாளன் இருப்பானடி - உன்
மனம்போல நடப்பானடி

கண்ணீரை கண்கள் மறந்து போகட்டும்
புன்னகை மட்டுமே பூத்து நிற்கட்டும்
இல்லறத்திற்கு இலக்கணம் இவர்கள் தானென்று
இமயமும் குனிந்து வாழ்த்துக்கள் சொல்லட்டும் !...

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

தாயும் நீயும் !..
தனித்திருந்தும், அன்பில் திளைத்திருந்தேன்
என் தாயின் கருவறையில்
வலித்திருந்தும், வெளியே சிரித்திருந்தேன்
உன் காதல் முடிவுரையில் ...

தாயும் புறந்தள்ளினாள்
நீயும் புறந்தள்ளினாய்
எலும்புகள் விரியும் ஒலியும்
காதலை பிரியும் வலியும் ...

ஒன்றென அறிவேன் கண்மணியே !..

தொப்புள்கொடி அறுத்தாலும்
சொந்தம் விட்டு போவதில்லை
காதலை நீ மறுத்தாலும்
உன்னை நான் பிரிவதில்லை ...

உயிரை கொடுத்த அன்னையும்
உணர்வை கொடுத்த உன்னையும்
காலம் முழுதும் மறவேனடி
நெஞ்சில் வைத்து மகிழ்வேனடி...

ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

எனது மதுரை நினைவுகள் - புத்தகவிமர்சனம்1950-களில் மதுரை எப்படி இருந்தது?. அப்போதைய மக்களின் வாழ்முறை, கலாச்சாரம், நம்பிக்கைகள், பொருளாதார சூழ்நிலை, ஆங்கிலேய ஆதிக்கம் ஆகியவற்றை முழுமையாக படம்பிடித்து காட்டுகிறது இந்நூல். ஆசிரியர் மனோகர் தேவதாஸ், தன்னுடைய வாழ்கையை நல்ல நகைச்சுவையுடன், விறுவிறுப்பான "மதுரையின் வரலாறாக" எழுதி இருக்கிறார். இந்த நூலின் மிகபெரிய சிறப்பு, அதிலுள்ள ஓவியங்கள் தான். அந்நாளைய மதுரை-யை மிக நுணுக்கமாக படம்பிடித்து வரைந்திருக்கிறார் ஆசிரியர். ஆம். ஆசிரியர் ஒரு மிகச்சிறந்த ஓவியரும் கூட. 365 பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தை படிக்க நேரமில்லாதவர்கள் கூட, அதிலுள்ள ஓவியங்களை மட்டும் பார்த்தால், மதுரைக்கு பின்னோக்கி பயணம் செய்த ஒரு பரவச அனுபவம் கிடைக்கும்.

மனோகர், ஜெயராஜ், கப்ரியல் மற்றும் ஹமீது ஆகிய நான்கு நண்பர்களின் இளம் பிராயம், மதுரையில் அவர்கள் அடித்த கூத்து, அவர்களிடையேயான நட்பு, விடலை பருவத்து காதல் ஆகியவை தான் இந்த நூலின் கரு. இது ஒரு சுயசரிதை நூல் அல்ல. சுவாரசயத்துகாக சில கற்பனை கதாபாத்திரங்களும், சம்பவங்களும் கோர்க்கப்பட்டுள்ளன. ஆனால் எவை உண்மை, எவை கற்பனை என்று கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த அளவுக்கு, இயல்பான ரசனையுடன் கூடிய, விறுவிறுப்பான கதை.

இந்த நூலின் மற்றொரு சிறப்பம்சம், மதுரையின் சரித்திர வரலாறு. வாழைப்பழ ஊசி போல், கதையின் ஓட்டத்தோடு மதுரையின் முக்கியமான இடங்களின் வரலாறையும் அள்ளி தெளிக்கிறார். மதுரையின் ஆவணபூர்வ வரலாறும், கற்பனை கலந்த கதைகளும் கிட்டத்தட்ட ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்தவை. அவற்றை அழகாக விளக்குகிறார்.

(உ.ம.) கடம்பவனத்தில் இருந்த அள்ளிகுளத்தருகே இருந்த ஒரு சிவலிங்கத்தை சுற்றி, குலசேகரபாண்டியன் ஒரு கோயிலை கட்டி, அதனை சுற்றி ஒரு நகரமும் அமைத்தான். சிவபெருமான் அவனை ஆசிர்வதித்து, இனிமையான அமிர்தத்தை அள்ளி அங்கங்கே தெளித்தார். மதுரம் என்றால் இனிமை. அதனால் தான் இந்நகரம் மதுரை என்று அழைக்கப்படுகிறது. அவனுடைய பேத்தி மீனாட்சியை, சிவபெருமான் சுந்தரேஸ்வரராக வந்து திருமணம் செய்துகொண்டு மதுரையை ஆட்சி புரிந்தார். இப்படி தெய்வீக ஆட்சியாக ஆரம்பித்து, மனிதகுல ஆட்சியாக மாறியதாக, புராணங்கள் சொல்கின்றன. இதை தவிர்த்து, பதிவு ஆவணங்களில் உள்ள வரலாறையும் நமக்கு சொல்கிறார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே, கிரேக்கர் மெகஸ்தனிஸ் பாண்டியர்களை பற்றியும் மதுரையை பற்றியும் எழுதிருக்கிறார். அப்போதே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குலம் தமிழ்க்குலம். வாழ்க தமிழ் !!!

கிருத்துவ சகாப்தம் ஆரம்பமான காலம், களபிறர்கள் படையெடுப்பு, சோழர்களின் ஆதிக்கம், பாண்டியர்களின் புரட்சி, முஸ்லிம் மன்னர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் நாயக்கர்களின் காலம் என வரிசையாக, சுருக்கமாக விவரிக்கிறார். நாயக்கர்கள் ஆண்ட 200 வருடங்கள், மதுரையின் பொற்காலம என்கிறார். இவை தவிர, ஸ்பென்சர்ஸ், ரீகல் டாக்கீஸ், ஆர்வி மில்ஸ், அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தெப்பகுளம், பச்சை கிணறு, யானை மலை, வைகை ஆறு, அதில் ரோமானிய நாணயங்கள், குற்றாலம் அருவி, அழகர் கோயில், கள்ளழகர் கதை, மதுரை ரயில்வே நிலையம் வந்த கதை, ரயில்வே காலனி உருவான கதை, ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கை, பிராமணர்களின் வாழ்க்கை, குறிப்பாக பிராமண விதவைகளின் கொடுமையான வாழ்க்கை, கிருத்தவர்களின் வாழ்க்கை, மற்றவர்களை விட ஒருபடி கீழே கருதப்பட்ட அவலம்... என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

மதுரையில் பிறந்தவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் தெரிந்த அனைவரும், படிக்க வேண்டிய நூல் இது. ஒரு நண்பன் நம்முடன் சுவாரசியமாக பேசுவது போலவே இருக்கும்.

கண்டிப்பா படிங்க !!!

தமிழில் இந்த புத்தகத்தை பெற, இங்கே சுட்டவும்

Green Well Years (In English) Click for orders in India

வியாழன், செப்டம்பர் 09, 2010

கனவோடு கலைபவளே !!!என் மார்பில் படுத்து நீ உறங்க
உன் கூந்தல் கோதி நான் கிறங்க
என் விரல்கள் உன்மேல் பயணம் செல்ல
வெட்கி சிவந்து எனை நீ கொல்ல ...

காமன் சூத்திரம் முழுதும் விளங்க
நிலைகள் அறுபதில் உயிரும் கலங்க
உச்ச மோகத்தில் உடல்கள் நடுங்க
காமம் தணிந்தும், காதல் ததும்ப ...

நம் அணைப்பின் இறுக்கத்தில் இரவுகள் கழிய
விண்மீன்கள் நம்மேல் பனியாய் பொழிய
இரவின் முடிவில் என் கனவுகள் கருக
காலைப்பனியாய் நான் தனிமையில் உருக ...

நம் கனவுப்பூக்கள் ஒவ்வொன்றும்
என் கண்ணீர்த்துளியில் நனைகின்றது
நீ இல்லையென்பதை அறியாமல்
மீண்டும் மீண்டும் பூக்கின்றது ...

கனவோடு கலைபவளே,
என் நிஜத்தோடு கலப்பாயோ ?...

ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

என்னுயிர் தோழிக்கு !...வெள்ளி மழையில் தங்கச்சிலை
யாரை நினைத்து நீராடுதோ ?
நனைத்த துளிகள் மோட்சம் பெற்று
பூமி பந்தை சூடாக்குதோ ?

காதல் வேள்வி செய்யும் பெண்ணின்
இதழும் தேன்துளி சுரக்குதோ ?
பொன்வண்டை தேடி தேடி - இந்த
பூவும் உறக்கம் தொலைத்ததோ ?

பருவம் வந்தால் பூப்பூக்கும்
சாய்ந்து உறங்க துணை கேட்கும்
வாடும் போதும் வாசந்தரும்
பூங்கொடியும் நீயும் ஒன்றல்லவோ !..

முக்கனியில் ஒன்றாய் இருந்தாலும்
கனிந்தபின் தான் கிளி வருமே !
காதல் கூடும் வேளை வரும்
அதுவரை கொஞ்சம் பொறு மனமே !!!...

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

தூங்க மறந்த நேரத்தில் !...கவிதை பூக்களால் ஒரு தோட்டம்
பொய்த்த வானமாய் உன் பிரிவு
காத்திருக்கும் பூமியாய் என் கண்கள்
தூரத்து மேகமாய் உன் சிரிப்பு !..

கொட்டி செல்லும் மழையால்
மேகம் ஒன்றும் குறைவதில்லை
இதழில் பட்ட ஒரு துளியை
பூக்கள் என்றும் மறப்பதில்லை !..

ஒரு முறை சிரித்துவிட்டு போ  !..

காதல் பூக்கள் மலர்வது
காமன் காலடி செல்லத்தான்
காலில் மிதித்து பூக்களை
கல்லறைக்கு அனுப்பாதே !..

காதல் வசப்படும் !
காதல் வசப்படும் !
காதல் வசப்படும் !
புலம்பும் மனது !..

என்ன சொல்லி தூங்க வைப்பேன் ?

திங்கள், ஜூன் 21, 2010

ரணம் சுகம் - a musical novelette"காயம் தந்த முட்களுக்கு நன்றி"
முதல் பார்வையிலே மூச்சடைக்க வைக்கும், என் தேவதையை நினைவுப்படுத்தியது - நாவலின் முன்னுரை. படிக்கும் முன்னே, மனதினுள் போராட்டம். படிக்கலாமா? வேண்டாமா?... படித்தேன்...

சுமாரான வேகத்தில் தொடங்குகிறது கதை. கல்லூரி நாட்களின் கவிதைகளை இன்னும் அழகாக பதிவு செய்திருக்கலாம். ஒவ்வொரு பகுதியின் முடிவிலும், ஒரு பாடல்.

"பச்சை நரம்புக்குள் பாதரசம் ஏனோ?" - முதல் பாடல். ஆழியில் முத்தெடுத்த அனுபவம். இளங்கன்றின் துள்ளல். எனையறியாமல் புன்னகை பூத்த உதடுகள். முதல் மழையின் முதல் துளி. அருமை !.

படித்துகொண்டிருக்கும் போது மனதில் பெருங்குழப்பம்... இது நாவலில் கவிதையா?.. கவிதையில் நாவலா?.. இயற்றமிழ் கவிதை போல் இயல்பாய், ஒற்றை தாமரை போல் அழகாய், ஒரு தலை காதல். ஆண்களுக்கே உண்டான சாபக்கேடு !. நம் நாயகன் விலக்கல்ல...

இசைஞானியின் இசையில் கேட்டு மகிழ்ந்த பாரதியின் பாடல்கள், இவர்கள் இசையில் எடுபடவில்லை.(என் தனிப்பட்ட கருத்து. உங்களுக்கு பிடிக்கலாம்). வழக்கமான கல்லூரி நாட்களும், போட்டிகளும், தயாரிப்புகளும், விடுதிகளும், கொண்டாட்டங்களும்-என நகர்கிறது கதை.

முத்தம்.சில்லென்று சிலிர்க்க வைத்தது. நட்பை சிதைக்க வைத்தது. முடிவு?... நாயகன் பார்வையில் ரணம். நாயகி பார்வையில்?... வார்த்தையால் விவரிக்க முடியாதென்பதால், விவரிக்காமலே விட்டுவிட்டார்கள். சுனாமியில் சிக்கிய சுறாவுக்கும், காதல் கொண்ட பெண்ணுக்கும் - என்ன வித்தியாசம்?. சுறா தனக்காக போராடும். பெண் கடலுக்காக போராடுவாள். விந்தை ஜீவன்கள் - பெண்கள்.

"நட்பும் விலகிவிட்டது. காதலும் விலகிவிட்டது.முன்னது இன்னும் வலித்தது." - முந்நூறு முறை படித்துவிட்டேன். நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பறக்க தயாராகுங்கள். கண்கள் பனிக்க தயாராகுங்கள்.
சிரிக்க தயாராகுங்கள். சிலமுறை, சிதைய தயாராகுங்கள்.

இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்

வியாழன், மே 20, 2010

மதுரைக்கு போறேனடி !...மதுரைக்கு போறேனடி - என்
மாமன்கிட்ட பொண்ணு கேட்க ...
அம்மன் கோயில் சாட்சியோட
சீதனமா உன்னை கேட்க !..

ஆயிரங்கால் மண்டபமும்
சாயுங்கால சூரியனும்
வீசுகின்ற தென்றலோடு
பேசுகின்ற மல்லிகையும்
வாழ்கின்ற மதுரையில
வாழ்ந்து வந்த தேவதையை,
கொண்டு போக வரம் கேட்பேன் ...
உங்கப்பன்கிட்ட தினம் கேட்பேன் !...

தூங்காத இரவுகளும்
பொங்கி வரும் கனவுகளும்
பேசாத வார்த்தைகளும்
புரியாத அர்த்தங்களும்
கேட்காமலே கொடுத்தவ நீ ...
கொடுத்தவளை கேட்க போகிறேன் !...

நீ போட்ட கோலம் போல
பூப்போட்ட தாவணியில்
அழகழகா சிரிச்சிக்கிட்டு
என் உசுர பறிச்சிக்கிட்டு
நீ பண்ண கொடுமையெல்லாம்
சொல்லப் போகிறேன் உங்கப்பன்கிட்ட !..

ஜல்லிக்கட்டு காளையை போல்
துள்ளிக்கிட்டு திரிஞ்சாலும்
கண்ணுக்குட்டி உன்னை விட்டு
தள்ளி தள்ளி நிக்குறது
மாமன் சொல்லும் சொல்லுக்காக !...
தமிழ்மதுரை மண்ணுக்காக !...

பஞ்சுக்குள்ள நெருப்ப வச்சி
பத்திரமா பாத்தாலும்
பத்திக்கிட்டு போகுமின்னு
பக்குவமா சொல்ல போறேன் !..

நெஞ்சுக்குள்ள ஓடி வந்து
கொஞ்சி விட்டு போனவள
சொந்தம் பேச வர போறேன் ...
சொந்தக்காரன் ஆகப் போறேன் !..

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

நீ... நான்... நாம் !..உன்வலியை நானறிந்து
தன்வலியாய் தானுணர்ந்து
என்னுயிரில் நீ கலந்து
நாம் எழுதிய கவியன்றோ ?.

நீயின்றி நானின்றி
நாமாகி கலந்தபின்
ஊனின்றி உயிரின்றி
நம் காதல் வாழுமன்றோ !.

குலமென்றும் மதமென்றும்
சுற்றமும், சூழும் சனமென்றும்
பழங்கதைகள் பலக்கேட்டு
நின்றிடுமோ நம் காதல் !.

பாடிப்பறந்த பறவையின்
சிறகொடித்ததோ நம் காதல்
ஓடித்திரிந்த மான்குட்டியின்
கால் முறித்ததோ நம் காதல் !.

பட்டுபுழு பட்டாம்பூச்சியாகும் போது
வலிகள் எல்லாம் பறந்திடுமே !..
கணவன் மார்பில் சாய்ந்துறங்கும் போது
ஆயிரம் சிறகுகள் முளைத்திடுமே !..

ஞாயிறு, ஏப்ரல் 25, 2010

என் காதல் ...
இறந்தே பிறந்த
குழந்தையை போல் ...
முடிந்தே தொடங்கியது
என் காதல் ...

காதலின் மறுப்பும் ...
குழந்தையின் இழப்பும் ...
வாழ்நாள் முழுதும்
தொடரும் நினைப்பும் ...

புயலென வந்தாய் ...
வேருடன் சாய்த்தாய் ...
துளிர்க்கும் நினைப்புடன்
உயிருடன் நான் ...

மீனின் கண்ணீர்
கடலுக்கு தெரியுமா ...
ஆணின் கண்ணீர்
மனதுக்கு புரியுமா ?...

உயிரை பறித்தால்
சிரிப்புடன் மரிப்பேன் ...
நட்பை பறித்தால்
நான் என்ன செய்வேன் ?

அருவியின் உச்சியில் பரிசலாய் ...
சரியும் பனியில் சிறுமுயலாய் ...
எரியும் குடிசையில் குருடனாய் ...
சிங்கள தேசத்தில் தமிழனாய் ...
நான் !..

எதிர்மறை எண்ணங்கள்
மனதினில் வந்ததில்லை ...
அவை தவிர இப்போது
வேறொன்றும் தோன்றவில்லை ...

சித்தம் கலங்கி ...
முற்றும் குழம்பி ...
தெருவினில் அலையுமுன்
கொன்றுவிடுங்கள் என்னை !!!

கருணைக்கொலை புண்ணியம் !...

ஞாயிறு, மார்ச் 14, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா -- ஒரு விமர்சனம் !கள்வனை காட்டிய கைகள்
காதலை தழுவுகின்றன ...
கௌதம் மேனன்-ன்
விண்ணைத்தாண்டி வருவாயா !..

என் காதல் கொடுத்த கவிதைகளை
பறித்துச் சென்றது உன் படம் !.
தூக்கம் வறண்ட விழிகளை
நனைத்து சென்றது உன் படம் !..

நீரில் கண்கள் நீந்தும் போதும்
சிரிக்க வைத்தது உன் படம் !..
என் வாழ்வின் இனிய நிமிடங்களை
மீண்டும் தந்தது உன் படம் !..

தாமரையின் கவிதைகள் - பாடல்களில்
மேனன்-ன் கவிதைகள் - திரைக்கதையில்
ரகுமானின் கவிதைகள் - பின்னனி இசையில்
மனோஜ்-ன் கவிதைகள் - ஒளியாடலில்

மிரளாத காளையை போல்
அலட்டாமல் சிம்பு !..
தெவிட்டாத தேனை போல்
தித்திப்பாக திரிஷா !..

கணேஷ் - அளவாய் பேசி
அளவில்லாமல் சிரிக்க வைக்கிறார் ..
ரவிக்குமார் - அதிகமாய் பேசி
இவர் அவசியமா, என கேட்கிறார் :)

ஆட்டுக்குட்டி-கும் அன்பை போதித்த
தேவன் ஆலயத்தில் ...
திரைக்கதையின் துவக்கம்
காதலின் நடுக்கம் !

புயலே வந்தாலும்
புன்னகைக்கும் கார்த்திக் !..
குழம்பிய குளத்தில்
நிலவை தேடும் ஜெஸ்ஸி !..

முடியாமல் காதல் உரைத்த போதும்
நட்பென்று கூறி மறைத்த போதும்
ரயில் பயணத்தில் உடைந்த போதும்
அழகாய் மலரும் காதல் !..

மெல்லினத்தின் ஊடே வல்லினம் போல்
காதலின் ஊடே சண்டை காட்சிகள் !
சுயத்தை இழக்காத காதலன்
சண்டையிலும் சுகமாய் இனிக்கிறான் !

காதலுக்காக திருமணத்தை நிறுத்தியவள்
காதலுக்காக காதலை துறப்பதா ?...
நொடிப்பொழுதில் எடுக்கும் முடிவு தான் காதலா ?
முடிவு வரை வாழும் ஒவ்வொரு நொடியும் காதலா ?...

குழம்பி தான் போகிறேன் !..

"இந்த உலகத்துல எவ்ளவோ பொண்ணுங்க இருந்தும்,
நான் ஏன் ஜெஸ்ஸி-எ லவ் பண்ணேன் ?.. "

வெள்ளி, மார்ச் 12, 2010

வெள்ளந்தி சிரிப்பும், பாவாடை நெனைப்பும் !...மத்தியான வேலையில
வயக்காட்டு மேடையில
பூவாடை வீசயில
பாவாடை நெனப்புத்தான் !

ஒத்தையடி பாதையில
ஒத்தையா நீ போகையில
உன்னோட வந்ததெல்லாம்
என்னோட உசுரு தான் !

கொலுசு போட்ட பாதத்துல
நெருஞ்சி முள்ளு குத்தையில
உனக்கு முன்ன துடிச்சதெல்லாம்
என்னோட மனசு தான் !

வெள்ளாவி வெளுக்கையிலே
வெள்ளை சோறு பொங்கையில
வளந்த பருத்தி வெடிக்கையிலே
பளிச்சின்னு உன் மொகம் தான் !

ஏரெடுத்து உழுகையில
எருமைக்கண்ணு மேய்க்கையில
ஏரிக்கரையில் குளிக்கையிலே
என் சோடி நெனைப்பு தான் !..

நெலா காயும் ராத்திரி
வெளிச்சந்தரும் பூத்திரி
வாடை காத்தில் ஆடுதடி
உடம்பெல்லாம் வேகுதடி !..

கருகமணி போட்ட புள்ள
உதட்டோரம் செவந்த புள்ள
என் உசுர பிரிச்சி எடுத்த
காரணந்தான் என்ன புள்ள ?

காஞ்சமரம் பூத்திருக்கு
கொத்துக்கொத்தா காய்ச்சிருக்கு
சோடிகிளிக்கு தெரியலையா
பக்கம் வர புடிக்கலையா !..

ஒத்தச்சொல்லு சொன்னியே
நிக்கவச்சி கொன்னியே
மண்ணத் தள்ளி பொதச்சாலும்
மனசுக்குள்ள நின்னியே !..

குருவி காக்கா கோழி கூட
நெனைச்ச உடனே கூடுதடி ...
பாழா போன மனுசனுக்கு
சாதி சனம் தடுக்குதடி ...

கம்மாக்கரை ஓரத்துல
சாயுங்கால நேரத்துல
கண்ணு ரெண்டும் ஈரத்துல
என் குருவி தூரத்துல !..

ஒத்தையில நின்னாலும்
சாதி சனம் கொன்னாலும்
என் உசுரு உனக்காக
சத்தியமா வரும் புள்ள ...

சத்தியமா வரும் புள்ள !!!...

வியாழன், மார்ச் 04, 2010

கவிதைகளும் கவுண்டமணியும் !..
நிலவுக்கு ஏன் வெட்கம் ?
தென்னை ஓலையில் ஒளிகிறதே
ஒ!.. உன்னை பார்த்ததாலா?

(டேய்.. அது வெட்கம் இல்ல.. கப்பு... இவளுங்க எல்லாம் என்னைக்கு டா குளிச்சிருக்காங்க ?..)

நான் எண்ணும் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை
உன் கண்ணின் மணியை பார்த்த பிறகு !

(ஒ.. சென்ட்ரல் ஜெயில்-ல கூரைய எடுத்துடாங்களா?... களி தின்னாலும் கவிதை போகல உனக்கு .. அட்ரா அட்ரா )

வெயிலில் நான்
வெளியே செல்வதில்லை ..
கண்ணுக்குள் வாழும் உனக்கு
வேர்க்கும் என்று !..

(செந்தில்: அண்ணே,நான் கண்ண மூடிட்டு செய்யுற வேலைய.. நீங்க கண்ண தொறந்துட்டு செய்வீங்களா அண்ணே ?)

கங்கையே !
நீ மோட்சமடையும் நாளின்று
என்னவள் குளிக்க வருகிறாள் !!!

(அப்பாடா.. கடைசியில குளிக்கணும் முடிவு பண்ணிட்டாளா ?...உலகம் பொழைச்சதுடா சாமி !..)

சிப்பியின்றி முத்துக்கள்
உருவாகுதே !
என்னவள் குளித்த துளிகள் !..

(ஆமாண்டா .. குளிச்ச தண்ணி, பல்லு துலக்குன பிரஷு, பிஞ்சி போன செருப்பு ... எல்லாத்தையும் வச்சி மியுசியம் கட்டுங்க ..)

முல்லை பூக்களின்
கூட்டம் கண்டேன்
உன் சிரிப்பில் !..

(ஆத்தா.. நீ சிரிக்காத ஆத்தா.. புள்ள பயப்படுது.. கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்கு.. )

என் தரிசு நிலங்கள், பூ பூக்குதே...
ஒரு துளி மழை இல்லாமல் !
ஒ... உன் பார்வை பட்டதாலோ?

(அப்படியே அம்மணிய, மதுர பக்கம், திருநெல்வேலி பக்கம் கொஞ்சம் பாக்க சொல்லுங்க .. தண்ணி இல்லியாம்)

திரியின்றி, நெய்யின்றி
அகலாக எரிவேன்!..
இரவிலும் உன்னை பார்க்க ..

(செந்தில்: அண்ணே, இதுல எப்டினே லைட் எரியும் .. விளையாடாதீங்கன்னே)

உதடுகளால் ஆடுகிறேன் கபடி
மூச்சு விடாமல்
என் தலையணை பஞ்சாகிறது !!!

(டேய்... நீ எந்த நேரத்துக்கு எந்த டைப்பா முழி-எ மாத்துவேனு எனக்கு தெரியும் .. கிளம்பு... கிளம்பு ...)

கோடி கோடியாய் பணம்
செலவழிக்க முடியாமல் மனம்
நகை விரும்பாத நங்கையாய்
நீ ...

(30 ரூபா குடுத்தா, 3 நாளைக்கு கண்ணு முழிச்சி வேலை பாக்குற மொன்ன நாயிக்கு .. பேச்சை பாரு )

கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும் !..
உன் மதம் சொன்ன வார்த்தைகள்
கேட்டதுண்டோ தோழி ?

(டேய் அதெல்லாம் பழசு, புது ஸ்டைலு ... மம்மி.... டாடி ..)

தமிழ் - வற்றாத ஜீவ நதி
யார் சொன்னது ?
என்னவளை பாட
வார்த்தைகள் போதவில்லை !!!

(செந்தில்: அண்ணே, நீங்க பத்தாவது பெயில் அண்ணே... நான் எட்டாவது பாஸ் அண்ணே )

சொல்லும் பொருளே
சொல்லை சொன்னால்
சொல்லும் வார்த்தை
நெஞ்சில் ஏறுமோ ?

(அய்யய்யா .. கல்ல கண்டா, நாய காணோம் .. நாய கண்டா, கல்ல காணோம் .. மவனே நேர்-ல வாடி நீ )

முதற்கணம் மண்ணிலும்
மறுகணம் விண்ணிலும்
இயற்கையே குழம்பியதே ..
உனை பார்த்த அக்கணம் !..

(நெப்போலியன்-ம், ஓல்டு மாங்க்க்கும் சேத்து அடிச்சா அப்படி தான் இருக்கும்... தண்ணி சேத்துகடா-னா கேக்குறியா ?...)

ஒரு நொடியில்,
உன் பார்வையில்,
ஓராயிரம் கவிதைகள் !..

(நாராயணா.. இந்த கொசு தொல்லை தாங்க முடியல.. மருந்தடிச்சி கொல்லுங்கடா)

திங்கள், மார்ச் 01, 2010

ஏனடி அழைத்தாய் ?ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

என் கவிதை தடாகத்தில்
அழகாய் பூத்திருந்தேன் !
உன் பிம்பம் விழுமென
நீராய் காத்திருந்தேன் !

கல்லெறிந்து போகிறாய்
கல் நெஞ்சக்காரியோ ?
தெறித்த துளிகளும்
முத்துக்களாய் உனக்காக !

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

தொட்டியில் இருக்கும் மீன் நான்
கையில் எடுத்து கொஞ்சுகிறாய் ...
சுவாசமின்றி வாழும் கலையை
எனக்கு கற்று கொடுக்கிறாய் !..

துடிக்கும் போது இனிக்கும் ...
இனிக்கும் போது வலிக்கும் ...
வலிக்கும் போது சிரிக்கும் ...
விந்தையை நீ அறிவாயோ ?

ஏனடி அழைத்தாய் ?
எனை ஏனடி அழைத்தாய் ?

கார்மேகம் சூழ்ந்ததென
நெடுவனம் தான் வருந்துமோ ?
பூந்தென்றல் வீசுதென
பூக்களும் தான் புலம்புமோ ?

காதலன் கொஞ்சுகையில்
காதல் மனம் கெஞ்சுமோ ?
இயற்கையின் விதி புரியாதோ ?
காதலின் சதி தெரியாதோ ?

பேதை பெண்ணே !
நான் காதலிப்பது
எனக்காக அல்ல
நமக்காக !...

இல்லையென்று கேட்பதற்கு
இல்லாமலே போகலாம் !...
இதற்காகவா அழைத்தாய் ?
எனை இதற்காகவா அழைத்தாய் ?

ஆழ பதிந்து விட்டாய்
இனி மீள முடியாது !
எனை இரண்டாய் பிளந்தாலும்
உன் நினைவு அகலாது !..

உலகத்தின் உச்சியில் உன் பெயரை
உரக்க சொல்ல வேண்டும் !
விரகத்தின் உச்சியில் எனை நீ
கட்டியணைத்து கொள்ள வேண்டும் !

இதிகாச காதல்கள் நம்முன்
மண்டியிட வேண்டும் !
புதிதாக காதல்கள் நாம்
கண்டு உணர வேண்டும் !...

நீ 'உம்' எனும் அக்கணம்
உலகத்துக்கு
புதியதோர் காதலர் தினம் !

உலகமே காத்திருக்கிறது
புத்தம் புது
காதலுக்காக !!!

ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

பார்க்க வேண்டும் ஒரு முறை !..அந்த நீல நிற மேலாடை
இன்னும் வைத்திருக்கிறாயா ?

நான் காதலுரைத்த போது
உன் இதயதுடிப்பை பதிவு செய்ததே ?
முதன் முதலாய் நீ பொய்யுரைத்த போது
மௌனமாய் சாட்சியளித்ததே ?

பிரித்து விட்ட கூந்தல்
பார்க்க மறுத்த கண்கள்
வார்த்தை மறந்த உதடுகள்
கண்ணீரை தடுத்த இமைகள் !..

அனைத்தும் என் கண்ணுக்குள்
நெருப்பாய் என் நெஞ்சுக்குள் !...

எப்படி இருக்கிறாய் நீ?
பார்க்க வேண்டும் ஒரு முறை !..

தேனீக்களை ஏமாற்றிய செவ்விதழ்கள் ..
உன் பேச்சுக்கு தாலாட்டும் லோலாக்கு ..
ஒப்பனை அறியாத பால் முகம் ..
அதில் குங்குமப்பூவாய் சில மச்சம் ..

பார்க்க வேண்டும் ஒரு முறை !..

அமுதத்தை அள்ளி தந்தாலும்
குழந்தை தாய்ப்பாலுக்கு அழுவது போல் ...
சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தாலும்
நெஞ்சம் உனை காண ஏங்குதே ...

பார்க்க வேண்டும் ஒரு முறை !..

என் கண்கள் என்ன குற்றம் செய்தது ?
உன்னை பார்க்க தவமிருந்ததை தவிர !
வரம் தருவாயோ, உன்னை பார்ப்பதற்கு ?
ஒரு நொடி போதும், நூற்றாண்டுகள் வாழ்வேன் !

பார்க்க வேண்டும் ஒரு முறை !..

சனி, பிப்ரவரி 27, 2010

என் பெயர் !... உன் குரல் !...கோடி முறை கேட்டிருப்பேன்
என் பெயரை ...
இன்று மட்டும் இனிக்குதே !...

புன்னகை பூக்கும் பூவிதழில்
என் பெயரும் பூத்ததே !...

இன்னொரு முறை சொல்லாதே
எறும்புகள் என்னை மொய்க்கின்றன !...

அவள் உஷ்ணத்தை உணராமல்
குழலை நுகராமல்
இதழை வருடாமல்
செவிக்கு மட்டும் அதிர்ஷ்டம் !..

தொலைபேசி ஒழியட்டும் !..
அறிவியல் அழியட்டும் !..

யுகம் யுகமாய் காத்திருந்து
பிறந்தது மனித இனம் ...
தினம் தினமாய் காத்திருந்து
கேட்கிறது என் மனம் ...

என்னாகுமோ !..

மறுக்கும் சொல்லில் உன் காதல்
மறுக்க முடியாமல் தவிக்குதே !..
இனிக்க கேட்ட உன் குரல்
மீண்டும் மீண்டும் ஒலிக்குதே !..

கவிக்கு சொந்தக்காரி
கவிதையை படித்ததால்
கவிஞன் மனதில்
இன்னொரு கவிதை !

நேற்றைய கவிதை தகித்தது !
இன்றைய கவிதை இனிக்குது !
நாளைக்கும் கவிதை பூக்குமோ ?
கவியின் குரல் உனக்கு கேட்குமோ ?

வெள்ளி, பிப்ரவரி 26, 2010

மீண்டும் நீ வேண்டும் நண்பா !!!உயிரை உருக்கும் கலை
பெண்களுக்கென்று நினைத்திருந்தேன்
தவறென்று நிரூபித்தாய் ...

என்னை முற்றிலும் அறிந்தவர்கள்
முடிவு வரை இருப்பார்கள் என்றிருந்தேன்
தவறென்று நிரூபித்தாய் ...

காலங்கள் காயங்கள் ஆற்றும்
மாதங்கள் மனதை மாற்றும் என்றிருந்தேன்
தவறென்று நிரூபித்தாய் ...

நீ பேச மறுத்த இரவுகள்
உன் பாசத்தை பேசுகின்றன ...
நீ சிரிக்க மறந்த நிமிடங்கள்
என் வாழ்நாளில் குறைந்தன ...

எனக்காக ஓடி வருகிறாய்
மௌனத்தால் கொன்று செல்கிறாய் ...
வருவதால் உனை அழைப்பதா ?
கொல்வதால் உனை தடுப்பதா ?

நான் செய்ததென்ன ?

நட்பின் கொலையா ?
உண்மையின் விலையா?
அரிச்சந்திரனுக்கு வந்தது
என்னுடைய நிலையா?

இல்லாத காயங்கள் ஆற முடியாது
சொல்லாத சோகங்கள் தீர முடியாது !
நட்பை மறுக்கும் காரணம் தெரியும்
உன் ஊகம் தவறு - எப்போது புரியும் ?

மீண்டும் நீ வேண்டும்
மீண்டு வர வேண்டும்

காத்திருக்கிறேன் ...
நட்புடன் நட்புக்காக !

புதன், பிப்ரவரி 24, 2010

தேசபற்று !!!என் தாயின் கருவறையில்
கோடுகள் கிழித்து ரணமாக்கிவிட்டு
பெயர் வைத்தார்கள் ...
தேசபற்று !!!

பெற்ற குழந்தை பசியில் அழும்போதும்
காவல் நாய்க்கு சோற்றை வைக்கும் கடமை
தேசபற்று !!!

மொத்தமும் நமக்காக இருக்கும்போது
மிச்சதுக்காக அடித்துக்கொள்ளும் அவலம்
தேசபற்று !!!

ஒன்றாய் இருந்தோம் கருவறையில்
கிழித்து பிறந்தோம் விடுதலையில்
தாயின் இரத்தம் கணக்கில் இல்லை
பிள்ளைகளின் யுத்தம் முடியவில்லை

ஆயுதங்களாய் அழியும் செல்வத்தில்
பூமியில் சொர்க்கங்கள் படைக்கலாம் ...
குருதி சிந்தும் யுத்தங்களை 
அன்பு சிந்தும் முத்தங்களாக்கலாம் ...

இரத்தம் தோய்ந்த எல்லைகோடுகளில்
பூக்காடுகள் வளர்ப்போம் !
துப்பாக்கி சுமக்கும் இயந்திரங்களை
மனிதர்கள் ஆக்குவோம் !

தேசங்களை துறப்போம், நேசங்களை வளர்ப்போம்
எல்லைகளை மறப்போம், விண்ணுலகில் பறப்போம்
புதிய உலகம் உருவாக, பிரளயங்கள் தேவையில்லை
தேசங்கள் தாண்டி காதல் செய்வோம் !...

நான் தமிழனல்ல
நான் இந்தியனல்ல
பட்டங்களை துறந்து
பாடி திரியும் பறவை நான் !..

என்னோடு வாருங்கள் ...

பறந்து திரியலாம்
சிரித்து மகிழலாம்
ஆனந்தமாய் வாழலாம்
நிம்மதியாய் இறக்கலாம் !...

வெள்ளி, பிப்ரவரி 19, 2010

நீ ...என் இரவினில் கவிதைகள்
பகலினில் கனவுகள்
இரண்டிலும் அழகாய்
நீ ...

என் படுக்கையில் முட்கள்
தலையணை முத்தம்
முரட்டுத்தனமான மென்மை
நீ ...

சாரல் மழைக்கு ஏங்கும்
துளி பட்டவுடன் சுருங்கும்
தொட்டால்சினுங்கி
நீ ...

என் தரிசு நிலம் பூக்கின்றது
ஒரு துளி மழை இல்லாமல்
பறக்கும் பட்டாம்பூச்சியாய்
நீ ...

உயிர் கொடுத்த தாய்மை
உயிரை வாங்கும் காதல்
இருதலைகொள்ளி எறும்பாய்
நீ ...

கண்டும் காணாதிருக்க
பார்த்தும் பேசாதிருக்க முயல்கிறாய்
நடிக்கத் தெரியாத நங்கை
நீ ...

காதலை அறியாதவன்
காவியம் படைக்கிறேன்
நான் பிரம்மனாகிய காரணம்
நீ ...

கல்லில்லாமல் உளியில்லாமல்
சிற்பமொன்று வடிக்கிறேன்
என்னுள் பதிந்த ஓவியம்
நீ ...

என் கவிதையின் காரணம்
காரணத்தின் பூரணம்
இரண்டுமே ஒன்றாய்
நீ ...

காலையில் நீ
மாலையில் நீ
கண்ணுறங்கா துயரில் நீ
கண்கொள்ளா  கனவில் நீ

என் வசந்த காலமும் நீ
என் இலையுதிர் காலமும் நீ
கோடையில் இளநீர் நீ
குளிரில் தேநீர் நீ

குழந்தையின் சிரிப்பில் நீ
அன்னையின் அணைப்பில் நீ
ஏழையின் சந்தோஷம் நீ
பிரிவின் துயரம் நீ

உனக்குள் நான்?

என்னை அழவைத்த கேள்வியும் நீ.
கேள்வியின் பதிலும் நீ.

வா...
காதலின் உச்சத்தை
காமத்தின் எச்சத்தை
நம்முடைய மிச்சத்தை
உணரலாம் ...

புதன், பிப்ரவரி 17, 2010

எப்படி சொல்வேன் உனக்கு?ஏன்?.. எதற்கு?.. எப்படி?..
இவற்றை மீறி,
எந்த கருத்தும் என் கருத்துடன் ஒன்றியதில்லை ...
காதல் எப்படி நுழைந்தது?
விடை தெரியவில்லையே... நீ கேட்டபோது !
என் மனம் புரியவில்லையோ... நான் விழித்த போது !

எப்படி சொல்வேன் உனக்கு?

கள்ளமில்லா பிள்ளை சிரிப்பில்
உள்ளம் கொள்ளை போனதடி ...
வெட்டி பேசும் வெள்ளை பேச்சில்
என் கர்வம் தோற்று போனதடி ...
சிரிக்கும் உன் கன்னக் குழியில்
என் வீரம் மடிந்து போனதடி ...
இனிக்கும் உன் வளை ஓசையில்
என் இதயம் நின்று போனதடி ...

எப்படி சொல்வேன் உனக்கு?

அறிவின் சிகரமல்ல நீ ...
அழகின் உச்சமல்ல நீ ...
கவி பாடும் குயில் அல்ல நீ ...
தமிழ் போற்றும் குறளல்ல நீ ...
பிறகேன் நீ?
தெரியவில்லை ...

எப்படி சொல்வேன் உனக்கு?

சொல்லி மறுத்திருந்தால், கொன்றிருப்பேன் இதயத்தை
சொல்லாமல் மறுத்ததால், தேடுகின்றேன் காதலை
காத்திருந்தேன் இருபத்தேழு வருடங்கள்
காத்திருப்பேன் எழுநூறு ஜென்மங்கள்

எப்படி சொல்வேன் உனக்கு?

ஜாதியும் மதமும் காரணமா?
நான் ஆதாம் !
நீ ஏவாள் !
ஜாதி மதத்திற்கு மூத்தவர்கள் நாம் ...

எப்படி சொல்வேன் உனக்கு?

மனதில் காதலுடன், இதழில் நட்புடன்
பழக என்னால் முடியவில்லை ...
சொல்லாமல் இருந்திருந்தால்
தினமென் செவிக்குள் உன் சிரிப்பொலி ...
சொல்லி முடித்ததால்
தனிமையில் என் கவி ஒலி ...

எப்படி சொல்வேன் உனக்கு?

நானும் கோவலன் தான்
கண்ணகி உனை காணும் வரை ...
மனம் அறிந்திருக்கவில்லை
தேவதையை காண்பேன் என்று ...

எப்படி சொல்வேன் உனக்கு?

என் பூமி அழகானது ...
நண்பர்கள் அதிகமானார்கள் ...
சொந்தங்கள் இனித்தது ...
ஆனால், மனதின் ஓரமொரு வெற்றிடம் ..

எப்படி சொல்வேன் உனக்கு?

நாம் வீசி விளையாடிய பனிக்கட்டிகள் சொல்லட்டும் என் காதலை ...
நாம் ஏறி களைத்த மலைகள் சொல்லட்டும் என் காதலை ...
உனக்கு மிகவும் பிடித்த பயணங்கள்  சொல்லட்டும் என் காதலை ...
எதிரும் புதிருமாய் இருந்த தருணங்கள் சொல்லட்டும் என் காதலை ...

அதிகாலை பனித்துளிகள் உரக்க சொல்லட்டும் என் காதலை ... 
உன் முகம் காட்டும் கண்ணாடி இனிக்க சொல்லட்டும் என் காதலை ...
கர்வமழிந்து உன் கூந்தலேறும் ரோஜாக்கள் சொல்லட்டும் என் காதலை ...
என் மனதை திருடிய உன் வளையல்கள் சொல்லட்டும் என் காதலை ...

உன் காலடிக்காக காத்திருக்கும் செருப்புகள் சொல்லட்டும் என் காதலை ...
நீ பேருந்துக்கு காத்திருக்கும் நிமிடங்கள் சொல்லட்டும் என் காதலை ...
சுட்டெரிக்கும் சூரியனும் இதமாய் சொல்லட்டும் என் காதலை ...
சுகமாய் வீசும் தென்றல், உன் காதில் சொல்லட்டும் என் காதலை ...

நனைத்து விளையாடும் மழைச்சாரல்  சொல்லட்டும் என் காதலை ...
முதல் மழையின் மண்வாசம் சொல்லட்டும் என் காதலை ...
இன்று பூத்த காளான்கள்  சொல்லட்டும் என் காதலை ...
என்றும் வாழும் மாமரங்கள் சொல்லட்டும் என் காதலை ...

பறந்து திரியும் சிட்டுக்குருவிகள் சொல்லட்டும் என் காதலை ...
நீ கொஞ்சி விளையாடும் நாய்குட்டி சொல்லட்டும் என் காதலை ...
உன் மனதை திருடிய வெண்ணிலா சொல்லட்டும் என் காதலை ...
காதணியாக தவமிருக்கும் நட்சத்திரங்கள்  சொல்லட்டும் என் காதலை ...

நான் எப்படி சொல்வேன் உனக்கு என் காதலை ?...

ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

இது தான் காதலா?புகைத்ததுண்டு... புகைப்படத்துடன் பேசியதில்லை ...!
நகைத்ததுண்டு... நடுவீதியில் தனியாக இல்லை ...!
நடித்ததுண்டு ... நட்பினிடத்தில் என்றுமில்லை  ...!
வெடித்ததுண்டு... வெட்டுப்பட்டு வந்ததில்லை ...!

சிந்திக்காமல் சிரித்ததுண்டு ...
சிரித்துக்கொண்டே அழுததில்லை ...!

பேசிக்கொண்டே இருந்ததுண்டு ...
மௌனமொழி விளித்ததில்லை...!

விழித்துக்கொண்டே உறங்கியதுண்டு ...
உறங்கமுடியாமல் விழித்ததில்லை ...!

பார்க்காமல் பழகியதுண்டு ...
பழகியபின் தவிர்த்ததில்லை ...!

இது தான் காதலா?